துரோணர், மன்னர் திருதிராஷ்டிரரிடம், மன்னா! தங்கள் மகன்கள் கல்வியை முடித்துவிட்டனர். அவர்கள் கற்ற கல்வியை தங்கள் முன்பு காண்பிக்க விரும்புகின்றனர். நீங்கள் அனுமதித்தால் அவர்கள் தங்கள் கலைகளை இங்கு காண்பிப்பார்கள் என்றார். திருதிராஷ்டிரன், துரோணரே! தாங்கள் எங்கள் மகனுக்கு சிறப்பான கல்வியை அளித்ததற்கு நன்றி. அவர்களின் திறமைகளை காண நாங்களும் ஆவலாக தான் இருக்கின்றோம். ஆனால் என்னால் தான் பார்க்க இயலாது என வருத்தத்துடன் கூறினார். இளவரசர்கள் தங்கள் போர்கருவிகளுடன் உள் நுழைந்தனர். மக்கள் அனைவரும் இளவரசர்களை கண்டு ஆரவாரம் செய்தனர். இளவரசர்கள் தங்கள் வாள்களையும் கேடயங்களையும் எடுத்துக் கொண்டு ஆயுதங்களுடன் போட்டியிட ஆயத்தமாக இருந்தனர்.
போட்டி தொடங்கியது. முதலில் துரியோதனனும், பீமனும் கையில் கதைகளை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். இருவரும் பலம் கொண்டு, தங்களின் சக்திகளை ஒன்றாக திரட்டி மோதினர். இரு யானைகள் போல் இருவரும் மோதிக் கொண்டனர். இருவரும் மோதிக் கொள்வதை விதுரர், மன்னர் திருதிராஷ்டிரருக்கும், காந்தாரிக்கும் எடுத்துரைத்துக் கொண்டு இருந்தார். இருவருமே தங்களது பலத்தை இழக்காமல் சமமாக சண்டையிட்டனர். இருவரில் வெல்ல போகிறவர்கள் யார் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் இருந்தனர்.
துரோணர், தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து, துரியோதனனையும், பீமனையும் தடுத்து நிறுத்து என்றார். துரியோதனனையும், பீமனையும் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தடுத்து நிறுத்தினான். துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, என் மகனிடம் வைத்திருக்கும் அன்பு போன்றே, அனைத்து ஆயுதங்களிலும் நிபுணன், இந்திரனின் மைந்தன், இந்திரனின் தம்பியான விஷ்ணுவிற்கு ஒப்பான அர்ஜூனனைப் பாருங்கள். அரங்கினுள் இருந்த மொத்த கூட்டமும் அர்ஜூனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இவன் குந்தியின் நேர்த்தியான மகன். பாண்டவர்களில் மூன்றாமவன். பெரும் பலம்வாய்ந்த இந்திரனின் மகன். குரு குலத்தைக் காக்க போகின்றவன் என்றார்.
திருதராஷ்டிரன், விதுரனிடம் ஏன் இப்படி திடீரென கூச்சல் எழுகிறது? என்று கேட்டார். விதுரர், பாண்டு மற்றும் குந்தியின் மகனான அர்ஜூனன், தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் பெரும் கூச்சல் எழுகிறது என்றார். இப்போட்டியை காண கர்ணனும் வந்திருந்தான். பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் திறமைகளை வெளிகாட்டினர். இறுதியாக அர்ஜூனனும், துரோதனனும் போட்டியிட்டனர். அர்ஜூனன் ஏவிய அம்பு, துரியோதனனை வீழ்த்தியது. இதில் துரியோதனன் தோல்வி அடைந்தான். இறுதியாக அர்ஜூனன் வெற்றி பெற்றான் என பீஷ்மர் அறிவித்தார்.
அதன் பிறகு அர்ஜூனனை வீழ்த்த எவரேனும் இருந்தால் இங்கு போட்டியிடலாம் எனக் கூறினார். அர்ஜுனனை எதிர்த்து போட்டியிட யாரும் அங்கு முன் வரவில்லை. அப்பொழுது கர்ணன், ஓர் அம்பை களத்தில் எய்தினான். அவ்வம்பில் பரசுராமரின் முத்திரை பதித்து இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பொழுது கர்ணன் அனைவர் முன்னிலையிலும் அங்கு வந்தான்.
கர்ணன் துரோணரை பார்த்து, தாங்கள் உங்கள் சீடர்களுக்கு நன்றாகவே கலைகளை கற்று கொடுத்துள்ளீர்கள். இவர்களை காட்டிலும் நான் மிக்க வலிமையானவன். அதனால் நான் அர்ஜூனை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்றான். பீஷ்மர், ஒரு சூத்திரனான உனக்கு எவ்வளவு தைரியம்? நீ அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுடன் போட்டியிட விரும்புகிறாயா? இங்கு போட்டியிட சூத்திரர்களுக்கு அழைப்பு விடவில்லை. சத்திரியர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டது என்றான்.
கர்ணன், பீஷ்மர் அவர்களே! நீங்கள் சத்திரியர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுத்ததாக கூறவில்லையே. அனைவர் மத்தியிலும் கூறியதால் நான் வந்துள்ளேன் என்றான். பீஷ்மர், மக்களைப் பார்த்து, அஸ்தினாபுரத்தின் மக்களே ஒரு சூத்திரன், சத்திரியர்களுடன் போரிடுவதா! எனக் கேட்டார். மக்கள் அனைவரும் ஒருமித்தமாக போட்டியிடக் கூடாது! போட்டியிடக் கூடாது! என கூச்சலிட்டனர். இதனால் கர்ணன் போட்டியில் தகுதியற்றவனாக நின்றான். இதைப்பார்த்து கொண்டியிருந்த துரியோதனன், பாண்டவர்களை பழிவாங்க எண்ணி, இந்த சூழ்நிலையை சாதகமாக்க நினைத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக