தமிழ்நாட்டிலே மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அனைவராலும் போற்றபடும் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அருள்பாலிக்கிறார்.
தல குறிப்பு :
திருக்கோவில் பெயர் : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்
காலம் : சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர்
இறைவன் பெயர் : தாண்டேஸ்வரர்
இறைவியின் பெயர் : தாண்டேஸ்வரி (என்னும்) அங்காளம்மன்
தலவிருட்சகம் : வில்வம், வாகை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
தல வரலாறு :
வல்லாள கண்டன் என்ற அரக்கன் பரமசிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்து பெண்ணைத் தவிர வேரெவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது. நினைத்த வடிவம் எடுக்கும் ஆற்றல் வேண்டும் என்கிற வரங்களைக் கோரி வரம் பெற்றவுடன் ஏற்பட்ட அகந்தையால், இந்திரனையும் திக்பாலர்களையும் வென்றான்.
பூவுலகிலுள்ள கோவில்களில் உள்ள விக்கிரகங்களை அகற்றி தன் சிலையை நிறுவி அதற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்த ஆணையிட்டான். பணியாதவர்கள் அவனது வாளுக்கு இரையாயினர். யாக அவிர்ப்பாகத்தையும் தானே பெற்றுக் கொண்டான். தேவர்கள் அவனுக்குப் பணி புரிந்தனர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். திருமால் தேவர்களே! சிவபெருமான் கோப ஆவேசத்தில் பிரம்மாவின் சிரசை கொய்து சிவன் பிரமதோஷம் கொண்டான். அது முதல், பேயன் என்றாகி சுடுகாடு தோறும் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக தண்டகாரண்யம் என்ற மேல்மலையனூருக்கு வருகிறான்.
பிரம்ம கபாலத்தோடு சிவபெருமான் அலைகிறார். அகிலாண்டேஸ்வரி அதற்கு நேரே நின்று அவல் பொரியை இறைத்தால் அதை ஏற்க கபாலம் கீழிறங்கும். போய் உமையிடம் சொல்வோம். அவளால் தான் அரக்கன் மடிவான் என்றார்.
கைலாயம் சென்று அன்னையிடம் பிரம்ம கபாலம் இறங்கும் வழியைக் கூற, அம்பிகை கணவனைத் தேடி பூலோகம் வந்து, மேல்மலையனூர் மயானத்தில் சிவபெருமானைக் கண்டு அவல் பொரியை அள்ளிச் சூறையிட்டாள்.
சிவன் கைக் கபாலம் கீழே இறங்கி பொரியை ஏற்றது. சரஸ்வதிக்குச் சினம் பொங்க சிவனின் தண்டனையைக் குறைத்தவளே! மயான பூமிதான் உன் இருப்பிடம்! மயானக் கரிதான் உனக்கு அலங்காரம்! இரத்த வெறி கொண்டு அகோர ரூபமாக எரியும் பிணங்களையே உணவாகக் கொண்டு வாழக்கடவது என சாபமிட்டுவிட்டாள்..!
சாபம் பெற்ற பர்வதவர்த்தனி விரித்த சடையும், மூன்று கண்களும், உயர்ந்த எடுப்பான பல்லும், இருண்ட மேனியும் கொண்டு சுடுகாட்டில் சுற்றித்திரிந்தாள்.
வல்லாள கண்டன் ஏற்கனவே கயிலையில் பார்வதியைப் பார்த்து மயங்கியிருந்தான். மலையனூரில் சக்தி சிவனைப் பிரிந்து வாழ்வதாகக் கேள்விப்பட்டு சிவனைப் போல் வடிவெடுத்து காளியாக வீற்றிருக்கும் அம்பிகையை நெருங்கிய போது, தேவி கோபக்கனல் தெரிக்க கத்தி, கபாலம், பிரம்பு, அம்பு, வில், கதை, வீச்சரிவாள், சூலம், கேடயம், சங்கு இவற்றுடன் அவனோடு போர் புரிந்தாள்.
முடிவில் ஆயுதங்களை வீசி எறிந்து தன் கூரிய நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்துப் பெருகிய உதிரத்தை உறிஞ்சி குடலை மாலையாக அணிந்து நர்த்தனமிட்ட அன்னையை தங்கள் துயர் தீர்த்த தேவியாக பூமாரி பொழிந்து தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதித்தனர்.
பிரார்தனை :
மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை தோறும் நடை பெறும் அர்த்த ஜாம பூஜையைக் காண்பதால் வாழ்வில் துன்பங்களும், பிரச்சனைகளும் தீரும்.
பேய், பிசாசு பிடித்தவர்களும், பில்லி, சூன்யத்தால் அவதிப்படுவோரும், புத்திர பாக்கியம் வேண்டுவோரும், திருமணமாகாதவர்களும், தீராத நோய்வாய்ப்பட்டோரும் ஆலயத்தில் தங்கி எல்லா தரிசனமும் கண்டால் குறைகள் விரைவில் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக