Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2020

திரௌபதியின் பிறப்பு...!

 முனிவர்கள் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாக அக்னியில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். தன் மகளை பார்த்த துருபதன் இவள் துரோணரை அழிக்கப் பிறந்தவள் எனக் கூறி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பாஞ்சால நாட்டின் அரசியான இவள் இன்றுமுதல் திரௌபதி என அழைக்கப்படுவாள் என்றார். யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டாள். இவளுடன் திருஷ்டத்யும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். துருபதன், திரௌபதியிடம் உனக்கு ஏற்ற மணாளன் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தான். உனக்கு நான் அவனையே திருமணம் செய்து வைக்கிறேன் என்றார்.

 இவ்வாறு துருபதன் பாஞ்சாலிடம் அடிக்கடி கூறியதால் பாஞ்சாலிக்கு அர்ஜுனன் மீது இனம்புரியாத காதல் உண்டாயிற்று. அர்ஜூனன் இவ்வாறு தான் இருப்பான் என்பதை தெரியாமல் திரௌபதி, அர்ஜூனன் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தாள். இவ்வாறு நாட்கள் பல கடந்தது. அஸ்தினாபுரத்தில் மக்களின் நாட்டம் பாண்டவர்கள் மேல் அதிகம் இருந்தது. பாண்டவர்களின் செயல்களை மக்கள் புகழ்ந்து பாராட்டினர். இது துரியோதனனின் செவிகளில் விழுந்தது. இதை அறிந்த துரியோதனன், ஒரு நாள் இவர்கள் நாட்டின் அரசனாகி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். திருதிராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் செயல்களை மக்கள் பாராட்டுவதை நினைத்து பொறாமை உண்டானது.

 ஒருவேளை தன் குழந்தைகளுக்கு நாட்டின் அரசனாகும் உரிமை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தான். துரியோதனன், தந்தை திருதிராஷ்டிரனை பார்க்கச் சென்றான். தந்தையே! நீங்கள் யுதிஷ்டிரனை நாட்டின் இளவரசனாக முடிசூட்டி தவறு செய்து விட்டீர்கள். மக்கள் அனைவரின் பார்வையும் பாண்டவர்கள் மீது தான் இருக்கிறது. இதனால் பாண்டவர்கள் நாட்டின் அரசனாக முயல்கின்றனர். துரோணர், கிருபாச்சாரியார், விதுரர் முதலானோர் பாண்டவர்கள் பக்கம் தான் இருக்கின்றார்கள். உங்களுக்கு எங்கள் மீது பாசமும், அக்கறையும் இல்லை என்று நினைக்கின்றேன். அதனால் தான் தாங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள் என்றான்.

 அப்பொழுது திருதிராஷ்டிரன், மகனே! நீ இவ்வாறு பேசுதல் கூடாது. நீ பாண்டவர்கள் மேல் வைத்துள்ள இந்த கோபத்தைக் குறைத்துக் கொள். எனக்கு கண் பார்வை இல்லாததால் பாண்டு, அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்தான். அவன் இறந்த பிறகு அந்த பொறுப்பை நான் கையில் எடுத்துக் கொண்டேன். பாண்டு அரசனாக இருந்ததால் அவனின் புதல்வர்கள் தான் இளவரசனாக வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்கு முடிசூட்டினேன் என்றான். துரியோதனன், தந்தையே! எனக்கு அது எல்லாம் தெரியாது. பாண்டவர்கள் இங்கு இருக்கும் வரை என்னால் அஸ்தினாபுரத்தின் அரசனாக முடியாது.

 அவர்கள் இங்கு இருந்து சென்றுவிட்டால் மக்களின் பார்வையை நம் பக்கம் எளிதில் திருப்பி விடலாம். அதனால் பாண்டவர்களை வாரணாவதம் அனுப்புமாறு கேட்டான். துரியோதனனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், துரியோதனனின் மேல் கொண்ட அன்பால் திருதிராஷ்டிரன் இதற்கு சம்மதம் தெரிவித்தான். அதன் பிறகு துரியோதனன் சற்று மெதுவாக, தந்தையே! பாண்டவர்கள் வாரணாவதம் போய் திரும்பி வந்தாலும் நாட்டை ஆள முயற்சிப்பார்கள். அதனால் பாண்டவர்களை அங்கு கொன்று விடுவோம் என்றான். திருதிராஷ்டிரன் தன் குழந்தைகளின் நலன் கருதி அதற்கும் சம்மதம் தெரிவித்தான். பிறகு தன் மந்திரியான புரோசனனை அழைத்து வாரணாவத நகரத்தில் அரக்கால் ஆன மாளிகை கட்டுமாறு கூறினான்.

 சில நாட்கள் நீங்கள் பாண்டவர்களுடன் தங்கி அவர்களுக்கு அரச நீதிகளை கற்று தருவது போல் நடித்து, அம்மாளிகைக்கு தீவைத்து பாண்டவர்களை கொன்று விடுங்கள் என்றான். திருதிராஷ்டிரன் கூறியவாறே அரக்கால் ஆன மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. திருதிராஷ்டிரன், பாண்டவர்களை அழைத்து, நீங்கள் அனைவரும் அரச நீதிகளை கற்று கொள்ள வேண்டி உள்ளதால் வாரணாவதம் நகரத்தில் உங்களுக்காக தனி மாளிகை அமைத்துள்ளேன். உங்களுக்கு அரசு நீதிகளை உபதேசிக்க எனது மந்திரி புரோசனன் உங்களுடன் வருவார் என்றார். பாண்டவர்களும், தங்களுக்கு அரசு நீதிகளை கற்று கொடுக்க தான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்து சம்மதம் தெரிவித்தனர். துரியோதனனின் சதி திட்டம் விதுரருக்கு தெரிய வந்ததால், யுதிஷ்டிரை தனியாக அழைத்து காடு தீப்பற்றி எரியும் போது எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும் என்றார். அதற்கான அர்த்தம் யுதிஷ்டிரருக்கு புரியாமல் இருந்தது.

அதன் பிறகு தன் தாய் குந்தியை அழைத்துக் கொண்டு வாரணாவத நகரத்திற்கு சென்றனர். பாண்டவர்களுக்காக மாளிகை மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்தது. யுதிஷ்டிரர் அம்மாளிகையை சுற்றி பார்த்தார். தன் திறமையால் மாளிகை அரக்காலும், மெழுகாலும் கட்டப்பட்டிருப்பதை அறிந்தார். உடனே தன் தம்பிகளை அழைத்து, நம்மை கொல்ல இங்கு சதி திட்டம் நடந்திருக்கிறது. அதனால் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புரோசனனிடம், நமக்கு எதுவும் தெரியாதது போல் இருக்க வேண்டும் என்றார். அப்பொழுது தான் யுதிஷ்டிரருக்கு விதுரர் கூறியது ஞாபகம் வந்தது. இதற்கு ஏதேனும் வழி இருக்க கூடும் என மாளிகையை நன்கு சுற்றி பார்த்தார். அப்பொழுது ஒரு தூணின் மறைவில் சுரங்க பாதை இருப்பதை கண்டறிந்தார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக