Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

நளன் தமயந்தி திருமணம்...!


ளன், தேவர்களிடம் பணிவாக, நானும் தமயந்தியை மணம் புரிவதற்காகத்தான் வந்துள்ளேன். அப்படி இருக்கையில் எவ்வாறு என்னால் தூது செல்ல முடியும் என வினவினான். தேவர்கள், அரசே! தாங்கள் தூது செல்வதாக ஒப்புக் கொண்டு உள்ளீர்கள். அதனால் நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றனர். நளன், அரண்மனையில் பலத்த காவல்கள் இருக்கும். அவர்களை மீறி என்னால் செல்வது கஷ்டம் எனக் கூறினான். தேவர்கள், நளனே! நீ பயப்படாமல் உள்ளே செல்லலாம். காவலர்களால் உன்னை பார்க்க முடியாது எனக் கூறினர். அதன் பின் நளன், அரண்மனை நோக்கிச் சென்றான். அரண்மனைக்குள் செல்லும்போது காவலர்களால் நளனை பார்க்க முடியவில்லை. அதன் பிறகு தமயந்தி மாளிகையை அடைந்தான். நளனை கண்ட தமயந்தி, சிறிதுநேரம் சிலை போல் அப்படியே நின்றாள்.

 உணர்ச்சிப் பெற்ற அவள், இந்த ஆண்மகன் இவ்வளவு அழகுடையவனாய் இருக்கின்றான் என நினைத்தாள். அதன் பிறகு தமயந்தி நளனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கே வந்துள்ளாய்? நீ உள்ளே வரும்போது காவலர்கள் யாரும் உன்னை பார்க்கவில்லையா? எனக் கேட்டாள். நளன், தேவி! என் பெயர் நளன். நான் இங்கு தேவர்களின் தூதுவனாய் இங்கு வந்துள்ளேன். தேவர்களின் அருளால் என்னை காவலர்களால் பார்க்க முடியவில்லை. தேவர்களான இந்திரன், சூரியன், வருணன், யமன் சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக வந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நீ மணாளனாக தேர்ந்தெடுக்கலாம். நீ யாரை தேர்ந்தெடுக்க போகிறாய் என்பதை அறிந்துக் கொண்டு வரும்படி என்னை அனுப்பியுள்ளனர் என்றான்.

 தமயந்தி, அரசே! நான் என்னை தங்களுக்கு பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்டேன். அந்த அன்னப்பறவை என்னிடம் தங்களை பற்றி என்று கூறியதோ அன்றிலிருந்து என் மனது தங்களிடம் தான் உள்ளது. நான் தங்களை நினைத்துதான் இந்த சுயம்வரத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். நான் இந்த சுயம்வரத்தில் தங்களை மணம்புரிய விரும்புவதாக தேவர்களிடம் கூறுமாறு அனுப்பினாள். அதன் பின் நளன் தேவர்களிடம் சென்று, தமயந்தி தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினான். இதைக்கேட்டு தேவர்கள் புன்முறுவல் செய்தனர். நளனே! நாங்களும் சுயம்வரத்தில் உன் உருவத்தில் வர உள்ளோம். தமயந்தி உன்னை மனமார நேசித்தால் நிச்சயம் உன்னை தேர்ந்தெடுப்பாள். அப்படி அவள் உன்னை தேர்ந்தெடுத்துவிட்டால், நாங்கள் உனக்கு மேலான வரங்களை அளிப்போம் என்றனர்.

 சுயம்வரத்திற்கு அனைத்து அரசர்களும் வந்திருந்தனர். தேவர்களும் நளன் உருவில் அங்கு அமர்ந்திருந்தனர். தமயந்தி அவைக்கு அழைக்கப்பட்டாள். தமயந்தி கையில் மாலையுடன், மனதில் நளனை மட்டும் நினைத்துக் கொண்டு அவைக்கு வந்து சேர்ந்தாள். அங்கு நளனை போல் ஐவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். (தமயந்திக்கு மட்டும் தேவர்கள் நளனை போல் காட்சி அளித்தனர்.) நான் இந்த ஐவருள் என் மனதில் குடிக்கொண்ட மணாளனை எவ்வாறு தேர்வு செய்வேன் என குழம்பினாள். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமையை அறிந்துக் கொள்ளும் ஆற்றல் தமயந்தியிடம் இருந்தது.

 தேவர்கள் உடலில் வியர்வை இல்லை, இமைகள் கொட்டுவதில்லை, அவர்கள் கழுத்தில் உள்ள மலர்மாலைகள் வாடவில்லை, சரீரத்தில் அழுக்கு இல்லை, அவர்கள் அரியாசனத்தில் அமர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் கால்கள் தரையைத் தொடவில்லை. அவர்கள் நிழல் கீழே விழவில்லை என்பதை உற்று கவனித்தாள். அதன் பின் நளனை பார்த்தாள். நளனைப் பார்க்கும்பொழுது, அவரது நிழல் கீழே தரையில் விழுந்திருந்தது. கழுத்திலுள்ள மாலை வாடியிருந்தது. அவரது மேனியில் தூசியும், வியர்வையும் இருந்தன. கண்கள் இமைத்தன. கால்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருந்தன என்பதை உற்று கவனித்தாள். நளனை கண்டுக் கொண்ட தமயந்தி நாணத்துடன் நளனுக்கு மாலை சூடினாள். இதைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.

 இந்திரன் நளனை வாழ்த்தி, நீ யாகம் புரியும் போது தேவர்களை நேரில் காண முடிந்தவனாக இருப்பாய். உன் பூவுலக வாழ்க்கையின் முடிவு உனக்கு சொர்க்க பதவி தருவதாகவே இருக்கும் என்னும் இரண்டு வரங்களை அளித்தார். அக்னி நளனை வாழ்த்தி, நீ நினைக்கும் இடத்தில் நான் தோன்றுவேன். நீ என் துணையின்றி சமைக்கும் ஆற்றலையும் உனக்கு தருகிறேன் என்றார். எமன், நளனை வாழ்த்தி, நீ தர்மத்தை உறுதியாக பின்பற்றும் மனவலிமையுடன் திகழ்வாய் என்றார். வருணன், நளனை வாழ்த்தி, குதிரைகளை ஆட்டிப் படைக்கும் அஸ்வ மந்திரங்களை கூறினார். தேவர்களின் இவ்வரங்களை கண்டு தமயந்தியின் தந்தையும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். நளன் தமயந்தி திருமணம் அனைவர் முன்னிலையிலும் வெகுவிமர்சையாக நடந்தது.

 சுயம்வரம் முடிந்த பின் இந்திரன், சூரியன், வருணன், எமன் அவரவர் உலகத்திற்கு செல்லும் போது வழியில் கலிபுருஷனை சந்தித்தனர். கலிபுருஷனை பார்த்து, நீ எங்கே சென்றுக் கொண்டு இருக்கிறாய் எனக் கேட்டனர். கலிபுருஷன், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன் எனக் கூறினார். தேவர்கள், கலிபுருஷனை பார்த்து சிரித்துவிட்டு, நாங்களும் தமயந்தியின் சுயம்வரத்தில் இருந்து தான் திரும்பி வருகிறோம். தமயந்தியின் சுயம்வரம் முடிந்துவிட்டது. அவள் குணங்களில் சிறந்தவனான நளனை தேர்ந்தெடுத்துவிட்டாள் என்றனர். இதைக்கேட்டு கலிபுருஷன் கோபம் கொண்டான். தேவர்களான நம்மை புறகணித்துவிட்டாளே அவள். அவளை என் கோபத்துக்கு ஆளாக்குவேன் என்றார். தேவர்கள், தமயந்தி தேர்ந்தெடுத்து இருப்பவன், நற்குணத்தில் சிறந்தவன், தர்மநெறியில் நடப்பவன். நளன் தமயந்தி திருமணம் எங்கள் ஆசிர்வாதத்துடன் தான் நடந்தது எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றனர்.

கலிபுருஷனுக்கு அவர்கள் மேல் கோபம் குறையவில்லை. நளன் தமயந்தியின் வாழ்க்கையை அழித்தே தீர வேண்டும் என முடிவுக் கொண்டான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக