முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஞானி ஒருவரின் குடிசை இருந்தது. அந்த குடிசையின் அருகில் ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்ததால், சுண்டெலி மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி, முனிவரிடம் சென்றது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த சுண்டெலி, பூனையை கண்டால் எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியமா போகும் என்று மிகுந்த கவலையுடன் கூறியது.
ஞானியும் எலி கேட்டபடியே, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பூனையாக மாறிய எலி, ஞானி முன் வந்து நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்னப் பிரச்சனை என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பூனை, என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.
இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து மீண்டும் ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். அதைக்கேட்ட ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருப்பதுதான் சரி என்று கூறி, சுண்டெலியாகவே மாற்றி விட்டார் அந்த ஞானி.
தத்துவம் :
எந்தவொரு இடத்திலும் நமது பயத்தை வெளிக்காட்டாமல், செயல்பட்டால் எல்லா இடத்திலும் வெற்றியடையலாம். பயமானது உங்களின் வெற்றிக்கு தடைக்கல்லாக மட்டுமே இருக்கும். எனவே பயத்தை விட்டுவிட்டு செயல்பட்டால் நீங்களும் வாழ்க்கையில் வெற்றியடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக