Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 139


நந்திபனை உருவாதல் :

ந்திதேவர் என்னை எண்ணி தவம் புரிந்த இந்த புவனை நதியானது நந்திபனை என்று இனிவரும் காலங்களில் அழைக்கப்படும் என்றும், எவர் ஒருவர் இந்த நதியில் நீராடி என்னை சரண் அடைகின்றார்களோ அவர்கள் திருக்கைலாயம் அடையும் பாக்கியம் பெறுவார்களாக என்று எம்பெருமான் கூறினார்.

நந்தி நாகாத்பதம் தோன்றுதல் :

எம்பெருமான் அருளியதை கேட்ட உடனே புவனை நதியின் நதியானவள் அவ்விடம் தோன்றி சிவபெருமானை பலவாறாக துதித்து போற்றினாள். பின்பு, எம்பெருமானிடம் தங்களின் மைந்தனான நந்தியானவர் என்னுள் இருந்து இந்த மாபெரும் பாக்கியத்தை அடைந்துள்ளதால் இக்கணப்பொழுது முதல் நந்தியும் தனக்கு புத்திரனாகும் பாக்கியத்தை எனக்கு தாங்கள் அருள வேண்டும் என்று வேண்டி நின்றாள். அடியார்க்கு வேண்டியவற்றை அருளும் கருணைக்கடலான எம்பெருமான் நதியானவள் வேண்டுகோளை ஏற்று நந்தியை நதிக்கும் மகனாக இருக்கப்பெறுவாய் என்று அருளினார்.

அவர் அளித்த அருளின் படியே நந்தியும் தனது அன்னையான புவனையின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றதும் தனது மகனை ஆசீர்வதித்த நதியானவள் நந்தியை தனது மார்போடு அணைத்து மனமகிழ்ச்சிக் கொண்டாள். நதியானவள் மகிழ்ச்சி கொண்ட ஆனந்த நிலையில் அவளின் தனத்திலிருந்து அமுத நதியானது பிறந்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் பொருட்டு பாய்ந்து சென்றது. நந்திதேவரின் மீது கொண்ட ஆனந்த நிலையினால் உருவான இந்நதிக்கு 'நந்தி நாதாத்பதம்" என்று பெயர் உண்டாகி அனைவராலும் அழைக்கப்பட்டது.

ஒளி பெருகுதல் :

சிவபெருமான் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட காண்பதற்கு அரிய செயல்பாடுகள் கொண்ட சொர்ணத்தால் உருவாக்கப்பட்ட தங்க மகுடத்தை நந்தியின் சிரசின் மீது சூட்டி, எப்போதும் அழியாத என்றும் புதிது போன்று காட்சி அளிக்கும் தன்மை கொண்டு விளங்கும் வெண்பட்டு ஆடையை அவரின் மீது போர்த்தி ஆயிரம் தாமரை மலர்களால் ஆன மாலை ஒன்றினை நந்திக்கு அணிவித்தார். அப்பொழுது நந்திதேவரை காணும்போது பல இலட்ச ஆதவ ஒளிகளை தன்னகத்தே பொருந்தியவர் போல காட்சியளித்தார்.

தேவியின் அருள் பெறுதல் :

எம்பெருமான் தனது அருகில் இருந்த பார்வதி தேவியைப் பார்த்து தேவி!... நம் மைந்தனாகிய நந்திக்கும் உனது அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று கூறவே, பார்வதி தேவியும் அக்கணத்தில் தனது பதியின் விருப்பத்தை மனதார ஏற்றுக்கொண்டு நந்திதேவரை தனது கரங்களால் வாரி எடுத்து அணைத்துக் கொண்டு மகனே... எம்பெருமானின் வாக்கு எக்காலத்திலும் பொய்யாகாது என்றும், உலகில் நீ இருக்கும் காலம் குறைவாக இருப்பினும் எப்போதும் காலன் உன்னை அணுக மாட்டான் என்றும், என்னுள் இருக்கும் என் நாதனின் விருப்பம் போல என்றும், அவர்களின் கணங்களுக்கு இன்று முதல் நீயே தலைவனாக இருப்பாய் என்றும் ஆசி கூறினார்.

கணப்படைகளின் வருகை :

பார்வதி தேவியின் கூற்றுகளை அடுத்து எம்பெருமான் தனது படைத்தலைவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரையும் இவ்விடம் வரும்படி எண்ண கணப்பொழுதில் எட்டு திக்குகளில் இருந்து ருத்திர கணங்கள் அனைவரும் கரங்களில் ஆயுதங்கள் மற்றும் சூலம் ஏந்தியாவாறு நீலகண்டமும் ஒளி வீசும் அக்கினி கொண்ட விழிகளை உடைய எண்ணிறந்தோர் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் மட்டும் அல்லாத ஏனைய வீரர்களான கபாலீசன், விசோகன், சதநேத்திரன், சதாநிலன், அநத்தருத்திரன், நூறு பாதங்களை மற்றும் முகம் கொண்ட சர்வ லோகங்களையும் ஆளக் கூடியவர்களும், காண்போரை அச்சம் கொள்ளும் வகையில் முகமும், பயமுறுத்தும் புருவங்கள் மற்றும் அகலமும் உயரமும் கொண்ட கராளவதளனும், நான்கு முகங்களும் வெண்மையான மேனியும் பஞ்ச நாக்குகளும் விண் நோக்கிய காதுகளும், அதிக வேகமுடைய பாரபூதி என்பவனும், அவரை போன்ற வீரம் கொண்ட சதகோடி சைன்னியங்களும், தியானத்தில் சிறந்தவருமான சோமவர்ஷன் என்பவனும் வந்து சிவபெருமான் முன்னே தோன்றினார்கள்.

மகாகாயனும், நூறு கோடி ருத்திரர்கள், அஜைகபாதன், நிகும்பன், சங்கரன், சூரியாப்பியானன், ஸர்வமானி சந்திராயுதன், மகாதேஜன், கடாகடகன் என்ற கணவீரர்கள் ஆறுகோடி ருத்திர சைன்யத்துடன் வந்து சேர்ந்தார்கள். இவர்களைத் தவிர சூரியாப்வியானன், ஸ்வர்மானி, சந்திராயுதன், பகாதேகன், தடாகடன், சங்குகர்ணன், உஸ்மாண்டன், ஏகபாதன், தாரகேசன், பெப்த கிரோசனன், மகாபாலன், அபஸ்மாரன், பர்வதாபரணன், இமயன், மாருதயு, பிருங்கி ரிட்டன் என பலவித கணங்களுக்கும் தலைவர்களாக இருந்தவர்கள் கோடிக்கணக்கில் இருந்து வந்த வீரர்களும், சிவ படைகளும் ஒன்றாக அவ்விடத்தில் வந்து குழுமி நின்றனர். சிவனின் மைந்தர்களான விநாயகர், முருகர் மற்றும் வீரபத்திரன் என அனைவரும் அங்கு வந்து காட்சியளித்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக