வியாழன், 12 மார்ச், 2020

பிரகதஸ்வர் முனிவர் கூறும் நளன் தமயந்தி கதை...!ர்ஜூனனின் சாபம் இந்திரனுக்கு தெரியவந்தது. அர்ஜுனனை அழைத்து, மகனே! உன்னை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். ஊர்வசியின் பேரழகை நீ துச்சமாக எண்ணி, அவளை தாய்க்கு சமமாக எண்ணியது உன் ஞானத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் அர்ஜூனனோ இச்சாபத்தை நினைத்து மிகவும் கவலைக் கொண்டான். இந்திரன், மகனே! நீ இச்சாபத்தை நினைத்து கவலைக் கொள்ள வேண்டாம். இச்சாபம் உனக்கு வரமாக அமையும். உன் வனவாசத்தின் கடைசி ஆண்டு அஞ்ஞான வாசம் செல்ல வேண்டும் அல்லவா? அஞ்ஞான வாசத்தின் போது நீ அரவாணியாக மாறுவது உன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும். அத்துடன் ஊர்வசியால் உனக்கு ஏற்பட்ட சாபம் விலகும் என்றார்.

ஒரு முறை பிரகதஸ்வர் முனிவர் பாண்டவர்களை காண வந்திருந்தார். பாண்டவர்கள் பிரகதஸ்வர் முனிவரை மிகவும் மரியாதை செலுத்தி பணிவுடன் வரவேற்றனர். முனிவர் பாண்டவர்களை பார்த்து உங்களின் வனவாசம் காலம் எப்படி செல்கிறது எனக் கேட்டார். யுதிஷ்டிரர், நாங்கள் இங்கு எவ்வித குறையும் இன்றி நலமாக இருக்கிறோம் என்றார். இதைக் கேட்ட மற்ற சகோதரர்கள் முகம் சுளித்தனர். அப்பொழுது சகாதேவன், முனிவரே! அண்ணன் யுதிஷ்டிரன், எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும், தீயிக்குள் இருந்தாலும் நலமாக இருக்கிறோம் என்றே கூறுவார். ஆனால் உண்மையில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த நாங்கள் அவர்களை எதிர்த்து போரிடாமல் இங்கு வனத்தில் காய் கனிகளை உண்டு வாழ்கிறோம்.

நாங்கள் வீரர்களாக இருந்தும் எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறோம். எங்களால் திரௌபதியும் வனத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்றான். இதற்கு பீமனும், நகுலனும் எங்களின் கருத்தும் இதுவே என்பது போல் ஆமோதித்தனர். இதைக் கேட்ட முனிவர், உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்களை என்னால் யூகித்து கொள்ள முடிகிறது. உங்களை காட்டிலும் மிகவும் கஷ்டப்பட்ட அரசன் ஒருவன் இவ்வுலகில் வாழ்ந்தான். உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஒருவரையொருவர் ஆறுதல் கூறிக் கொள்வீர்கள். ஆனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆறுதல் கூற ஒருவரும் இல்லை. அத்தகையவனின் கதையை கேட்டால் உங்கள் உள்ளமும் உருகும். அந்த அரசனின் கதையை உங்களுக்கு நான் கூறுகிறேன் என்றார்.

இதைக் கேட்ட பின் அனைவரின் ஆர்வமும் அந்த கதையிலேயே இருந்தது. பீமன், முனிவர் அவர்களே! அந்த அரசன் யார்? என்பதை எங்களுக்கு கூறுங்கள் என்றான். முனிவர், அந்த அரசனின் பெயர் நளன். நிஷத நாட்டில் வீரஸேனனின் மகனாக நளன் என்றொரு அரசர் இருந்து வந்தான். அவர் உயர்ந்த குணங்கள் படைத்தவன். மிக அழகானவன், உண்மையே பேசுபவன், புலனடக்கம் உள்ளவன், வேதமறிந்தவன், படை வலிமை கொண்டவன். விதர்ப்ப தேசத்தை பீமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். தமன முனிவர் அருளிய வரத்தின் பயனாக தமன், தாந்தன், தமனன் என்ற மூன்று புதல்வர்களையும், தமயந்தி என்ற ஒரு புதல்வியையும் அடைந்தார். தமயந்தி, நிகரற்ற அழகு படைத்தவள்.

விதர்ப்ப தேசத்திலிருந்து நிஷத நாட்டிற்கு வந்து நளனிடம் தமயந்தியின் அழகைப் பற்றியும், குணங்களைப் பற்றியும் வர்ணித்தவர்கள் எத்தனையோ பேர். அவ்வாறே நிஷத நாட்டிலிருந்து விதர்ப்ப நாட்டிற்குச் செல்கிறவர்களும் தமயந்தியின் முன்னிலையில் நளனுடைய குணம், அழகு ஒழுக்கம் இவற்றைப் பற்றி வர்ணித்தார்கள். அதனால் இருவர் உள்ளத்திலும் காதல் மலர்ந்தது. ஒரு நாள் நளன் தன் அரண்மனைத் தோட்டத்தில் இருந்த அன்னப்பறவைகளில் ஒன்றைப் பிடித்தான். அந்த அன்னப்பறவை நீங்கள் என்னை விட்டுவிடுவீர்கள் என்றால் நான் தமயந்தியிடம் சென்று உங்களையும், உங்களது குணநலன்களையும் வர்ணிப்பேன் என்று கூறியது. தமயந்தி மேல் காதல் கொண்ட நளனும் அப்பறவையை விட்டுவிட்டான்.

அதன் பிறகு பறவைகள் விதர்ப்ப தேசத்திற்குப் பறந்து சென்று தமயந்தியிடம், நிஷத தேசத்தில் நளன் என்ற பெயருள்ள அரசர் இருக்கிறார். அவர் அழகில் மன்மதன், வீரத்தில் சிறந்தவர், பண்புடையவர். நீ அவர் மனைவியானால் உங்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என கூறிவிட்டு பறந்து சென்றது. அன்று முதல் தமயந்தி இரவும், பகலும் நளனின் நினைவாகவே இருந்தாள். அவளின் காதல் நாளுக்குநாள் வளர்ந்துக் கொண்டே வந்தது. இதனால் தமயந்தி பொலிவிழந்து காட்சி அளித்தாள். தனது மகள் உடல்நலம் குன்றிவிட்டாள் என்பதை அறிந்த பீமன் தன் மகளைப் பற்றி யோசித்த வண்ணம் இருந்தார். கடைசியில் தனது மகள் திருமண வயதை அடைந்துவிட்டதால் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். சுயம்வரத்திற்கான ஏற்பாட்டையும் கவனித்தார்.

எல்லா அரசர்களுக்கும் சுயம்வரத்திற்கான செய்தி அனுப்பப்பட்டது. எல்லா தேசத்து அரசர்களும் சுயம்வரத்திற்காக தங்களை அலங்கரித்துக் கொண்டு விதர்ப்ப தேசத்தை நோக்கி வரத் தொடங்கினர், பீமனும் அவர்களை வரவேற்று உபசரிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்திரன் முதலான தேவர்களும் தமயந்தியின் சுயம்வரத்திற்கு வந்தனர். நளன் சுயம்வரத்திற்காக வந்து கொண்டிருப்பதை கண்ட தேவர்கள், நளனிடம் சென்று, அரசே! தாங்கள் உண்மை பேசுபவர்கள். அதனால் தாங்கள் எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும் என்றனர். நளனும் உதவி செய்வதாக உறுதி கூறினான். நளன், நீங்கள் யார்? எதற்காக என்னை தூதுவனாக அனுப்ப நினைக்கின்றீர்கள் எனக் கேட்டான்.

தேவர்கள், அரசே! நான் இந்திரன், இவர்கள், அக்னி, வருணன், எமன். நாங்கள் தமயந்தியின் சுயம்வரத்திற்காக வந்துள்ளோம். தாங்கள் தமயந்தியிடம் சென்று, சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக தேவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் விருப்பமானவரை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுங்கள் என்றனர்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்