சனி, 7 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 128


மார்க்கம் பிறத்தல் :

சுரகுரு சுக்கிராச்சாரியார் பெற்ற சஞ்சீவினி வரத்தினால், அசுரர்களை அழித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று அழிவில்லாமல் இருக்கின்றார்கள். மேலும், அவர்கள் அமிர்தம் கடைதலில் பங்கேற்று தங்களுக்கும் இதில் பங்கு வேண்டும் என்று வாங்கி பெற்றுக்கொண்டால் அவர்களை அழிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லையே என்று அனைவரும் எண்ணத் தொடங்கினர்.

தேவர்கள் அனைவரும் தேவேந்திரனிடம் தங்களது மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்த, தேவேந்திரனும் தேவர்களின் எண்ண ஓட்டங்களை திருமாலிடம் எடுத்துரைத்தார். அதற்கு திருமால், நீங்கள் அனைவரும் எதற்கும் கவலைப்பட வேண்டாம். அமிர்தம் முழுவதும் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அசுரர்களுக்கு கிடைக்காது என்றும், நீங்கள் அசுரர்களிடம் சென்று அவர்களின் உதவியை பெற்று திருப்பாற்கடலை கடைந்து அமிர்தத்தை வெளிக்கொண்டு வரவும் என்று கூறினார். பின்பு, பிரம்ம தேவர் திருமாலின் கூற்றில் உள்ள உண்மையை அறிந்து தேவர்களின் அரசனான தேவேந்திரனை பாதாள லோகத்தில் உள்ள அசுரர்களின் அரசனை சந்தித்து, இதைப் பற்றி எடுத்துரைத்து அவர்களிடம் நட்பு பாராட்டி அழைத்து வரும்படி கூறினார்.

அசுரர்களை காணச் செல்லுதல் :

தேவேந்திரன் சில தேவர்களுடன் பாதாள லோகம் சென்று அசுரர்களின் அரசனை சந்திக்க மிகவும் எளிய தோற்றத்துடன் சென்றார். அதாவது, மன்னர் போன்ற ஆடை, ஆபரணங்கள் எதுவுமின்றி எளிய தோற்றத்துடன் சென்றார். தேவர்களின் அரசனான தேவேந்திரனை இந்த நிலையில் கண்டதும் அசுர லோகத்தில் இருந்த அசுரர்கள் யாவரும் அவரை ஏளனம் செய்தனர். தேவேந்திரனும் மற்றவர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாமல் தன் மனதில் உள்ள எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக அமைதி கொண்டு அசுரர்களின் சக்கரவர்த்தியை காண சென்றார்.

அசுரலோகத்தின் மத்தியில் பல அசுர வீரர்கள் வாயிற்காப்பாளர் பணியில், கரங்களில் பலவிதமான ஆயுதங்களுடன் இருக்க, மாபெரும் இருக்கையில் அமர்ந்திருந்தார் அசுரர்களின் சக்கரவர்த்தி. அவரின் அருகில் அசுரர்களின் குல குருவான சுக்கிராச்சாரியார் வீற்று இருக்க அவர்களை சந்தித்ததும் திருமால் கூறியவற்றை எடுத்துரைத்து உதவி வேண்டி நின்றார் இந்திரன்.

அசுர வேந்தனின் முடிவு :

அசுரர்களின் வேந்தன், எளிய தோற்றத்தில் வந்த இந்திரனைக் கண்டு ஏளனம் செய்து பின்பு தங்களை தேடி வந்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டான். பின்பு திருப்பாற்கடலைக் கடைவதனால் தேவர்களான உங்களுக்கே பயன் உண்டாகும். ஆகவே, நாங்கள் இதற்கு உதவி செய்யமாட்டோம் என்று கூறினான் அசுர வேந்தன். ஆனால், தேவேந்திரனும் அசுர வேந்தனிடம் திருப்பாற்கடலை கடைந்து வரும் அமிர்தத்தையும், அதிலிருந்து வரும் அனைத்து பொருட்களையும் தேவர்களும், அசுரர்களும் சமமாக பிரித்துக் கொள்வோம் என்று உறுதிமொழி கூறினார்.

தேவேந்திரனின் பேச்சுக்களில் அசுரகுல வேந்தனுக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. ஏனெனில் தேவர்களைக் காட்டிலும் அசுரர்கள் அதிக பலம் கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பதையும் சுட்டிக் காட்டினார். தேவேந்திரனும், அசுர குல வேந்தனிடம் இன்று தேவர்கள் அனைவரும் பலம் குறைந்த நிலையில் இருப்பதால் அசுரர்களாகிய உங்களின் பலம் அதிக நிலையில் உள்ளதாகவும், பலமுள்ளவர்களாக இருக்கும் பட்சத்திலும் தங்களுக்கு மரணம் என்பது நிகழக்கூடிய ஒன்றாகும். ஆனால், அமிர்தத்தை உண்ட எவருக்கும் மரணம் என்பது நிகழாத ஒன்றாகும். அமிர்தத்தை உண்டவர்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழக்ஙகூடியவர்களாக இருப்பார்கள் என்று அமிர்தத்தை பற்றியும், அதன் சக்தியை பற்றியும் எடுத்துரைத்தார். அமிர்தத்தை உண்டால் சாகாவரம் உண்டாகும் என்பதை அறிந்தும் தேவர்களான நீங்கள் எங்களிடம் அதை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்னவென்று அறிய விரும்புகின்றேன் என்று அசுர குல வேந்தன் தேவேந்திரனிடம் வினாவினார்.

தேவேந்திரனும் திருப்பாற்கடலைக் கடைய எங்களின் சக்திகள் மட்டும் போதாது என்றும் நாம் இருவரும் இணைந்து கடலைக் கடைந்தால் மட்டுமே திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் கிடைக்கும் என்றும் எடுத்துக்கூறினார். அமிர்தம் கிடைத்தவுடன் நீங்கள் சூழ்ச்சி செய்து எங்களை ஏமாற்றிவிடுவீர்கள். ஆகவே நாங்கள் இதற்கு உதவ முன் வர மாட்டோம் என்று கூறினார் அசுர குல வேந்தன். தேவேந்திரன் அசுரகுல வேந்தனிடம் பலவாறாக எடுத்துரைத்தும் இந்நிலையில் எங்களின் சக்திகளை காட்டிலும் உங்களின் சக்தி அதிகமாக இருக்கின்றது என்றும், எங்களால் உங்களை ஏமாற்ற முடியாது என்றும் உங்களின் சக்திகளுக்கு முன் எங்களின் சக்திகள் குறைவுதான் என்று தங்களை தாழ்த்தி தங்களது காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து, அசுர குல வேந்தனை பலவாறாக ஆசை வார்த்தைகளை கூறி, அசுரர்களும் பாற்கடலை கடைவதற்கு உதவ முன்வருமாறு தேவேந்திரன் தனது பேச்சாற்றலின் மூலம் ஒரு நட்புறவை உருவாக்கினார்..

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்