சிவபெருமானை கண்ட நந்திதேவர், அவரை
பணிந்து வணங்கினார். பின்பு நந்திதேவரோ இம்முறையும் தனக்காக எவ்விதமான
வரத்தினையும் கேட்காமல் அனைத்தையும் அறிந்த எம்பெருமானே!... என்னுள் இருக்கும்
சிவபெருமானே!... நான் மீண்டும் ஒரு கோடி முறை ருத்திர மந்திரத்தை ஜெபிக்கும்படி
அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார்.
எம்பெருமானும்
நந்தி வேண்டிய வரத்தை அருளி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். இதேபோன்று
நந்திதேவர் எம்பெருமானிடம் ஐந்து முறைகள் என சிவபெருமானிடம் வரம் பெற்று 7 கோடி தர
ருத்திர ஜெபத்தினை ஜெபித்து கதிரவனை விட பிரகாசமான ஒளிமிகுந்த பொலிவுடன் இருந்து
தனது எட்டாவது கோடி ருத்திர ஜெபத்தினை ஜெபிக்க தொடங்கினார்.
தேவர்கள் பயம் கொள்ளுதல் :
எட்டாவது
கோடி ருத்ர ஜெபத்தினை ஜெபிக்க தொடங்கிய பொழுது நந்திதேவரின் தேஜஸ் ஒளியைக் கண்ட
தேவர்கள், எமதர்மன் மற்றும் அஷ்டதிக்பாலகர்கள் என அனைவரும் என்ன நிகழுமோ என
ஒருவிதமான அச்சம் கொண்டனர். ஆனால், சிவபெருமானோ நந்தியின் திடமான உள்ளத்தைக் கண்டு
மிகவும் மனம் மகிழ்ந்தார்.
அன்னையுடன் எம்பெருமான்
காட்சியளித்தல் :
நந்திதேவர்
எட்டாவது கோடி ருத்திர ஜெபத்தினை செய்து கொண்டிருக்கையிலேயே எம்பெருமான் சதுர்புஜ
நாகபூஷண வியாக்கிர வடிவமாய் பிரம்ம தேவரும், திருமாலும் இருபுறமிருக்க
பார்வதிதேவியும் அவர்களது மைந்தர்களான விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருடன்
பூதகணங்கள் மற்றும் வேதங்கள் நான்கும் புடைசூழ காட்சியளித்தார்.
புவனை
நதியில் நீரில் மூழ்கியிருந்து தவம் புரிந்து கொண்டிருந்த நந்தியை எம்பெருமான்
தனது கரங்களால் தூக்கி புவனை நதிக் கரையில் நிறுத்தினார். சிலாதரின் புதல்வனாகிய
நந்தியே!! உனது மனோதிடத்தினாலும் நீர்கொண்ட வைராக்கிய தவத்தினை கண்டு யாம் மிகவும்
மனம் மகிழ்ந்தோம் என்றும் கூறி உனக்கு வேண்டிய வரம் யாது? என்று கேட்டார்.
நந்திதேவரோ, எம்பெருமானிடம் நான் மேற்கொண்டு இன்னும் ஒரு கோடி ருத்ர ஜபத்தினை
ஜெபிக்க தாங்கள் எனக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டார்.
வரம் வேண்டுதல் :
எம்பெருமான்
நந்தியை நோக்கி நீர் செய்த எட்டு கோடி ருத்திர ஜெபத்திற்கு தேவலோகத்தில் உள்ள அனைத்து
உயர்ந்த பதவிகளையும் நான் உனக்கு அளிக்க வேண்டும் என்றும், இனியும் நீ மேற்கொண்டு
ஜெபத்தினை செய்வதைக் காட்டிலும் நீ செய்த ஜெபத்திற்கு வேண்டும் வரத்தைக் கேட்பாயாக
என்றும், உன் தவத்திற்கு இப்பூவுலகில் எவரும் இணையாக இருக்க இயலாது என்றும்
கூறினார். நந்திதேவரோ... எம்பெருமானின் முன் பணிந்து நின்று அவரை பலவாறு துதித்து
அவரை மகிழ்விக்கத் தொடங்கினார்.
பின்பு,
அவரிடம் எம்பெருமானே உங்களின் தரிசனத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியையும்,
ஆனந்தத்தையும் அடைந்துள்ளேன் என்றும், இக்கணப்பொழுதில் இந்த பிரபஞ்சத்தில் என்னை
விட மிகுந்த ஆனந்த நிலையில் எவரும் இல்லை என்றும் தன் மனம் கொண்ட மகிழ்ச்சி நிலையை
எடுத்துரைத்தார். பின்பு, தன் தவத்திற்கான வரத்தினை கேட்க தொடங்கினார். எனக்கு
தேவலோகம், சூரியலோகம், பிரம்மலோகம் மற்றும் விஷ்ணுலோகம் போன்ற எந்த உலகத்திலும்
உயர் பதவிகளும், பொறுப்புகளும் வேண்டாம் என்றும், எனக்கு மரணம் இல்லாத வல்லமை
கொண்ட இறை நிலைமையும் வேண்டாம் என்றும் கூறினார்.
நந்திதேவர்
எம்பெருமானை நோக்கி எம்பெருமானே!... எனக்கு இவ்வுலகில் பிறந்து மடியும் ஜனனம்
மற்றும் மரணம் கொண்ட இன்ப, துன்ப வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் நான் என்றும்
உங்களின் அருகிலேயே இருக்கும் பாக்கியத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் என்றும்,
என்னை ஈன்றெடுத்த என் பெற்றோரின் முன்னோர்களின் வர்க்கத்தினருக்கு மோட்சமும்,
அவருக்கு சிவ பதவியும் அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார்.
எம்பெருமான் அருளுதல் :
எம்பெருமானும்
நந்திதேவரின் வேண்டுதலை ஏற்று மிகவும் மனம் மகிழ்ந்தார். பின்பு, நந்திதேவரை
நோக்கி நந்தி நீயும் என் மைந்தர்களில் ஒருவனாக இருக்கப் பெறுவாய் என்றும், உன்னை
எவர் நினைத்தாலும் அவர்களுக்கு மரண பயம் என்பது உண்டாகாது என்றும், இனி எனக்கு
நிகரான பராக்கிரமம் உடையவன் என்றும், என் கணங்களுக்கு தலைவனாக விளங்குவாய்
என்றும், பின்பு நந்தி முன்னோர்களுக்காக வேண்டிய வரத்தையும் திருவாய் மலர்ந்து
அருளினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக