Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

பிரஹதஸ்வர முனிவர் விடைபெறுதல்...!

மயந்தி, சுதேசனிடம் அயோத்திக்கு சென்று ருதுபர்ணனையும் சுயம்வரத்திற்கு வரச்சொல்லி அழைப்பு விடுமாறு கூறினாள். அவ்வாறு சுதேசனும் அயோத்திக்கு சென்று சுயம்வரத்திற்கான அழைப்பு விடுத்தான். இச்செய்தி நளனுக்கு தெரிய வந்தது. நளன் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். ருதுபர்ணன், நளனை அழைத்து, விடிந்தால் சுயம்வரத்திற்காக விதர்ப்ப நாட்டிற்கு செல்ல வேண்டும். விதர்ப்ப நாட்டிற்கு சுயம்வரத்திற்குள் உன்னால் தேர் செலுத்த இயலும் தானே? எனக் கேட்டார். இதைக்கேட்டு நளன், மிகவும் கவலைக் கொண்டான். ருதுபர்ணன், நளனிடம், புறப்படுவதற்கு தேர் தயாராக இருக்கட்டும் என்றார். நளனுக்கு தமயந்தியின் செயல் புரிந்தது. தேவி, என்னை காண இத்தகைய நாடகம் நடத்த வேண்டியாதயிற்று. நீ கவலைக் கொள்ளாமல் இரு. நிச்சயம் உன்னை காண நான் வருவேன் என மனதிற்குள் நினைத்தான்.

ருதுபர்ணனும், நளனும் அயோத்தியில் இருந்து விதர்ப்ப நாட்டை நோக்கி பயணம் செய்தனர். நளன் அஸ்வ மந்திரம் ஓத தேர் வானில் பறந்தது. இதைக் கண்டு ருதுபர்ணன் அதிசயித்தான். நளனை பார்த்து, பாஹீகா! உன்னை போல் ஒரு ரத சாரதியை நான் இதுவரையில் கண்டதில்லை. நீ கற்றிருக்கும் அஸ்வ மந்திரத்தை எனக்கு கற்று கொடுப்பாயா எனக் கேட்டான். நளன், அரசே! எனக்கு அஸ்வ மந்திரம் கற்றுக் கொடுப்பதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. இந்த மந்திரத்தை கற்று கொடுத்தால் தாங்கள் எனக்கு குருதட்சணை தர வேண்டும் என்றான். இதைக் கேட்டு மகிழ்ந்த ருதுபர்ணன், உனக்கு வேண்டும் குருதட்சணையை நான் தருகிறேன் என்றான். அரசே! தாங்கள் சூதாடுவதில் மிகவும் வல்லவர். தாங்கள் ஒருபோதும் சூதில் தோற்றதில்லை. அதனால் அந்த வித்தையை தாங்கள் எனக்கு கற்று தர வேண்டும் என்றான்.

ருதுபர்ணன், நான் உனக்கு கற்று தருகிறேன் என்றார். உடனே நளன், ரதத்தை கரை ஓரமாக நிறுத்தினான். ருதுபர்ணனும் நளனுக்கு சூதாட்ட நுட்பங்களை விரிவாக கற்றுக் கொடுத்தான். நளனை இத்தனை நாள் கஷ்டப்படுத்தி வந்த கலிபுருஷனால் இதற்குள் நளனின் உடம்பில் தங்க முடியவில்லை. நளனின் உடம்பில் இருந்து வெளியே வந்தான். கலிபுருஷன் நளனிடம், அரசே! தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் நான்தான். என்னால் தங்களுக்குள் இருக்க முடியவில்லை. காரணம், கார்கோடனின் விஷம் மட்டுமின்றி, எனக்கான சூதாட்ட வித்தை என் தயவில்லாமல், உங்களுக்கு வசமாகி விட்டது. இனியும் நான் தங்களுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை. தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் கதையை யார் கேட்டாலும் அவர்களுக்கு நான் நன்மையே செய்வேன். தாங்கள் என்னை சபிக்காமல் மன்னிக்க வேண்டும் என்றான். நளனும் கலிபுருஷனை மன்னித்தருளினான்.

அதன் பிறகு நளன் ருதுபர்ணனுடன் விதர்ப்ப நாட்டை அடைந்தான். நளனும், ருதுபர்ணனும் அரண்மனையை நோக்கி வருவதை தமயந்தி மாடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தேரின் வேகத்தை கண்டு தேரை செலுத்துபவர் நளன் என்பதை யூகித்தாள். அரண்மனைக்குள் ருதுபர்ணனும், நளனும் சென்றனர். அரண்மனையில் இருந்த தன் குழந்தைகளை கண்ட நளனுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் கண்ட தமயந்தி, கண்ணீர் தழும்ப நளனின் அருகில் ஓடி வந்தாள். நளனை பார்த்து, தாங்கள் ஏன் இந்த கோலத்தில் இருக்கின்றீர்கள் எனக் கேட்டாள். நளன், தமயந்தி! என்னை மன்னித்து விடு. நான் செய்த தவறுக்கு நீ துன்பப்படுவதை என்னால் காண இயலவில்லை. அதனால் தான் உன்னை விட்டு பிரிந்தேன்.

நான் உன்னை விட்டு பிரிந்த பிறகு கார்கோடன் என்னும் பாம்பை சந்தித்தேன். அவரின் உதவியால் தான் என்னை கலிபுருஷன் பீடித்திருப்பதை அறிந்தேன். அவனிடமிருந்து விடுபடும் பொருட்டே நான் இந்த கோலத்தில் இருக்கின்றேன். தேவியே! என்னை சந்திக்கவே நீ இத்தகைய நாடகத்தை அரங்கேற்றி உள்ளாய் என்பதை அறிவேன். இனியும் உனக்கு நான் கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை எனக் கூறி நளன் கார்கோடனை நினைத்து அந்த ஆடையை அணிந்தான்.

நளன் பழைய உருவத்தினை பெற்றான். நளன் நிஷத நாட்டின் சக்கரவர்த்தி என்பதை அறிந்த ருதுபர்ணன், நளனிடம், தங்களிடம் நான் அஸ்வ மந்திரத்தை கற்றுக் கொண்டதில் பெருமை அடைகிறேன். அதன் பிறகு ருதுபர்ணன் அங்கிருந்து விடைப்பெற்றான். நளனும், தமயந்தியும் நிஷத நாட்டிற்கு திரும்பினர். நிஷத நாட்டிற்கு சென்று புஷ்கரனிடம் நான் சூதாட தயாராக இருப்பதை கூறினான். அதன் பிறகு இருவரும் சூதாடினர். இறுதியில் நளன் வெற்றி பெற்றான். தான் இழந்த பொன், பொருள், மாளிகை என அனைத்தையும் திரும்ப பெற்றான்.

தன் சகோதரன் செய்த சூழ்ச்சியை மன்னித்து விடுவித்தான். தமயந்தியின் பதிபக்தியை உலகமே அறிந்து பாராட்டியது. நளனும், தமயந்தியும் எவ்வித துன்பம் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

இக்கதையை கூறி முடித்தவுடன் பிரஹதஸ்வர், பாண்டவர்ளின் முகங்களை பார்த்தார். அனைவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. யுதிஷ்டிரரிடம், தர்மா! இப்பொழுது நீ நளனைக் காட்டிலும் மேலான புண்ணியம் செய்தவன் தானே? என்றார். யுதிஷ்டிரன், ஆம் மகரிஷி! நளனை போலவே நாங்கள் இழந்தததை மீண்டும் பெறுவோம்.

நகுலன், நாம் இங்கு வனவாசம் வந்ததால் நளன் தமயந்தியின் கதை கேட்கும் பாக்கியம் உண்டாயிற்று. திரௌபதி இக்கதையில் இருந்து வெளி வராமல் அப்படியே இருந்தாள். மகரிஷி, திரௌபதி! என அழைத்தார். அதன் பின் திரௌபதி தன்னிலைக்கு வந்தாள். மகரிஷி! இக்கதையின் கூற்று என் மனதை பாதித்து விட்டது என்றாள். பீமனும், சகாதேவனும், நாங்கள் நிச்சயம் இந்த துன்பத்திலிருந்து மீண்டு நல்வாழ்வு பெறுவோம் என்றனர். அதன் பிறகு மகரிஷி, அவர்களுக்கு தன் ஆசியை வழங்கிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்று சென்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக