அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும்போது,
டெல்லியில் நடக்கும் வன்முறை உலக பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் தலைமை காவலர் ஒருவர் உள்பட ஏழு பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் அனிந்திய சட்டோபத்யாய் தனக்கு நேர்ந்த கொடுமையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
தனது பகிர்வில் குறிப்பிட்டு இருக்கும் அந்த பத்திரிக்கையாளர், ''மவுஜ்பூர் ரயில் நிலையத்திற்கு மதியம் 12.15 மணியளவில் சென்று இருந்தேன். அப்போது எனக்கு எதிராக வந்த இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எனது நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட்டார். இது எனது பணியை எளிதாக்கும் என்றார். நான் கேமரா அணிந்திருந்ததையும் பார்த்தார். பின்னரும், நீங்கள் இந்து, என்ன தீங்கு நடந்துவிட்டது'' என்று கேள்வி எழுப்பினார்.
இது நடந்து 15 நிமிட இடைவெளியில் அங்கிருந்த இருதரப்பினர் கற்களை வீசிக் கொண்டனர். அந்தக் கூட்டத்தில் மோடி, மோடி என்ற குரலும் ஒலித்தது. அப்போது ஒரு கட்டிடம் தீயில் எரிந்து கொண்டு இருந்தது. அந்தக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். அங்கிருக்கும் சிவா கோயில் அருகே என்னை சிலர் தடுத்து நிறுத்தினர். புகைப்படம் எடுக்கச் செல்ல இருப்பதாக கூறினேன். ஆனால், அவர்கள் என்னைப் பார்த்து, நீங்களும் இந்துதானே, ஏன் அங்கே போகிறீர்கள், இன்று இந்துக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்'' என்றனர்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்றேன். புகைப்படம் எடுக்க முயற்சித்தேன். மூங்கில் தடிகளுடன் வந்தவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். எனது கையில் இருந்த கேமராவை பிடுங்க முயற்சித்தனர். அப்போது என்னுடன் வந்திருந்த நிருபர் சாக்ஷி சந்த் எனக்கு முன்பாக வந்து அரணாக நின்று கொண்டார்.
பின்னரும் என்னை பின் தொடர்ந்து வந்தவர்கள் நான் இந்துவா? முஸ்லிமா? என்று அறிந்து கொள்ள எனது பேன்ட்டை கழற்றி காண்பிக்கச் சொன்னார்கள். இதையடுத்து அவர்களை கையெடுத்து கும்பிட்டு, போட்டோகிராபர் என்றும், விட்டு விடுமாறும் கேட்டுக் கொண்டேன். என்னை மிரட்டி அனுப்பி விட்டனர்.
வெளியே வந்து எனது வாகனத்தை தேடினேன். அங்கே எனது வாகனம் இல்லை. பின்னர் சில நூறு அடிகள் தூரம் நடந்து சென்று ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன். அப்போது ஆட்டோவில் இருந்த அடையாளத்தை வைத்து எங்களை ஒரு கும்பல் வழிமறித்தனர். ஆட்டோவில் இருந்து வெளியே வருமாறு கூறினர். சட்டை காலரை பிடித்து வெளியே இழுத்தனர். அவர்களிடம் மீண்டும் 'நான் ஒரு பத்திரிக்கையாளர்' என்று கூறி, விட்டு விடுமாறும், ஆட்டோ ஓட்டுநர் அப்பாவி என்றும் கூறினேன்.
பின்னர் எங்களை விட்டனர். அலுவலகம் சென்றடைந்தேன். அப்போது, 'எனது வாழ்விலேயே இப்படி மிரட்டலாக நீ என்ன மதம் என்று யாரும் கேட்டது இல்லை' என்று கூறிச் சென்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக