முன்ஜென்மத்தை அறிதல் :
ஆடி என்ற அசுரன் பிரம்ம தேவரை நோக்கி நீண்ட காலமாக தவமிருந்தான். அந்த அசுரனின் தவத்தால் மகிழ்ந்த பிரம்ம தேவர் அவனுக்கு காட்சியளித்து உனக்கு வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்று கூறினார். அசுரன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால், பிரம்ம தேவரோ பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பது கட்டாயம் இருக்கும். எனவே உனக்கு இந்த வரத்தை அழிக்க முடியாது என்றும், வேறு வரம் கேட்பாயாக என்றும் கூறினார். சற்று யோசித்த அசுரன் தன்னுடைய மரணம் என்பது சந்திரதேவதாகமான நட்சத்திரத்தை சூடிய ருத்திர தேவர் தாகமான முகூர்த்தத்தில் சம்பவிக்க வேண்டும் என்று வேண்டினான்.
பிரம்ம தேவரும் அவன் வேண்டிய வரத்தை அருளி அவ்விடம் விட்டு மறைந்தார். சூழ்ச்சி குணம் கொண்ட அசுரன் பெற்ற வரத்தினை தவறாக பயன்படுத்த, அடுத்த கணப்பொழுதே தன்னுடைய மரணம் என்பது சிவபெருமானால் மட்டுமே என்பதை அறிந்துகொண்டு சிவபெருமான் இல்லாத பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சிக்க தொடங்கினான். அதாவது, எம்பெருமான் தியான நிலையில் இருக்கும் பொழுது அவரை அழிப்பது எளிது என்பது அசுரனின் எண்ணமாகும்.
எம்பெருமானை பற்றி அறிதல் :
அதாவது முன்ஜென்மத்தில் நந்தி கைலாயத்தில் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்தார். சிவபெருமான் ஆழ்ந்த யோக நிலையில் ஆழ்ந்திருந்தார். பிரம்ம தேவரிடம் வரம் பெற்ற ஆடி என்ற அசுரன் கைலாயம் வந்து காவலராக இருந்த நந்தியிடம் எம்பெருமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரின் நிலை பற்றிய விவரங்கள் யாவற்றையும் அறிந்து கொண்டான்.
உருமாற்றம் :
எம்பெருமான் யோக நிலையில் இருப்பதை அறிந்த அசுரன் தனது உருவத்தை சிறு நாக வடிவில் மாற்றிக்கொண்டு, யாரும் அறியாவண்ணம் காவலராக இருக்கக்கூடியவர் கண்களுக்கு அகப்படாமல் தன்னுடைய உருவத்தை சின்னஞ்சிறியதாக மாற்றி, எம்பெருமான் இருக்கும் கைலாய குகையில் நுழைந்தான். குகையினுள் நுழைந்ததும் நாக வடிவம் உள்ள தனது உருவத்தை அழகிய லாவண்யம் கொண்ட சொரூபமாக மாற்றி சிவபெருமானை அடைய முற்பட தொடங்கினான்.
அழகிய உருவத்துடன் தன் மனம் முழுவதும் தாங்களே இருப்பதாகவும், தன்னால் தாங்கள் இல்லாமல் இருக்க இயலாது என்றும், தங்கள் மீது காமவயப்பட்டு இருக்கின்றேன். ஆனால், நீங்கள் தவம் செய்து கொண்டிருக்கிறீர்களே என்ற சொற்களைக் கொண்ட பேச்சுகளை பேசி சிவபெருமான் அருகில் சென்று அவரின் நிலையை கலைக்கத் தொடங்கினான். அதாவது தனது மாய சக்திகளைக் கொண்டு சிவபெருமானை தாக்க துணிந்தான் ஆடி என்ற அசுரன்.
அவனுடைய தாக்குதலால் தவம் கலைந்த எம்பெருமான் மிகுந்த கோபத்துடன் அருகிலிருந்த சூலாயுதத்தால் அவனது உடலை பிளந்து எறிந்தார். அவரின் கோபமானது கட்டுக்கடங்காமல் குகையினை விட்டு வெளியே கேட்க, நந்திதேவரும் அநர்த்தம் நிகழ்ந்துவிட்டது என்பதை அறிந்து உள்ளே சென்றார்.
சிவபெருமான், கட்டுக்கடங்காத கோபத்தினால் என் அனுமதியின்றி அசுரனை உள்ளே விட்டதன் காரணமாய் பூலோகத்தில் ஆயுள் பலம் குறைந்த சிறுவனாக பிறந்து மடிவாயாக என்று நந்தியை சபித்தார்.
சாப விமோசனம் பெறுதல் :
நந்திதேவரும் சிவபெருமானிடம் நிகழ்ந்தவை அனைத்தும் எம்மை அறியாமல் நிகழ்ந்தவையே என்று தனக்கே உரித்தான சக்திகளைக் கொண்டு அவற்றை சிவபெருமானிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார். அதுவரை கோபம் கொண்ட எம்பெருமான், நந்தியின் மீது கொண்ட அன்பினால் அவரது கோபம் தணிய நான் உனக்கு அளித்த சாபம் சாபமே நந்தி. நீ பூலோகத்தில் பிறந்து என்னை நினைத்து ஜபம் செய்து அனைத்து தேவர்களாலும் போற்றக்கூடிய ஒரு உன்னத நிலையை அடைவாய் என்று கூறி அவர் அளித்த சாபத்திற்கு விமோசனம் அளித்தார்.
அதுவரை என்றுமே சிவபெருமானிடம் இருந்து பிரியாத நந்தி பூலோகத்தில் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறந்து, இன்று தவம் புரிவதற்கான காரணத்தையும் அறிந்து கொண்டார். நந்தியின் புகழை பார்(உலகம்) உணர எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
தவத்தை தொடங்குதல் :
தனது முன் ஜென்மத்தை பற்றி அறிந்ததும் தனது தவத்தினை நிறுத்தாமல் நந்திதேவர் மீண்டும் புவனை நதியில் அமர்ந்து மீண்டும் அவரின் விருப்பப்படியே ஒரு கோடி ருத்திர ஜெபத்தினை ஜெபிக்கத் தொடங்கினார். அவர் ஒரு கோடி ருத்ர ஜெபத்தினை ஜெபித்த பின்பு மீண்டும் சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து நந்தி உனக்கு வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்று கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக