பல்லவ நாட்டை இராஜவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எப்பொழுதும் எது நடந்தாலும் வருத்தப்படாமல் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரசரும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தவறுதலாகக் கத்தி அரசனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். அந்தசமயம் வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றார். இதைக் கேட்ட அரசன் நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். நீர் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாயா? என்று கோபத்துடன் கத்தினார்.
உடனே, காவலர்களிடம்! அமைச்சரை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டார். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்று கூறினார். நாட்கள் பல கடந்து சென்றது.
வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் ஒரு நாள் தனியாகக் காட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அரசன் அவர்களிடம் சிக்கிக் கொண்டார்.
அங்கு இருந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்து பார்த்தார். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவர்களை மட்டுமே பலியிட முடியும். இவனுக்கோ சுண்டு விரல் பாதியாக வெட்டுப்பட்டுள்ளது. அதனால் இவனை விட்டு விடுவோம் என்று கூறி அரசனை விடுவித்தார்கள்.
அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டார். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் கூறினார். சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை உணர்ந்தேன் என்றார்.
அதற்கு அமைச்சரும், அரசே என்னை நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னை சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னை சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.
தத்துவம் :
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக