Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி148


நாரதரை பூலோகம் அனுப்புதல் :

திருமால் நாரதரை நோக்கி நாரதரே! பூலோகத்தில் ஸ்ரீபுரத்து அரசன் தனது மகளுக்கு சுயம்வர ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கும் செய்தியை அறிந்தீர்களா? என்று கேட்டார். அதைக் கேட்ட நாரதருக்கு தாமும் அவ்விடத்திற்கு சென்று சுயம்வர நிகழ்வை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. தம் மனதில் அவ்வெண்ணம் தோன்றியவுடன் நாரதர், திருமாலிடம் விடைபெற்றுக் கொண்டு பூலோகம் புறப்பட்டார்.

மனமாற்றம் :

பூலோகத்தை அடைந்ததும் சுயம்வரத்திற்காக அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை கண்டதும் நாரதருக்கு மிகவும் புதுவிதமான அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அரண்மனைக்குச் சென்ற அவர், அரசனின் மகளான ஸ்ரீமதியை கண்டதும் அவளின் அழகைக் கண்டு தான் துறவி என்ற எண்ணத்தையும் மறந்து அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நாரதருக்குத் தோன்றத் தொடங்கியது. ஸ்ரீமதியின் அழகினால் இதுவரை துறவு என்ற நிலையில் இருந்து வந்த அவரின் மனமானது சஞ்சலம் நிறைந்த மனமாக மாறத் தொடங்கியது.

பின்பு ஸ்ரீமதியை தானே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கத் துவங்கியது. தனது மனதில் தோன்றிய அந்த எண்ணங்களை அரசனிடம் எடுத்துரைத்து தானே உங்களின் மகளை மணம் புரிந்து கொள்கிறேன் என்று கூறி, உங்களது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் அரசனுக்கு தாங்கள் மூன்று உலகங்களிலும் பயணம் செய்யக்கூடிய ஒரு மாபெரும் மகரிஷி ஆவீர்கள். தங்களுக்கு என்னுடைய புதல்வியை திருமணம் செய்து வைப்பதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். ஆனால் என்ற ஒரு சிறு தயக்கத்துடன் காணப்பட்டார்.

பின் ஒரு சிறு தயக்கத்துடன் காணப்படுகிறீர்கள் என்று நாரதர் அரசனிடம் கேட்டார். அரசனோ தன் மகள் திருமாலை மட்டுமே மணம் முடிப்பேன் என்று கூறிக் கொண்டுள்ளார் என்று கூறினார். அரசன் இவ்விதம் உரைத்ததைக் கேட்டதும் அதுவரை நாரதரின் மனதில் இருந்த மகிழ்ச்சியானது குறையத் துவங்கியது. அதன் பின் சிறிது கணப்பொழுதிலே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

நாரதர் அரசனிடம் உங்கள் மகளின் விருப்பம் போலவே அவள் திருமாலையே மணப்பாள் என்றும், அதற்கான ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றும் கூறி அவ்விடமிருந்து திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார்.

வரம் பெறுதல் :

வைகுண்டத்தில் வீற்றிருந்த திருமாலை கண்டதும் அவரை வணங்கி நின்றார் நாரதர். நாரதரை கண்டதும் திருமாலும் என்ன நாரதரே... இப்பொழுதுதான் நீங்கள் பூலோகம் சென்றீர்கள் அதற்குள் என்னவாயிற்று, தாங்கள் இவ்விடம் வந்ததற்கான காரணம் என்னவோ? என்று எதுவும் அறியாதது போல் நாரதரிடம் வினவினார். பின்பு நாரதரோ அவரிடம் எனது சிந்தையில் நீங்காமல் என்றும் வீற்றிருக்கும் நாராயணனே நான் தங்களிடம் ஒரு வரம் வேண்டி வந்துள்ளேன் என்று கூறினார்.

என்ன வரம் வேண்டும் நாரதரே? என்று ஒன்றுமே தெரியாதது போல் அவரிடம் கேட்டார் நாராயணன். அதாவது, நான் என் மனதில் நினைக்கும் போதெல்லாம் என்னை யார் பார்த்தாலும் அந்நேரத்தில் ஹரியின் முகமாக என் முகம் தோற்றப்பொலிவு அளிக்க வேண்டும் என்ற வரத்தை மட்டும் தாங்கள் அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார் நாரதர். எதற்காக என் முகம் போன்று உனக்கு தோற்றமளிக்க வேண்டும் என்று வினவினார் நாராயணன்.

ஆனால், நாரதருக்கோ எடுத்துரைக்க பொறுமை இல்லாது, பிரபுவே! பூலோகத்தில் ஒரு முக்கியப் பணி ஒன்று உள்ளது. அதை செய்வதற்காக மட்டுமே நான் தங்களின் ஹரியின் முகம் போன்ற தோற்றப்பொலிவு வேண்டுகின்றேன். அப்பணியை முடித்துவிட்டு அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன் என்றும், தாங்கள் நான் கேட்ட வரத்தை மட்டும் தந்தருள வேண்டும் என்றும் வேண்டி நின்றார். நிகழ்வதை நன்றாக உணர்ந்த நாராயணரும் நாரதர் வேண்டிய வரத்தை தந்தருளினார்.

சுயம்வரம் ஏற்பாடு செய்தல் :

நாராயணரிடம் இருந்து தான் விரும்பிய வரத்தினைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் ஸ்ரீபுரத்தை அடைந்து அங்கிருந்த அரசனிடம் சென்று நாளைக்கு உனது மகளுக்கான சுயம்வரத்திற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுங்கள் என்றும், உங்களது மகள் எனக்கு மாலையிடுவாள் என்றும் கூறினார் நாரதர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக