Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 மார்ச், 2020

பீமனும்...! குபேரனும்...!


 னுமன் பீமனிடம், பீமனே! உனக்கு வேண்டும் வரத்தை என்னிடம் கேள் என்றார். பீமன், அண்ணா! தர்மத்திற்காக நடக்கவிருக்கும் போரில் தாங்கள் அர்ஜூனனின் தேரில் கட்டப்படும் கொடியில் வந்து அமர வேண்டும் எனக் கேட்டான். அனுமன், அவ்வாறே வரம் அளித்தார். 

அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன். உன் எதிரிகளால் ஒருபோதும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆசி கூறினார். பிறகு அனுமன் நீ தேடி வந்த சௌகந்திகம் மலர் குபேரனுக்கு உட்பட்டு மிகவும் காவல் காக்கப்பட்டு வருகிறது. 

அவ்விடத்தில் அரக்கர்கள் பலர் சூழ்ந்திருக்கின்றனர். அதனால் நீ மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் எனக் கூறி விட்டு குபேரபுரி செல்வதற்கான வழியைக் காண்பித்தார். அதன் பிறகு பீமன் அனுமனிடம் இருந்து விடைப்பெற்று சென்றான்.

 போகும் வழியில் பீமனை பல அரக்கர்கள் வழி மறித்தனர். பீமன் அவர்கள் அனைவரையும் தன் பலத்திற்கு இரையாக்கினான். ஒரு வழியாக பீமன் குபேரபுரியை அடைந்தான். குபேரபுரியை சூழ்ந்து பல அரக்கர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர். பீமனை கண்ட அரக்கர்கள், மானிடனே! நீ எவ்வாறு இங்கே வந்தாய்? உன் உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து ஓடி விடு என எச்சரித்தனர். இதைக் கேட்டு கோபம் கொண்ட பீமன் அரக்கர்களை அடித்துக் கொன்றான். இச்செய்தி குபேரனுக்கு தெரிவிக்கப்பட்டது. 

குபேரன், அந்த மானிடனை இங்கே அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டான். குபேரனின் கட்டளையின்படி சென்ற அரக்கர்களையும், பீமன் அடித்து வீழ்த்தினான். இதை பார்த்து சில அரக்கர்கள் குபேரனிடம் ஓடிச் சென்று, வந்து இருப்பவன் மானிடன் போல் தெரியவில்லை. சிவபெருமான் போல் இருக்கிறான் என்றனர்.

 இதைக் கேட்டு குபேரன் அதிர்ச்சி அடைந்தான். உடனே தன் இளைய மகனை அழைத்து, மகனே! இங்கு ஒரு மானிடன் நம் நகரை அழித்துக் கொண்டிருக்கிறான். அவன் யார் என்பதை அறிந்து கொண்டு வா? எனக் கூறினான். குபேரனின் மகன் பீமனிடம் சென்றான். நீ யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? என வினவினான். பீமன், நான் கிருஷ்ணனின் மைத்துனன். இங்கு சௌகந்திகம் என்னும் மலரை பறிப்பதற்காக வந்துள்ளேன் எனக் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ந்த குபேரனின் மகன், உடனே நந்தவனத்திற்கு சென்று சௌகந்திகம் மலரை பறித்துக் கொண்டு வந்தான்.

 அங்கு கைலாயத்தில் பீமனை வெகு நேரம் ஆகியும் காணாததால் சகோதரர்கள் மிகவும் கவலை அடைந்தனர். திரௌபதி, நான் சௌகந்திகம் மலரை விரும்பி கேட்டதன் பயனாய் பீமன் சென்றுள்ளதாக கூறினாள். போகும் வழியில் பீமனுக்கு என்னென்ன இடையூறுகள் ஏற்பட்டதோ என நினைத்து திரௌபதியும், சகோதரர்களும் வருந்தினர். யுதிஷ்டிரன், பீமனின் மகன் கடோத்கஜனை நினைத்தான். கடோத்கஜன் பீமன் முன் தோன்றினான். யுதிஷ்டிரன், உன் தந்தை பீமன் இங்கிருந்து சென்று வெகுநேரம் ஆகிவிட்டது. எங்களால் பீமன் எங்குள்ளான் என்பதை கண்டறிய முடியவில்லை. உன் தந்தை ஏதேனும் ஆபத்தில் சிக்கி கொண்டாரோ என்பதும் தெரியவில்லை. அதனால் நீ, உன் தந்தை இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்வாயாக எனக் கேட்டான்.

 உடனே கடோத்கஜன், தர்மர், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதியை தூக்கிக் கொண்டு பீமன் இருக்கும் இடத்திற்கு விரைந்துச் சென்றான். கடோத்கஜன், அவர்கள் அனைவரையும் குபேரபுரிக்கு அழைத்துச் சென்று பீமன் முன் நிறுத்தினான். பீமனை கண்ட அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். தர்மர் குபேரபுரிக்கு வந்திருப்பதை அறிந்த குபேரன், தர்மனை வரவேற்க மலர்களுடன் சென்றான். தர்மர் மற்றும் அவனது சகோதரர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அனைவரும் குபேரனிடம் இருந்து விடைப்பெற்று காம்யவனத்தை நோக்கிச் சென்றனர்.

 ஒருமுறை சடாசரன் என்னும் அரக்கன் திரௌபதியின் அழகை கண்டு அவளை கவர பார்த்தான். இதைக் கண்ட பீமன், அவ்வரக்கனை அடித்து வதம் செய்தான். அதன் பிறகு அவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினர். போகும் வழியில் திரௌபதி ஐந்து வண்ணங்கள் உடைய மலரை கண்டாள். அம்மலரின் அழகில் மயங்கிய திரௌபதி இம்மலர் தனக்கு வேண்டும் எனக் கேட்டாள். ஆனால் அந்த மலர் குபேரனின் வசத்தில் இருப்பதை அவர்கள் அறிந்தனர். உடனே பீமன், நான் அந்த மலரை பறித்துக் கொண்டு வருகிறேன் என விரைந்துச் சென்றான். அங்கு குபேரபுரியில் மணியான் என்னும் தளபதி பீமனுடன் போரிட்டு வீழ்ந்தான். இச்செய்தியை அறிந்து குபேரன் கோபம் கொண்டான்.

 தம்பியை காணாததால் தருமர், குபேரபுரி வந்தடைந்தான். அங்கு பீமனால் மணிமான் என்னும் தளபதி வீழ்ந்து கிடப்பதை கண்டான். குபேரனை பார்த்து, மணிமான் மானிடன் ஒருவனால் கொல்லப்பட வேண்டும் என்பது அவனது விதி என்பதை கூறி குபேரனை தெளிவடையச் செய்தான். இதைக்கேட்டு குபேரனின் கோபம் தணிந்தது. அதன் பிறகு குபேரன், தருமருக்கு பல பொருட்களை பரிசாக அளித்து வழி அனுப்பினான். பாண்டவர்கள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்த போது, பீமன் புதர்களின் அடியில் அகப்பட்டு இருந்த பாம்பை மிதித்துவிட்டான். அப்பாம்பு பீமனின் கால்களை நன்கு சுற்றிக் கொண்டது. இடும்பன், ஜராசந்தன் முதலியவர்களை வீழ்த்திய நம்மால் இப்பாம்பிடம் இருந்து விடுபட முடியவில்லையே என பீமன் வருந்தினான்.

பீமனின் நிலைமையைக் கண்ட தருமர், பாம்பை பார்த்து, நீ யார்? என வினவினான். பாம்பு, நான் நகுஷன் என்னும் மன்னன். அகஸ்திய முனிவரின் சாபத்தால் பாம்பாக மாறியுள்ளேன். நீ என்னுடன் விவாதம் செய்தால் நான் சாப விமோச்சனம் பெறுவேன் என்றது. நகுஷன் என்னும் பெயரை அறிந்த தருமர், நம் முன்னோருள் ஒருவர் தான் நகுஷன் என்பதை தெரிந்துக் கொண்டான். நகுஷன், சொன்னது போலவே தருமர் விவாதம் செய்தான். சிறிது நேரத்தில் சாப விமோச்சனம் பெற்ற நகுஷன் தருமரை வாழ்த்திவிட்டு விண்ணுலகை நோக்கிச் சென்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக