நாரதரின் கூற்றுகளை கேட்ட அரசனும் சற்று தயக்கத்துடன் காணப்பட்டார். ஏனெனில் தனது மகள் நாராயணனை தவிர்த்து வேறு எந்த ஆண் மகனையும் திருமணம் புரிய மாட்டாள் என்பதில் அவர் நம்பிக்கையும், உறுதியும் கொண்டிருந்தார். அரசனுடைய தயக்கத்தை கண்ட நாரதர் தயக்கம் தேவையில்லை என்பதை எல்லாம் நன்மைக்கே, நாளை உனது மகள் எனக்கு மாலையிடுவாள் என்று கூறினார். வேந்தனும் தனது மகளின் விருப்பத்தை அறிந்துகொள்ள தனது மகளை அழைத்து விருப்பம் உள்ளதா? என்று கேட்டு அதற்கு தகுந்தாற்போல அலங்காரங்களை மேற்கொள்ள விரும்பினார்.
ஸ்ரீமதியின் அலறல் :
ஸ்ரீமதி அவ்விடம் வருவதை அறிந்த நாரதர் அந்நேரத்தில் தனது மனதில் ஹரியின் முகம் தெரிய வேண்டும் என்று விரும்பினார். தந்தை மற்றும் நாரதர் இருந்த அறைக்கு வந்த ஸ்ரீமதி நாரதரை பார்த்த அடுத்த கணப்பொழுதில் அலறல் சத்தத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடி வந்தாள். மகள் அலறுவதை கண்ட அரசனுக்கோ என்னவாயிற்று மகளே? என்று தன் மகளின் பின்னே தந்தையும் சென்று என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீமதி தனது தந்தையிடம் தந்தையே அவரை கொஞ்சம் பாருங்கள் என்று நாரதரின் பக்கம் கை காட்டினார். அங்கு அவரும் நாரதரை பார்க்க நாரதரின் முகம் குரங்கு முகமாக தோற்றமளிப்பதை கண்டு அவரும், அருகில் இருந்தவர்களும் புன்னகைத்தனர். நிகழ்வது யாது என்று அறியாமல் ஏன்? அனைவரும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அரசனைப் பார்த்து நாரதர் வினாவினார். மகரிஷியே என்னை மன்னிக்கவும். தங்களின் முகத்தினை அருகில் உள்ள கண்ணாடியில் பாருங்கள்... நாங்கள் சிரித்ததற்கான காரணம் யாது என்று தங்களுக்கு புரியும் என்று அரசர் கூறினார்.
நாரதரின் கோபம் :
நாரதரும் தன் அருகில் இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் பொழுது ஹரியின் முகம் தெரிவதற்கு பதிலாக குரங்கு முகமாக காணப்பட்டது. ஹரி என்பதற்கு குரங்கு என்றும் மற்றொரு பொருள் உண்டு என்பதனை அறிந்தார் நாரதர்.
ஹரியின் முகம் வேண்டும் என்று தான் வேண்டியதற்கு குரங்கு முகம் அளித்து தன்னை ஏமாற்றி விட்டார் நாராயணன் என்று மிகுந்த கோபத்துடன் அவ்விடத்தைவிட்டு வைகுண்டம் நோக்கி தனது பயணத்தை தொடங்கினார் நாரதர். வைகுண்டம் சென்றடைந்ததும் அங்கு கண்ட மற்றொரு காட்சி அவருக்கு இருந்த கோபத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. அதாவது தான் யாரை மணக்க வேண்டும் என்று நாராயணனிடம் இருந்து வரம் பெற்றோமோ அந்த ஸ்ரீமதி திருமணக்கோலத்தில் நாராயணனின் அருகில் இருப்பதை கண்டதும் அவரது கோபம் எல்லை கடந்து திருமாலுக்கு சாபம் அளிக்கும் வகையில் உருவாயிற்று.
சாபம் அளித்தல் :
பிரபுவே என்றுமே உங்களை சிந்தையில் வைத்து வணங்கக்கூடிய என்னையே தாங்கள் ஏமாற்றி விட்டீர்கள். இந்த கர்மத்திற்கு உண்டான பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் என்று கூறி நீங்களும் மானிடப் பிறப்பெடுத்து தங்களின் மனைவியை ஒருவன் தூக்கிச் செல்ல, அவள் இன்றி வருந்தி துன்பப்படுவீர்கள். அவ்வேளையில் உங்களுக்கு உதவ வானர வீரர்களே வருவார்கள் என்று சாபமளித்தார்.
நாரதரின் சாபத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட நாராயணன் பூலோகத்தில் என்னுடைய காரியத்தை நிறைவேற்ற தங்களின் சாபம் எனக்கு அவசியமானதாகும் என்று கூறினார். ஆனால், தாங்களும் முற்றும் துறந்த முனிவர் ஆயிற்றே, காமனையும் வென்றவர் ஆயிற்றே, தங்களுக்கு ஏன் இந்த திருமண பந்தத்தின் மீது ஈர்ப்பு உண்டாயிற்று? என்று வினவினார் நாராயணன்.
தவறினை உணர்தல் :
அப்போதுதான் ஸ்ரீ நாராயணன் நிகழ்த்திய திருவிளையாடல் நாரதருக்கு புலப்படத் தொடங்கியது. தனது தவறினை திருத்திக் கொள்வதற்காகவே நிகழ்த்தப்பட்டது இந்த திருவிளையாடல் என்பதை உணர்ந்தார் நாரதர். தான் செய்த தவறை எண்ணி நாராயணனிடம் மன்னிப்பும் வேண்டினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக