பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். இவர்கள் சென்ற வனத்தில் பல முனிவர்கள் இருந்தனர். பாண்டவர்கள் முனிவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளை பெற்றனர். தவுமியர் என்ற முனிவர் யுதிஷ்டிரரை அழைத்து அவருக்கு ஆதித்த மந்திரத்தை உபதேசம் செய்தார். தருமரே, கழுத்தளவு நீரில் நின்று இம்மந்திரத்தை பக்தியுடன் ஜெபித்து வா. சூரியனுடைய அனுக்கிரகம் கிட்டும் என்றார். தருமரும் அவ்வாறே கழுத்தளவு நீரில் நின்று சூரியனைக் குறித்துப் பக்தியுடன் ஜெபம் செய்தார். சூரியன் அவர் ஜெபத்தால் மகிழ்ந்து அவர் முன்பு தோன்றி ஒரு பாத்திரத்தை அளித்தான். யுதிஷ்டிரா! இதைப் பெற்றுக் கொள். இது ஓர் அட்சய பாத்திரம். எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு தரும்.
பதினான்காம் ஆண்டில் நீங்கள் உங்கள் அரசை திரும்ப அடைவீர்கள் என்று அனுக்கிரகித்து மறைந்தார். தருமர் அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து திரௌபதியிடம் கொடுத்தார். பக்தியோடு அதைப் பெற்றுக் கொண்ட திரரௌபதி அதில் நால்வகை உணவுகளை எடுத்து அனைவருக்கும் பரிமாறினாள். எடுக்க எடுக்கக் குறையாது, பாத்திரத்தில் உணவு நிறைந்திருந்தது. முடிவில் யுதிஷ்டிரர் உணவு அருந்திய பின் திரரௌபதி உணவு சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டதும் அந்தப் பாத்திரம் வற்றிவிட்டது. அதுமுதல் பாண்டவர்கள் சூரியனால் அளிக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கொண்டு நாள்தோறும் அனைவருக்கும் உணவு அளித்து தாங்களும் சாப்பிட்டு வந்தனர். இவ்வாறு பாண்டவர்கள் வனத்தில் நாட்களை கழித்தனர்.
பாண்டவர்கள் வனம் சென்றபின் திருதிராஷ்டிரனின் மனம் குற்ற உணர்வினால் வாடியது. விதுரரை அழைத்து, விதுரரே! இப்பொழுது அஸ்தினாபுரத்தின் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது எனக் கேட்டார். விதுரர், அரசே! மக்கள் அனைவரும் துன்பத்தினால் வருந்திக் கொண்டு இருக்கின்றனர். பாண்டவர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொள்ளலாம். இல்லையேல் பாரதப்போர் நிச்சயம் நிகழும். அதில் துரியோதனன் முதலானோர் அழிந்து போவர் எனக் கூறினார். இதைக்கேட்டு கோபம் கொண்ட திருதிராஷ்டிரன், உனக்கு பாண்டவர்கள் மேல் அன்பு இருந்தால் நீயும் அவர்களுடன் வனத்திற்கு சென்றுவிடு. இங்கு இருக்க வேண்டாம் என்றான். அதன்பிறகு விதுரர் அங்கிருந்து பாண்டவர்களைத் தேடி வனம் சென்றார்.
விதுரர் வனம் சென்றதை அறிந்த பீஷ்மர் மிகவும் கோபம் கொண்டார். திருதிராஷ்டிரனிடம், திருராஷ்டிரா! உன் மதி என்ன மங்கிவிட்டதா? நீ விதுரரை வனத்திற்கு அனுப்பி மிகவும் தவறு செய்துவிட்டாய். நீ விதுரரை வனத்திற்கு அனுப்பவில்லை. அஸ்தினாபுரத்தின் அறத்தையே அனுப்பிவிட்டாய் என கோபம் கொண்டார். பீஷ்மரின் கோபத்தைக் கண்டு பயந்த திருதிராஷ்டிரன், விதுரரை திரும்பவும் அரண்மனைக்கு வர அழைப்பு விடுத்தார். விதுரரும் அரண்மனை திரும்பினார். விதுரர் அரண்மனை திரும்பியதை அறிந்த துரியோதனன், சமதானம் பேச முயற்சி மேற்கொள்கிறாரோ என சந்தேகித்தான். உடனே திருதிராஷ்டிரனிடம் சென்று, தந்தையே! பாண்டவர்கள் திரும்பி வந்தால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கூறினான்.
துரியோதனன் சென்ற பிறகு வியாசர் திருதிராஷ்டிரன் முன் தோன்றினார். திருதிராஷ்டிரா! நீ உன் புதல்வனின் தீஞ்செயல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய அழிவை சந்திக்கக்கூடும் என எச்சரித்துவிட்டு மறைந்தார். பாண்டவர்கள் வனத்தில் மைத்ரேய மாமுனிவரை சந்தித்தனர். முனிவர் பாண்டவர்களுக்கு சூதாட்டத்தால் ஏற்பட்ட நிலையை உணர்ந்தார். அரண்மனையில் பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர் இருந்தும் இத்தகைய கொடுமை நடந்ததை எண்ணி வியப்படைந்தார். பாண்டவர்களுக்காக மிகவும் மனம் வருந்தினார்.
அதன் பின் மைத்ரேய முனிவர் அஸ்தினாபுரத்தின் அரண்மனையை நோக்கிச் சென்றார். அரண்மனையில் திருதிராஷ்டிரன் முனிவரை சகல மரியாதையுடன் வரவேற்றான். முனிவர், நான் வனத்தில் இருந்து திரும்பி வரும்பொழுது பாண்டவர்களை சந்தித்தேன். அவர்களுக்கு சூதால் ஏற்பட்ட கொடுமையை உணர்ந்தேன். அரண்மனையில் பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர் இருந்தும் இத்தகைய கொடுஞ்செயல் நடைபெறலாமா? துரியோதனனை பார்த்து, துரியோதனா! நீ பாண்டவர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ளாதே. அவர்கள் தர்மத்தின்படி நடப்பவர்கள். மிகவும் பலம் பொருந்தியவர்கள். உன் கோபத்தினால் நீ அழிந்துவிடாதே என எச்சரித்தார்.
துரியோதனன் முனிவர் கூறும் எந்த சொற்களையும் தன் செவிகளில் வாங்கிக் கொள்ளவில்லை. பூமியை தேய்த்துக் கொண்டு கேட்க விருப்பம் அற்றவனாய் அமர்ந்திருந்தான். துரியோதனின் இச்செயல்களை கண்டு கோபம் கொண்டார் முனிவர். துரியோதனா! நீ பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ளவில்லையென்றால் நிச்சயம் பீமனால் நீ மாள்வாய் என சபித்தார். பீமன் எவ்வாறு கிர்மீரனை வதம் செய்தானோ அவ்வாறே உன்னையும் வதம் செய்வான் என்றார். இச்சாபத்தை கேட்ட திருதிராஷ்டிரன், முனிவரை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் முனிவர், துரியோதனன் பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ளவில்லையென்றால் நிச்சயம் இவன் பீமனால் மாள்வான் எனக் கூறினார்.
பிறகு திருதிராஷ்டிரன், கிர்மீரனை வதத்தை எனக்கு தாங்கள் கூறுங்கள் எனக் கேட்டார். முனிவர், கிர்மீரனின் வதத்தை விதுரர் உங்களுக்கு கூறுவார் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக