சனி, 7 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 130


சிவபெருமானை காணச் செல்லுதல் :

விஷத்தினால் திருமால் அடைந்த இன்னல்களை கண்ட அனைத்து தேவர்களும், அசுரர்களும் பிரம்ம தேவர் மற்றும் திருமாலின் ஆணைப்படி கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் காண விரைந்து சென்றனர். விஷமானது அவர்களை பின் தொடர்ந்து வந்தமையால் அவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் விரைந்து கைலாய மலையை அடைந்தனர்.

கைலாய மலைக்கு சென்ற தேவர்கள் மற்றும் அசுரர்கள் என அனைவரும் நந்திதேவரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து தாங்கள் உடனடியாக சர்வேஸ்வரரை காணவேண்டும் என்று கூறினார்கள். பின்பு, நந்திதேவரும் அவர்களை சர்வேஸ்வரர் வீற்றிருக்கும் இடத்திற்கு காண அழைத்துச் சென்றார்.

சிவபெருமானிடம் வேண்டுதல் :

சிவபெருமானைக் கண்ட அனைவரும் எம்பெருமானை வணங்கி நிகழ்ந்தவற்றையும், ஆலகால விஷத்தால் உருவான சூழலையும் எடுத்துரைத்து தங்களை இவ்வித சூழலில் இருந்து காக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

சிவபெருமானும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று உலக மக்களின் நன்மைக்காகவும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் நல்வாழ்க்கைக்காகவும் அருகில் நின்றிருந்த சுந்தரரை நோக்கி, திருப்பாற்கடலில் சூழ்ந்திருக்கும் ஆலகால விஷத்தினை அகற்றி அவ்விடம் விட்டு இவ்விடம் கொண்டு வருவாயாக என்று கூறினார்.

ஆலகாலம் வருதல் :

சிவபெருமானின் ஆணைக்கிணங்கி சுந்தரர், மாலைப் பொழுதில் திருப்பாற்கடலை அடைந்து நமசிவாய என முன்மொழிய அங்கு சூழ்ந்திருந்த அனைத்து விஷங்களும் சிறு நாவற்கனி போன்ற வடிவத்தில் அடங்கியது. சுந்தரரும் அவ்விஷத்தினை சிவபெருமானிடம் கொடுக்க கைலாயம் வந்து கொண்டிருந்தார்.

கைலாயம் அடைந்து எம்பெருமானிடம் ஆலகால விஷத்தினை கொடுக்க முற்படுகையில் தேவர்கள் அனைவரும் ஆச்சரியம் கொண்டனர். ஏனெனில் தேவர்கள், அசுரர்கள் என அனைவரையும் விரட்டி வந்த ஆலகால(ஆலாலம்) விஷம் திருப்பாற்கடல் முழுவதும் சூழ்ந்திருந்ததையும் அவர்கள் அறிந்தனர். அங்கு சூழ்ந்திருந்த அனைத்து விஷத்தையும் ஒரு சிறு நாவற்கனி வடிவில் கண்ட அனைவரும் மிகுந்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கொண்டனர்.

ஆலகாலம் அழிதல் :

சுந்தரர் கொண்டு வந்திருந்த ஆலகால விஷத்தை வாங்கிய சிவபெருமான் தேவ மற்றும் அசுரர்களின் நன்மைக்காகவும், உலக மக்களின் சுபிட்சத்திற்காகவும் ஆலகால விஷயத்தை அமுதம் போன்று உண்டருளினார். அதைக் கண்ட பார்வதிதேவி திகைத்து நின்றார். சிவபெருமான் அனைத்து உயிர்களிலும் இருப்பவர். சிவபெருமான் உண்ட விஷத்தினால் ஏற்படும் விளைவுகளை மனதில் கொண்டு, சிவபெருமான் உண்ட விஷத்தினை கண்டத்தில் இருந்து கீழே இறங்காமல் இறுகப்பிடித்து தடுத்து நிறுத்தினார்.

ஆலகால விஷமானது கண்டத்தில் முழுவதுமாக உறைந்து போனது. ஆலகால விஷத்தின் சக்தியினால் சிவபெருமானின் உருவமானது கருமையாக மாறியது. விஷமானது கண்டத்தில் உறைந்தமையால் கண்ட பகுதியானது நீலநிறமாக மாறியது. அக்கணத்தில் இருந்து சிவபெருமான் திருநீலகண்டர் மற்றும் நீலகண்டர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்பெற்றார்.

பிரதோஷ காலம் :

சிவபெருமான், சுந்தரர் கொண்டு வந்த ஆலகால விஷத்தினை சனிக்கிழமையன்று, தேய்பிறை திரயோதசி திதியில் இவ்வுலக ஜீவராசிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாலைப்பொழுதிலே உண்டு அவர்களின் துன்பங்களை போக்கி அருளினார். சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட நேரமே பிரதோஷ நேரமாக கடைபிடிக்கப்பட்டு இன்றளவும் சிவபெருமானையும், நந்திதேவரையும் மாலைப்பொழுதான 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலத்தில் வழிபட்டு வருகின்றோம். அதுமட்டுமின்றி சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு :

பிரதோஷ நேரம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் சிவபெருமானை சூழ்ந்து வணங்கி ஆசி பெற்ற நேரமாகும். பிரதோஷ நேரத்தில் எவ்விதம் சிவபெருமான் நஞ்சினை உண்டு அனைவருக்கும் ஏற்பட இருந்த இன்னல்களை கடைந்தாரோ, அதைப்போலவே பிரதோஷ நேரத்தில் வழிபடும் பக்தர்களுடைய தீவினைகளை அழித்து அவர்களின் வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற அருளுவார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்