சாபம் பெறுதல் :
யானையின் இச்செயலை கண்டதும் அதுவரை பொறுமை காத்துக்கொண்டிருந்த துர்வாசக முனிவர் மிகுந்த ஆவேசமும், கட்டுக்கடங்காத கோபமும் அடைந்தார். தேவேந்திரா! நான் உனக்கு அளித்தது சாதாரண மாலை அன்று. உலக நாயகியின் கண்டத்திலிருந்த கிடைக்கப்பெற்ற அரும்பெரும் மாலையை நான் உனக்கு அளித்தேன். ஆனால், நீயோ அதன் அருமை தெரியாமல் அதை அலட்சியப்படுத்தினாய். உனது வாகனமோ அதை அவமதிப்பதையும் கண்டு நீ எச்செயலையும் புரியாமல் நின்று கொண்டிருக்கின்றாய் என்று துர்வாசக முனிவர் சினத்துடன் கூறினார்.
துர்வாசக முனிவரின் இந்த சினம் கொண்ட பேச்சு தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கு தன் எதிரில் நிற்பவர் யார்? என்று உணர்த்தியது. அதிகாரம் கொண்ட சிந்தனையால் ஆணவம் தலைக்கேறிவிட்டது என்று கூறி மிகுந்த கோபத்துடன் தேவேந்திரனைப் பார்த்து, இனி நீர் கொண்ட ஆணவத்தால் உன்னிடம் இருக்கும் செல்வங்கள் யாவற்றையும், மேலும் உன் பதவியான தேவ பதவியையும் இழப்பாய் என்று சாபமிட்டு அவ்விடத்தை விட்டுச்சென்றார்.
பதவி பறிபோதல் :
என்ன நிகழ்ந்தது என்று அறிவதற்குள் துர்வாசக முனிவர் இட்ட சாபத்தால் தேவலோகமே வெளிச்சமின்றி இருட்டில் அகப்பட்டது. தேவலோகத்தில் இருந்த அனைத்து தேவர்களுக்கும் தேவராஜன் பெற்ற சாபத்தால் அவர்களின் சக்தியும், வலிமையும் குறையத் தொடங்கியது. துர்வாசக முனிவர் இட்ட சாபத்தால் தேவர்கள் அனைவரும் பலமிழந்தனர். சொர்க்கலோகம் பலம் இல்லாதவர்கள் கரங்களில் இருப்பதை உணர்ந்த அசுரர்கள் தேவர்களை எளிமையாக வெற்றிக்கொள்ள முடியும் என தொடர்ந்து போர் தொடுக்கத் தொடங்கினர்.
அவர்கள் எண்ணிய விதத்திலேயே தேவர்களின் பலமும் குறைந்து அவர்களின் பலவீனம் அதிகரிக்க தொடங்கியது. அதாவது தேவர்களின் பலத்தைக் காட்டிலும், அசுரர்கள் அதிக பலத்துடன் செயல்பட தொடங்கினர். அங்கு நடைபெற்ற போரில் தேவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். தேவேந்திரனின் பதவி பறிக்கப்பட்டு தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களையும் தேவலோகத்திலிருந்து அசுரர்கள் விரட்டி அடித்தனர். தேவலோகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தேவேந்திரன் உட்பட மற்ற தேவர்கள் அனைவரும் சத்தியலோகம் சென்று படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை சந்தித்து தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நீக்க ஏதாவது மார்க்கம் உண்டா? என்றும், அதற்கான வழிகளை கூறுமாறும் வேண்டி நின்றனர்.
மார்க்கம் பிறத்தல் :
தேவர்களின் இன்னல்களை அறிந்த பிரம்ம தேவர், துர்வாசக முனிவர் இட்ட சாபம் நீங்கவும், தேவர்களின் இன்னல்கள் நீங்கவும் விமோசனம் அளிக்கக்கூடியவர் தேவர்களின் காப்பாளரான திருமாலே என்பதை உணர்ந்து, தேவர்களை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் அழைத்துச் சென்றார். அவர்களுடன் நாரதரும் சென்றார்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால், தேவர்களுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவும், அவர்கள் என்றும் அழிவில்லாமல் நிலையுடன் இருக்கவும், அசுரர்களால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும், பூவுலக மக்களுக்கு நன்மை அளிக்கவும், என்றும் மரணம் அழிக்காத இளமையுடன் வாழ சக்தி அளிக்கக்கூடிய அமிர்தத்தை எடுத்து பருகினால் அனைவரும் சாப விமோசனம் பெற்று சுபிட்சம் உண்டாகும் என்று கூறினார்.
தேவர்கள் அனைவரும் திருமாலின் இந்த கூற்றிலிருந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அசுரர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விரைவில் நீங்கிவிடும் என்று மனதளவில் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர்.
கலகங்களை செய்து நன்மைகளை வெளிப்படுத்தும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு மனதில் ஐயம் உண்டாயிற்று. எனவே தனது ஐயத்தை திருமாலிடம் கேட்டார். அதாவது எங்களைக் காத்தருளும் பரந்தாமனே!! பாற்கடலை கடைய நாங்கள் யாது செய்ய வேண்டும்? என்றும், எவருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் தாங்கள் கூற வேண்டும் என்றும் திருமாலிடம் பணிந்து நின்றார்.
தெளிவு பிறத்தல் :
மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைய பற்பல அரிய பொருட்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அமிர்தம் வெளிவரும். ஆனால், திருப்பாற்கடலை தேவர்களை கொண்டு மட்டும் கடைந்து அமிர்தத்தை எடுக்க இயலாது என்றும், தேவர்களின் சகோதரர்களும் (அசுரர்களும்) இதில் பங்கேற்று கடைந்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் அமிர்தத்தை எடுக்க இயலும் என்று திருமால் கூறினார்.
திருமாலின் கூற்று தேவர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தையும், ஒருவிதமான பதற்றமான முகபாவனைகளையும் தோற்றுவித்தது. ஏனெனில், தங்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களிடம் உதவி கேட்பதா? என்று அவர்கள் எண்ணத் தொடங்கினர்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக