Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 136


சமாதானம் செய்தல் :

ந்தையின் அழுகையைக் கண்ட நந்திதேவர் தந்தையிடம் விரைந்து சென்று தாங்கள் ஏன் அழுகின்றீர்கள்? தங்களின் துன்பத்திற்கு காரணம் யாது? என எதுவும் அறியாத சிறு பாலகன் தன் தந்தையிடம் வினவினார். சிலாத முனிவர் தன் மகனிடம், நம் ஆசிரமத்திற்கு வந்திருந்த முனிவர்கள் யாவற்றையும் அறிந்தவர்கள். அவர்களின் கூற்று என்றும் பொய்யாகாது. அவர்கள் நீ இன்னும் ஓராண்டு மட்டுமே வாழ இயலும் என்று என்னிடம் கூறினார்கள்.

அதைக் கேட்டு என் மனதில் மிகுந்த கவலை உண்டானது என்றும், இதை நான் எவ்விதம் உன் அன்னையிடம் உரைப்பேன் என்று அறியேன் என்றும் தன் மனதில் மிகுந்த கனத்துடன் தனது மகனான நந்தியிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். தந்தை அடைந்துள்ள இன்னலை கண்ட நந்தி தன் தந்தையிடம் தாங்கள் எதற்கும் கவலைக்கொள்ள வேண்டாம் என்றும், என்னை எவராலும் வெல்ல இயலாது என்றும், என் உயிரை எமன் எடுத்துச்செல்ல இயலாது என்றும் கூறி தனது தந்தையை சமாதானப்படுத்தினார். தன்னுடைய மகன் இவ்விதம் கூறியதைக் கேட்ட சிலாதர் தன்னுடைய மகனிடம் மரணத்தை எவராலும் வெல்ல இயலாது என்றும், அதை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் கூறினார்.

நீ எதைக் கொண்டு உன் மரணத்தை தடுக்க இயலும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாய், நீ என்ன தவம் செய்து கொண்டிருக்கின்றாயா? உன்னை நான் பெறுவதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவபெருமானிடம் வரமாக பெற்றேன். ஆனால், உனக்கு இருப்பதோ ஒரு ஆண்டு மட்டுமே அதில் தவமிருந்து எவ்விதம் சிவபெருமானைக் காண இயலும் என்று தன் மனதில் தோன்றிய எண்ணங்களை பல வேதங்கள் பயின்ற தனது மகனிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

தவம் புரிதல் :

நந்தி தன் தந்தையிடம் தவம், தானம் மற்றும் வித்தைகளால் மகிழ்ந்து சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிப்பவர் அல்ல. அவர் நம் மனங்களில் உள்ள பக்திக்காக மட்டுமே ஆனந்தம் அடைந்து காட்சி அளிக்கக்கூடியவர். நான் தீய எண்ணங்கள் இல்லாமல் பக்தியுடன் வழிபட்டு எம்பெருமானிடம் இறவா வரம் பெற்று வருகிறேன் என்றும், அதற்கு தாங்கள் எனக்கு தவம் புரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.

,சிலாத முனிவரும் தன் மனதில் தனது மகன் எம்பெருமானின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு அவனை ஆசீர்வதித்து தவம்புரிய மனதார வாழ்த்தினார். பின்பு, தனது மகன் நினைத்த காரியத்தில் ஜெயம் கொள்ள அனுதினமும் எம்பெருமானை பூஜிப்பதாக தனது மகனிடம் கூறி தவம் புரிய அனுமதி அளித்தார். தனது தந்தையிடம் அனுமதி பெற்ற மகிழ்ச்சியில் ஏழு வயதே ஆன சிறு பாலகன் மிருத்யுவான மரணத்தை வெல்ல வேண்டுமென்று திடகாத்திரமான வைராக்கியத்துடன் தவம்புரிய வனத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

புவனை நதி :

நதிகளில் சிறந்த நதியான புவனை நதியை அடைந்து நதியின் நடுப்பகுதியில் மூழ்கி தனது சித்தத்தில் சிவனை எண்ணி ருத்திர மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினார். தனக்கு ஏற்படும் மரணத்தை வெல்ல வேண்டும் என்ற கருத்தோடு நிகழும் தட்பவெப்ப மாற்றங்களை கூட மறந்து தனது சித்தத்தில் பரம்பொருளான சிவபெருமானை எண்ணி அவருடன் இணைந்தாற்போல் தனது தவத்தைத் தொடர்ந்தார்.

எம்பெருமான் காட்சி அளித்தல் :

நிகழும் மாற்றங்கள் மற்றும் பலவிதமான இன்னல்களையும் கண்டு பொருட்படுத்தாமல் தனது சித்தத்தில் எம்பெருமானை எண்ணி தனது வாக்கியத்தையே லட்சியமாகக் கொண்டு ருத்திர மந்திரத்தை ஒரு கோடி முறை ஜெபித்து முடிக்கும்பொழுது அவரது தவத்தினை கண்ட எம்பெருமான் அவரின் உண்மையான பக்திக்கு மனம் மகிழ்ந்து அவருக்கு காட்சி அளித்தார்.

நந்தி வரம் பெறுதல் :

சிவபெருமான் நந்தியிடம் உன் தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம்... வேண்டும் வரத்தினை கேட்பாயாக... என்று கூறினார். நந்தியோ தனது தவத்தை நிறுத்தி எவருக்கும் காணக்கிடைக்காத அரும்பெரும் காட்சியை தன் கண்களின் மூலம் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார். அந்த கணப்பொழுதில் தனக்கான எதுவும் எம்பெருமானிடம் கேட்க அவருக்கு விருப்பமில்லை.

மனம் கொண்ட மகிழ்ச்சியில் எம்பெருமானிடம் நான் இன்னும் ஒரு கோடித் தரம் ருத்திர ஜெபம் ஜெபிக்க எனக்கு தாங்கள் அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார். சிவபெருமானும் நந்தி வேண்டிய வரத்தை அருளி மறைய நந்திதேவரின் முன்ஜென்ம கர்மாவை பற்றிய நினைவுகள் மேலோங்கத் தொடங்கின. எல்லாம் உணர்ந்த சிவபெருமான் நந்தியின் குணம் பற்றி நன்கு அறிந்தவராயிற்றே.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக