Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 மார்ச், 2020

மாரீசன் மாண்டு போதல்!

 ராமர் மானை பின் தொடர்ந்து சென்றார். மாய மான் இராவணனுக்கு போதிய அவகாசம் தர எண்ணி கைக்கு சிக்குவது போல காட்டிக்கொண்டு மாயமானது. மாய மான் இராமனை வெகுதூரம் இழுத்து சென்றது. ஒரு சமயம் மெதுவாக போகும். பிறகு ஒரே பாய்ச்சலாக காட்டிற்குள் வேகமாக ஓடி மறைந்து விடும். திடீரென்று தோன்றி தன் அழகை பார்க்கும்படி ஓடும். பிடிக்கும் அளவிற்கு பக்கத்தில் இருக்கும். பக்கத்தில் போனால் தூரமாக ஓடிவிடும். இப்படியே தன் மாய வேலையை மாறி மாறி செய்தது. நெடுந்தூரம் சென்ற பிறகு இவன் அரக்கன் மாரீசன், மான் அல்ல என்பதை உணர்ந்தார். இவனை இனியும் உயிருடன் விடக்கூடாது என எண்ணிய இராமர் தன் பாணத்தை மாரீசன் மீது எய்தினார். அவன் மான் உருவில் இருந்து அரக்கனாக மாறி, துடிதுடித்து சீதா! இலட்சுமணா! என இராமனின் குரலில் அலறிக் கொண்டு மாண்டான்.

 இராமர், தம்பி இலட்சுமணர் சொன்னது உண்மைதான். நான் தான் தவறாக எண்ணி விட்டேன். இவனின் கூக்குரலை கேட்டு சீதை தன்னை நினைத்து மிகவும் வருந்துவாளே என எண்ணினார். சீதையை பாதுகாக்க இலட்சுமணன் அருகில் உள்ளான் என்று தன்னைத்தானே சமதானப்படுத்திக் கொண்டார். சீதா! இலட்சுமணா! என மாரீசன் கதறியதைக் கேட்டு இராமர் தான் கதறுகிறார் என சீதை நினைத்துவிட்டாள். உடனே சீதை இலட்சுமணரிடம், இலட்சுமணா! விரைந்து செல். உன் அண்ணன் ஆபத்தில் உள்ளார். அவரின் குரல் உனக்கு கேட்டதா இல்லையா? காலத்தை தாமதிக்காமல் விரைந்து சென்று அண்ணனை காப்பாற்று என்றாள். சீதை தன் வயிற்றில் அடித்துக் கொண்டு, ஒரு மானுக்காக ஆசைப்பட்டு என் கணவனை இழக்கப் போகிறேனே எனப் புலம்பினாள்.

 அரக்கர்களின் கூட்டத்தில் உன் அண்ணன் மாட்டிக் கொண்டு கதறுகிறார். நீ ஏன் இன்னும் இங்கு நின்று கொண்டு இருக்கிறாய்? சீக்கிரம் சென்று உன் அண்ணனை காப்பாற்று என்று கதறினாள். இல்லையென்றால் இப்பொழுதே என் உயிரை மாய்த்து கொள்வேன் என்றாள். இலட்சுமணர் சீதையிடம்! அன்னையே! தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அந்த குரல் அண்ணனின் குரல் அல்ல. அந்த மாய அரக்கன் செய்த செயல். இவ்வுலகில் அண்ணனை மிஞ்சிய வீரன் எவரும் இல்லை. தாங்கள் அந்த குரல் அண்ணனுடையது என எண்ணி கவலை கொள்ள வேண்டாம். அண்ணன் தங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். ஆதலால் நான் எந்த சூழ்நிலையிலும் தங்களை தனியாக விட்டு செல்ல மாட்டேன். இது அண்ணனின் ஆணையும் கூட என்றார்.

 இலட்சுமணா! நீ வஞ்சகம் செய்கிறாய். நீயோ மாற்றாந்தாய் மகன். கைகெயி நாட்டை பறித்துக் கொண்டாள். பரதன் அழுது புரண்டு காலில் முள் குத்தட்டும் என்று பதுகைகளை பெற்று கொண்டான். நீ உன் அண்ணனுக்கு தீங்கு செய்ய தான் வந்துள்ளாய் என்பதை உணர்ந்து கொண்டேன். இலட்சுமணா! இராமனின் குரலைக் காதால் கேட்டும் கவலைப்படாமல் என் எதிரில் நின்று கொண்டிருக்கிறாய். நீ உன் அண்ணனுக்கு உதவி செய்ய போகவில்லையென்றால் இப்பொழுதே தீ மூட்டி அதில் விழுந்து இறந்து போவேன் என்று கூறிக் கொண்டு தீயிடம் ஓடி சென்றாள். இலட்சுமணன் இதை கேட்டு மனம் நொந்து போனான்.

சீதையை தடுத்து நிறுத்தினான். தாங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். தங்களின் சொற்களினால் என்னை துளைத்து விட்டீர்கள். அன்னையே! நான் அண்ணனின் ஆணையை மீறி தங்களை தனியாக விட்டுச் செல்கிறேன். தங்களை விட்டு செல்வதற்கு பயமாக உள்ளது. தங்களை மறுபடியும் அண்ணனுடன் பார்ப்பேனா தெரியவில்லை என்று கூறிவிட்டு மிகுந்த துயரத்துடன் விடைப்பெற்று சென்றான்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக