ஒரு ஊரில் சுந்தரம் என்ற ஒரு விற்பனை பிரதிநிதி இருந்தார். அவர் தன்னிடம் இருக்கும் புதிய தேயிலையை அனைத்துக் கடைகளிலும் விற்க வேண்டும் என்று மிகவும் கடுமையாக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவர் இருக்கும் பகுதியில் அவருடைய தேயிலை அவ்வளவு பிரபலமானதாக இல்லை.
இருப்பினும், சுந்தரத்தின் வற்புறுத்தலுக்காக ஒரு சிலர் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை வாங்கி தங்கள் கடையில் வைத்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு கடைக்காரர் மட்டும் தொடர்ந்து சுந்தரம் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவருடைய அந்த தேயிலையை வாங்க முடியாது என்று கூறி மறுத்து வந்தார்.
சுந்தரம் இவரை எப்படி நம்முடைய தேயிலையை வாங்க வைப்பது என்பது பற்றி யோசித்தார். ஒரு யோசனை வந்தது. உடனே தன் மகளை அழைத்து, அந்தக் கடைக்குச் சென்று அந்த தேயிலையின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி வரச் சொன்னார்.
இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன், மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்தக் கடையை நோக்கி அனுப்பிக் கொண்டே இருந்தார். வேறு வழியின்றி அந்தக் கடைகாரரும், சுந்தரத்திடம் இருந்த அந்தத் தேயிலைப் பொட்டலங்களைத் தனது கடையில் வாங்கி வைக்கத் தொடங்கினார்.
அவருடைய கடையிலும் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை பார்த்த சிலர், புதிதாக இருக்கிறதே என்று அதை வாங்க முன் வந்தனர். தேயிலைப் பொட்டலங்கள் நன்றாக மக்கள் மத்தியில் விற்பனையானதால், சுந்தரமும், அந்தத் தேயிலையுடன் இலவசங்கள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அந்தத் தேயிலையை மக்கள் மனதில் பதிய வைத்தார்.
நாளடைவில் அந்த தேயிலையில் தயாரிக்கும் தேநீர்தான் சுவையானது என்று பரவலாக மக்களுக்குத் தெரியத் தொடங்கியது. இரண்டே ஆண்டுகளில் போட்டிக்கான தேயிலைகளைப் பின்னுக்குத் தள்ளி புதிய தேயிலையை வெற்றி பெற வைத்தார்.
தத்துவம் :
ஒரு செயலை செய்யும்போது முதலில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றாலும் அதை வெற்றி பெற வைப்பதற்கு இவரை மாதிரி யோசித்தால் நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக