மாதலியுடன், அர்ஜூனன் தேவலோகத்தை நோக்கி சென்றான். அவர்கள் போகும் வழியில் நட்சத்திர மண்டலங்கள் தென்பட்டன. மாதலி, அர்ஜூனரே! இங்கு நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள், பூமியில் மனிதனாக வாழ்ந்து பெரும் புண்ணியம் செய்தவர்கள். இவர்கள் விண்ணில் இருந்தபடியே மகான்களால் போற்றப்படுகின்றனர். அதன் பிறகு அர்ஜூனன் பார்த்த காட்சிகள் அவனை பிரமிக்க வைத்தது. இருவரும் இந்திரலோகத்தை அடைந்தனர். தேவமாதர்கள் அர்ஜூனனை மலர்களை தூவி வரவேற்றனர். அங்கிருக்கும் தேவர்களும் அர்ஜூனை வரவேற்றனர். இந்திரன், அர்ஜூனை அழைத்து கொண்டு தன் அரியணையில் அமர வைத்தான். இந்திரனுக்கு சமமாக அமருபவர்களை உபேந்திரன் என்பர். அர்ஜூனனும் அன்று முதல் உபேந்திரன் ஆனான்.
சபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை முதலியோர் நடனமாடினர். அர்ஜூனனின் வரவையொட்டி இந்திரலோகம் பொலிவுடன் காணப்பட்டது. அர்ஜூனன் வரவேற்பு முடிந்த பிறகு சித்ரசேனனை அழைத்து, அர்ஜூனனுக்கு கலைகளை கற்று கொடுக்கும்படி கூறினார். அர்ஜூனன், தந்தையே! நான் வேண்டுவது அஸ்திரங்கள் மட்டுமே கலைகள் அல்ல எனக் கூறினான். இந்திரன், மகனே! பயிற்சிகளால் மட்டுமே இங்கு அஸ்திரங்களை அடைய முடியும். உனக்கு அஸ்திரங்கள் கொடுப்பதற்கு முன் ஆய கலைகள் 64 கற்பிக்கப்படும். இதை நீ கற்றுக் கொள்ள ஐந்து ஆண்டு காலம் ஆகும். நீ அனைத்தையும் கற்ற பிறகு பூலோகம் செல்வாய் எனக் கூறினார். இதைக்கேட்டு அர்ஜூனன் சற்று திடுக்கிட்டான். காரணம், பூலோகத்தில் தன்னை காணாமல் சகோதரர்கள் வருந்துவார்கள் என்பது தான்.
தன் சகோதரர்கள் தன்னை காணாமல் வருந்துவார்கள் என்பதை இந்திரனிடம் தெரிவித்தான் அர்ஜூனன். இந்திரன், அர்ஜூனா! நீ இதை நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். நீ இங்கு இருக்கிறாய் என்னும் செய்தி உன் சகோதரர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக் கூறினார். அச்சமயம் உரோமச முனிவர் இந்திரலோகத்திற்கு வந்திருந்தார். அங்கு மானிடனான அர்ஜூனன் இருப்பதை அறிந்து வியப்படைந்தார். அதன்பிறகு சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றுக் கொண்டதை அறிந்தார். அர்ஜூனனுக்கு தன் ஆசியை வழங்கினார். அதன் பிறகு முனிவர் அங்கிருந்து பாண்டவர்களை காண காம்யக வனத்தை நோக்கிச் சென்றார். அங்கு பாண்டவர்களை கண்டு அர்ஜூனன் பாசுபதாஸ்திரத்தை பெற்றதையும், இப்பொழுது இந்திரலோகத்தில் இருப்பதை பற்றியும் கூறினார்.
இதைக் கேட்டு பாண்டவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி திருதிராஷ்டிரனுக்கும், துரியோதனனுக்கும் தெரியவந்தது. இவர்கள் இதைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டனர். துரியோதனன், பாண்டவர்களை வனவாசம் அனுப்பியது தவறு என்றே நினைத்தான்.
தேவலோகத்தில், ஊர்வசி அர்ஜூனனை கண்டு காதல் கொண்டாள். அர்ஜூனனின் அழகில் மட்டுமல்ல வீரத்திலும் பேரழகன் என்பதை நன்கு அறிந்தாள். ஊர்வசி அர்ஜூனனை சுற்றி சுற்றி வந்தும் அர்ஜூனன் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தான். அதனால் ஊர்வசி தன் காதலை தெரிவிக்க அர்ஜூனனின் இருப்பிடத்திற்குச் சென்றாள். அர்ஜூனன், ஊர்வசியைக் கண்டவுடன் மிக்க மரியாதையுடன் பணிந்து வணங்கினான். ஊர்வசி, “நான் தான் ஊர்வசி. என் அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் ஏனோ என் மனம் உன்னை விரும்புகிறது. உன்னை அடையவே நான் இந்த இரவில் இங்கு வந்தேன். ஊர்வசி இப்படி பேச அர்ஜூனன் முகத்தில் எவ்வித ஆசையும் இல்லாதவனாய் இருந்தான்.
இதைக் கவனித்த ஊர்வசி, அர்ஜூனா! நீ என்னை ஏற்றுக் கொள் என கூறினாள். இதைக் கேட்டு அர்ஜூனன் அதிர்ச்சி அடைந்தான். தாயே! தாங்கள் என் தந்தைக்கு சமமானவர். இந்திரன் எனக்கு தந்தை ஆவார். அந்த வகையில் தாங்களும் எனக்கு அன்னை முறையே எனக் கூறினாள். ஊர்வசி அர்ஜூனா! நீ உன் மானிட வாழ்க்கையை இங்கு பின்பற்ற தேவை இல்லை. இந்திரலோகத்தில் அனைவருக்கும் இன்பம் தருவதே எனது கடமை. இதில் தர்மநெறி பின்பற்ற தேவையில்லை என்றாள்.
அர்ஜூனன், தாயே! நான் இங்கு தற்காலிகமாக இருப்பவன். எனக்கு உரியது மானிட வாழ்க்கை. அந்த வகையில் தர்மத்தை பின்பற்றுவதே எனது கடமை. இங்கு எனது நோக்கம் அஸ்திரம் மட்டுமே என்றான். இதைக் கேட்டு கோபம் கொண்ட ஊர்வசி, நான் உன்னை தேடி வந்து, உன்னை பிடித்து இருக்கிறது எனக் கூறுகிறேன். ஆனால் நீயோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாய். உன்னிடம் காதலை தேடி வந்த என்னை, தாய் எனக் கூறி நீ அவமதிக்கிறாய் என்றாள். அதற்கு அர்ஜூனன், தாயே! நான் என் மனதில் உள்ளதை மட்டுமே கூறினேன் என்றான். கோபங்கொண்ட ஊர்வசி, ஒரு பெண்ணின் காதலை உணராத நீ, ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் அரவாணியாக திகழக் கடவாய் எனக் கூறினாள்.
இதைக்கேட்டு அர்ஜூனன் அதிர்ச்சி அடைந்தான். அஸ்திரம் தேடி வந்த எனக்கு இப்படி ஒரு சாபம் நேர்ந்துவிட்டதே என நினைத்து வருந்தினான். தாயே! அறநெறி வழியில் நடக்கும் எனக்கு தாங்கள் இவ்வாறு சாபம் அளித்தல் கூடாது. தயவுசெய்து என் நிலையை உணர்ந்து எனக்கு சாபவிமோசனம் அளிக்க வேண்டும் என்றான். ஊர்வசி, நான் உனக்கு சாபம் அளித்தது அளித்தது தான். வேண்டுமென்றால் அச்சாபத்தை நீ ஓராண்டு காலம் நிறைவேற்றலாம். அந்த ஒரு ஆண்டு காலத்தையும் நீயே தேர்வு செய்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக