வாசுகியை சம்மதிக்க வைத்தல் :
அசுரர்களிடம் ஏற்பட்ட நட்புறவை கொண்டு அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கினர். அதாவது, மந்திர மலையைக் கடைவதற்காக வாசுகிப் பாம்பை அடைந்து திருப்பாற்கடலை கடைவதற்கான காரணத்தையும், அதனால் உண்டாகும் பலன்கள் பற்றியும் எடுத்துக்கூறி வாசுகிப் பாம்பின் சம்மதத்தையும் பெற முயன்றனர். அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி பாம்பிடம் திருப்பாற்கடலைக் கடைவதனால் கிடைக்கும் அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி மந்திர மலையைக் கடைவதற்கு உதவுமாறு வேண்டினர். வாசுகி நாகமும் அமிர்தத்தை விரும்பி அவர்களுக்கு உதவுவதாக கூறியது.
மந்திர மலையை கொண்டு வருதல் :
திருமாலின் ஆணைப்படியே தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்திர மலையை எடுத்துக்கொண்டு வந்தனர். அவ்விதம் வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் மலையினை கீழே போட்டுவிட மலை புவியின் மேற்பரப்பில் விழுந்தது. கீழே விழுந்த மலையால் பல உயிரினங்கள் காயம் அடைந்தன மற்றும் மாண்டும் போயின. உலகில் உள்ள உயிரினங்கள் மந்திர மலையின் பாகங்களால் இன்னல்படுவதை உணர்ந்த திருமால் தனது வாகனமான கருடன் மீது அமர்ந்து, மந்திர மலையின் பாகங்களால் உயிரிழந்த உயிரினங்களையும், அதனால் ஏற்பட்ட காயங்களையும் குணப்படுத்தினார். பின்பு, மந்திர மலையை தனது கரங்களினால் எடுத்து கருடன் மீது வைத்து திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலின் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார்.
கடைய தொடங்குதல் :
திருப்பாற்கடலில் மந்திர மலையை வைத்ததும் வாசுகியானது மந்திர மலையை சுழன்று கயிறாக மாறியது. அசுரர்களும், தேவர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைவதற்கு ஆயத்தமாகினர். அவ்வேளையில் தேவர்கள் அனைவரும் வாசுகி நாகத்தின் தலைப்பகுதியை பிடிக்கத் தொடங்கினர். அதைக் கண்ட அசுரர்கள் பாம்பின் வாலை நாங்கள் பிடிப்பதா? என்றும், இது எங்களை அவமதிக்கும் செயலாகும் என்றும் கூறினார்கள். அசுரர்களான நாங்கள் நாகத்தின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று கூறி திருப்பாற்கடலை கடைய மறுத்தனர். அப்போது திருமால், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பாம்பின் வாலை தேவர்கள் பிடிக்க, பின் அசுரர்கள் அனைவரும் வாசுகி நாகத்தின் தலைப்பகுதியை பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.
மந்திர மலை மூழ்குதல் :
அசுரர்களும், தேவர்களும் இணைந்து வாசுகி நாகத்தை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக கொண்டு கடைய முற்பட்டனர். ஆனால், மந்திர மலையின் பாரத்தால் மலையானது திருப்பாற்கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் அனைவரும் தங்களது முயற்சிகள் யாவும் வீணாக போய் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்ததும் மிகவும் வருந்தி என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர்.
கூர்ம அவதாரம் :
அமிர்தத்தின் அவசியத்தையும், தேவர்களிடம் ஏற்படும் சக்தி குறைபாட்டையும் அறிந்த திருமால் பெரிய கூர்ம அவதாரம் அதாவது, ஆமை போன்ற அவதாரமெடுத்து திருப்பாற்கடலில் புகுந்து தன் முதுகால் மலையை தாங்கி பிடித்துக் கொண்டார். கூர்ம அவதாரம் எடுத்த திருமால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் வேண்டும் சக்தியை அளித்துக் கொண்டிருந்தார். வாசுகி நாகத்திற்கும் மந்திர மலையைக் கடைவதனால் சோர்வு ஏற்படாமல் இருக்க அங்கு நிகழ்வனவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டே வந்தார்.
விஷம் வெளிப்படுதல் :
தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை வாசுகியைக் கொண்டு கடையத் தொடங்கினர். மாற்றி மாற்றி மந்திர மலையை கடைந்ததனால் வாசுகி நாகமானது மிகவும் களைப்படைந்து இதுவரையில் தன்னுள் கட்டுப்படுத்தி வைத்திருந்த விஷத்தை வலியினால் வெளியிடத் தொடங்கியது.
வாசுகியிடமிருந்து வெளிவந்த விஷமும், திருப்பாற்கடலை கடைந்ததால் கடலில் இருந்து உருவான ஆலமும்(விஷமும்) இணைந்து ஆலகால விஷமாக உருப்பெற்று மீப்பெரும் நஞ்சாக மாறியது. இந்த நஞ்சினால் முதலில் தலைப்பாகத்தில் இருந்த அசுரர்கள் பாதிக்கப்பட்டு பின்பு அவர்களிடமிருந்து தேவர்களின் பக்கமும் விஷமானது பரவத்தொடங்கியது. இதனால் தேவர்களின் பலமும் குறையத் தொடங்கியது.
ஆலகால விஷத்தால் தேவர்கள் மற்றும் அசுரர்கள் தங்களது பணியை மறந்து தப்பித்து ஓடினர். திருமால் அவர்களைக் காக்கும் பொருட்டு அதனை தடுக்க, விஷமானது அவரையும் மிஞ்சி செயல்படத் தொடங்கியது. அதாவது வெண்ணிறமாக இருந்த திருமாலும் ஆலகால விஷத்தால் நீல நிறமாக மாறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக