அர்ஜூனனும், சுபத்ராவும் இந்திரபிரஸ்தம் சென்று அடைந்தனர். அர்ஜுனன், சுபத்ராவை திருமணம் செய்து கொள்ளும் செய்தி பலராமருக்கு எட்டியது. இதையறிந்து பலராமர் கடும் கோபம் கொண்டார். கண்ணன், பலராமரை சமாதானப்படுத்தி அர்ஜுனனையும், சுபத்ராவையும் காண இந்திரபிரஸ்தம் அழைத்துச் சென்றார். அங்கு சென்று அர்ஜுனனையும், சுபத்ராவையும் சந்தித்தனர். அதன் பின் வசிஷ்டர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களில் சுபத்ரா கர்ப்பமானாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டினர். இந்த சமயத்தில் அக்னி பகவான் தேவலோகத்தில் இருந்து அர்ஜூனனைப் பார்க்க வந்தார்.
அக்னி தேவன், கிருஷ்ணரிடமும், அர்ஜூனனிடமும் யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் ஒன்று இருக்கிறது. அந்த காண்டவ வனத்தை கைப்பற்றித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அர்ஜூனனும், கண்ணனும் சம்மதித்தனர். காண்டவ வனம் தனக்கு இரையாகப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் அக்னி பகவான் இருந்தான். காண்டவ வனத்தை கைப்பற்றுவதற்காக, அர்ஜூனனுக்கு எடுக்க எடுக்க அம்புகள் குறையாத இரண்டு அம்பறாத்துணிகள், காண்டீபம் என்ற பெயர் கொண்ட ஒரு வில், அனுமனின் சின்னம் பொறித்த கொடி, தேர், நான்கு வெள்ளைக் குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், ஒரு தேரோட்டியையும் வழங்கினான்.
கிருஷ்ணருக்கு ஏதுவாக அக்னி பகவான் சக்கரத்தை கொடுத்தான். கௌமோதகி என்கிற கதையையும் வழங்கினான். காண்டவ வனத்தினை தீயிட்டு அழிக்க கிருஷ்ணனும் அர்ஜுனனும் முடிவு செய்கிறார்கள். கிருஷ்ணரும், அர்ஜூனனும் காண்டவ வனத்துக்குள் அக்னியுடன் புகுந்தனர். அர்ஜூனன் அன்கி தேவனிடம், நீங்கள் காண்டவ வனத்தை எரியுங்கள். காண்டவ வனத்திற்கு சொந்தமான இந்திரன் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினான். காட்டில் அக்னி தன் ஜ்வாலைகளை படர விட்டவுடன் காடுகள் தீப்பற்றி எரிய தொடங்கின. அந்த காட்டில் இருந்த கொடிய விலங்குகள், அசுரர்கள், விஷ பாம்புகள் மடிந்தன.
காண்டவ வனம் எரிவதை பார்த்த இந்திரன் அக்னி மேல் மிகவும் கோபங்கொண்டு பெரும் மழையை பொழிவித்தான். அந்த மழை, சரங்களால் கூடாரம் போட்டு தடுக்கப்பட்டன. அதன் பின் தீயினால் காண்டவ வனம் எரிந்து சாம்பலாயின. ஆனால் அந்தக் காட்டில் வசித்துவந்த மயன் என்ற தேவசிற்பியும், சார்ங்கம் என்ற பறவை இனத்தின் நான்கு குஞ்சுகளும் மட்டும் தீயில் இருந்து தப்பினர். காண்டவ வனத்தை கைப்பற்றியதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார் யுதிஷ்டிரர். உயிர் தப்பி பிழைத்த அசுர சிற்பியான மயன் தர்மரை சந்தித்து, தன்னை கொல்லாமல் விட்டதற்காக அர்ஜூனனுக்கு தகுந்த கைமாறு செய்ய விரும்புகிறேன் என்று கூறினான்.
அதற்கு அர்ஜூனனும் கண்ணனும் செய்யும் உதவிக்கு கைமாறாக எதுவும் ஏற்பதில்லை என்றனர். மயன் யுதிஷ்டிரரை அணுகி தான் ஒரு அசுர சிற்பி என்றும், தன்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும் என்றும் அதை இந்திரபிரஸ்தத்தில் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டினான். அனுமதி கிடைத்தது. இமயமலையில் இருந்து எடுத்து வந்த பொன்னாலும், ரத்தினங்களாலும், மணிகளாலும் ஆன அரண்மனையை கட்டி முடிக்க பதினான்கு ஆண்டுகள் ஆயின. அந்த அரண்மனைச் சுவர்களும், தூண்களும் தங்கத்தால் அமைக்கப்பட்டன. அவற்றுள் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன. பளிங்குகற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
தடாகங்களில் தங்கத்தாமரை மலர்கள் சுற்றிலும் செய்குன்றுகளும் நீர்வீழ்ச்சிகளும் காணப்பட்டன. தரை இருக்குமிடம், நீரிருக்குமிடம் போலவும். நீர் இருக்குமிடம் தரை போலவும் அமைத்திருந்தான். அரண்மனையைப் பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர். அரண்மனையை பார்த்த நாரதர், மூவுலகிலும் இதற்கு இணையான மண்டபத்தை பார்க்கவில்லை எனக் கூறினார். அதன் பின் யுதிஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்யுமாறு கூறினார்.
கிருஷ்ணர், யுதிஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்ய சில தகுதிகள் வேண்டும். பிறநாட்டு மன்னர் அந்த மன்னனின் தலைமையை ஏற்கவேண்டும். அதனால் கிருஷ்ணன் யுதிஷ்டிரரிடம் மகத நாட்டு மன்னன் ஜராசந்தன், உன் தலைமையை ஏற்கமாட்டான். அவன் ஏற்கனவே 86 நாட்டு அரசர்களை வென்று சிறைப்படுத்தி வைத்திருக்கிறான். நீ அவனை வென்றால் சக்கரவர்த்தி ஆகலாம் என்றார். உடனே கிருஷ்ணர், ஜராசந்தனைக் கொல்ல தகுதி படைத்த ஒரே வீரன் பீமன் மட்டுமே எனக் கருதி, பீமனையும், அர்ஜூனனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மகத நாட்டு மன்னனான ஜராசந்தனிடம் போரிடச் சென்றார்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக