எம்பெருமான் காட்சி அளித்தல் :
தேவ மங்கையர்கள் கூறியதைக் கேட்ட தேவேந்திரன் இனி என்ன செய்வது? என்று சிந்திக்கத் தொடங்கிய வேளையில் எம்பெருமானின் காட்சிக்காக தவமிருந்த நாரதரின் தவமும் நிறைவுப்பெற துவங்கியது. அதாவது, நாரதர் மேற்கொண்ட தவத்தில் மனம் மகிழ்ந்த எம்பெருமான், நாரதருக்கு காட்சியளிக்கத் தொடங்கினார். எம்பெருமானை கண்ட நாரதர் மிகவும் மனம் மகிழ்ந்தார்.
எம்பெருமான் நாரதரை நோக்கி நாரதரே! உமது தவத்தினால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், உமக்கு வேண்டும் வரத்தைக் கேட்டுப் பெறுவாயாக என்றும் கூறினார். எம்பெருமானின் கூற்றுகளை கேட்ட நாரதர் மிகவும் மனம் மகிழ்ந்து எனது தவ நிலையை தாங்கள் ஏற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி எம்பெருமானிடம் இருந்து சில வரங்களை வேண்டினார். சிவபெருமானும் அவர் வேண்டிய வரத்தை அருளி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார்.
கர்வம் பிறப்பெடுத்தல் :
தவ நிலையில் வெற்றி கொண்டு எம்பெருமானிடம் வரங்களைப் பெற்று மகிழ்வுடன் இருந்த நாரதருக்கு தான் தவ நிலையில் ஆழ்ந்தபோது தேவர்களின் வேந்தனான தேவேந்திரன், தனது தவத்தை கலைக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டதும் மற்றும் தேவ மங்கையர்கள், அப்சரஸ்கள் என பலரை அனுப்பி தனது தவத்தினை கலைக்கச் செய்த முயற்சிகள் யாவும் வெற்றியடையாமல் தோல்வி அடைந்ததை அறிந்து கொண்டார். அத்தகவலை அறிந்ததும் நாரதர் மனதில் தான் காமனை வென்று விட்டதாகவும், பலரை வெற்றி கொண்ட காமனே தன்னிடம் தோற்றுவிட்டார் என்ற எண்ணம் தோன்றி அவரை ஆட்கொண்டு, அதுவே அவருக்கு கர்வமாக மாறத்தொடங்கியது.
பிரம்ம தேவரிடம் கூறுதல் :
சத்தியலோகம் சென்ற நாரதரோ... தான் தவம் செய்து எம்பெருமானிடம் இருந்து தான் விரும்பும் வரத்தினை பெற்றதையும், தனது வரத்தினை கிடைக்க விடாமல் தடுப்பதற்காக இந்திரன் மேற்கொண்ட முயற்சிகள் யாவற்றையும் முறியடித்து வெற்றி அடைந்துள்ளேன் என்றும் எடுத்துரைத்து, தேவர்களின் அதிபதியான தேவராஜனையே வென்றுள்ளேன் என்றும் பிரம்ம தேவரிடம் கூறினார்.
நான்முகனின் அறிவுரைகள் :
நாரதர் இவ்விதம் உரைப்பதை அறிந்த பிரம்ம தேவர் நீர் வெற்றி அடைவதற்கு முழு காரணம் எம்பெருமானின் அருள் பார்வையே என்று எடுத்துரைத்து அவரது கர்வத்தை குறைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தானே வெற்றி கொண்டவன், தேவராஜன் தன்னிடம் தோல்வியுற்றதை பெருமையாக எண்ணிக் கொண்டு நான்முகன் எடுத்துரைத்ததை ஏற்க இயலாத வகையில் அவரது கர்வமானது அவரது எண்ணத்தை மாற்றத் தொடங்கியது. பின்பு, அவ்விடம் விட்டு புறப்பட்டு இச்செய்தியை தான் என்றும் துதிக்கும், வைகுண்டத்தில் வாசம் செய்யும் திருமாலிடம் தெரிவிக்க அவர் இருப்பிடம் நோக்கி பயணிக்கத் தொடங்கினார் நாரதர்.
வைகுண்டத்தை அடைதல் :
நாரதர் வைகுண்டத்தில் வீற்றிருந்த பெருமாளை கண்டு அவரிடம் தாம் அடைந்த பெருமைகளையும், தான் பெற்ற வரங்களையும் எடுத்துரைத்து தம்மைப் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார். இதைக் கேட்ட திருமாலும், பிரம்ம தேவரை போன்றே உனது தவத்திற்கான முழு பலனானது எம்பெருமானின் கருணையால் மட்டுமே கிடைக்கப் பெற்றவை ஆகும். அதனால் மட்டுமே நீர் தேவ மங்கையர்கள் செய்த அனைத்து செயல்களிலும் வெற்றி கொண்டு உமது எண்ணத்தை அடைந்துள்ளாய் என்று எடுத்துரைத்தார். ஆனால், நாரதரோ திருமாலின் கூற்றுகளை ஏற்காமல் தன்னுடைய முயற்சியால் மட்டுமே தான் தேவர்கள் அனைவரையும் வெற்றி கொண்டுள்ளோம் என்பதை திடமாக எண்ணிக் கொண்டிருந்தார்.
நாரதரின் கர்வத்தை போக்க விரும்பிய திருமால் :
நாரதரின் கர்வத்தை அகற்ற வேண்டும் என எண்ணினார் திருமால். நாரதரின் இந்த தவறானது அவருடைய நடைமுறை வாழ்க்கையில் நிகழ்ந்தால் மட்டுமே அதை உணர்ந்து தனது தவறை திருத்திக்கொள்வார் என்பதை அறிந்து கொண்டார் திருமால். அதற்கு தகுந்த வாய்ப்புகளும் அக்கணமே திருமாலுக்கு தோன்றியது.
அதாவது ஸ்ரீபுரத்தில் இருக்கும் அம்பரீச சக்ரவர்த்தியின் மகளான ஸ்ரீமதிக்கு திருமணம் செய்ய சுயம்வர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்பினை நாரதர் தன் மனதில் வைத்துள்ள கர்வத்தை போக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் திருமால்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக