Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

சீருடை பணியாளர்கள் தேர்வு முறைகேடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றசாட்டில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க அதிரடியாக உத்தரவு
  • தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியார்கள் தேர்விலும் முறைகேடு நடப்பதாக நீதிமன்றம் வேதனை
  • குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள் என சரமாரி கேள்வி
சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதன்பின்னர், நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு பிப்ரவரி 2ஆம் தேதி தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், வேலூரில் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 763 பேரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், முறைகேடு செய்து தேர்வானவர்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் அளிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியார்கள் தேர்விலும் முறைகேடு நடப்பதாகவும், இதனால் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் வேதனை தெரிவித்தார்.

அத்துடன், குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள், அவர்கள் அனைவரும் எப்படி ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற காவலர்கள் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்து விட்டதாகவும் தெரிவித்து, சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த மனு குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைதுள்ளது.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 50க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக