திருமால் உதயமாதல் :
புத்திரர்களின் மறைவினால் எவ்விதமான பணிகளிலும்
ஈடுபடாமல் ஆழ்ந்த மனவேதனையில் வாழ்ந்து கொண்டிருந்த வசிஷ்டரின் மனநிலையை அறிந்த
திருமால் வசிஷ்டரின் முன் தோன்றினார். அவ்விடத்தில் திருமாலைக் கண்டதும் அவரை
வணங்கினார் வசிஷ்டர். பின்பு திருமால் வசிஷ்டரை நோக்கி சப்தரிஷிகளில் ஒருவரான
தாங்கள் புத்திர சோகத்தால் தங்களின் பணிகளை செய்யாமல் இருப்பது உசிதமாகாது.
உன்னுடைய புத்திரர்கள் மாண்டு விட்டதால் இனி உனது வம்சம் விருத்தி அடையாது என்று எண்ணினால் அதை அக்கணமே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், திரிசந்தியின் வயிற்றில் பிறக்கும் புத்திரன் உங்கள் வம்சத்தை விருத்தி அடையச் செய்வான் என்று கூறினார்.
திருமால் எடுத்துரைத்த ஆறுதல்களினால் தனது மனதை தேற்றிக்கொண்டு தன்னுடைய அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளத் தயாரானார் வசிஷ்டர். தனது மனநிலையை அறிந்து தனது பணிகளை மேற்கொள்ள உதவிய திருமாலை மனதார வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். பின், திருமால் அவ்விடம் விட்டு மறைந்து சென்றார்.
பராசரர் பிறத்தல் :
பின்பு, தனது மருமகளான திரிசந்தியை தனது ஆசிரமத்திலேயே தங்க வைத்து புத்திரப்பேறுக்கான அனைத்து காரியங்களையும் முன்னின்று செய்து கொண்டிருந்தார். அவர்களின் ஆரோக்கியத்திலும், அவர்கள் மனம் கோணாத வகையிலும் அனைத்து சூழல்களையும் தன்னால் இயன்றளவு தனது மருமகளுக்கு அளித்துக்கொண்டிருந்தார்.
நாட்களும் கடக்கத் தொடங்கின. அவர்கள் எதிர்பார்த்த வகையிலேயே புத்திரப்பேறு ஆனந்தம் அளிக்கும் வகையில் உண்டாயிற்று. உரிய காலத்தில் திரிசந்தி மிகுந்த அழகுடன் பிரகாசமான ஒளி பொருந்திய ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தாள். அந்த ஆண்மகனை கண்டதும் வசிஷ்டர், பராசரர் என்னும் நாமத்தை சூட்டி மகனை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்க்கத் தொடங்கினார்.
வசிஷ்ட முனிவர் தனது மகன்களுக்கு நற்கதியை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்ட புதல்வனே! நீ என்றென்றும் நீடூடி வாழ வேண்டும் என்றவாறு பாலகனை வாழ்த்தி மிகவும் அன்புடனும், பண்புடனும் வளர்த்து வந்து கொண்டிருந்தார்.
ஐயம் ஏற்படுதல் :
சிறு பாலகனாக இருந்த பராசரர் வசிஷ்ட முனிவரிடம் வேத சாஸ்திரங்களை கற்று தேர்ச்சி அடைந்தார். அவரின் பருவம் வளர்ச்சி அடைய, அடைய அவர் மனதில் பலவிதமான கேள்விகள் தோன்றத் தொடங்கின. அதாவது தனது அன்னையின் முகத்தில் எவ்விதமான பொலிவும், மகிழ்ச்சியும் இல்லாமல் இருப்பது அவருக்கு ஒருவிதமான மனக்குறையை ஏற்படுத்தியது.
அதாவது தனது பாட்டியான அருந்ததி தேவி மங்கலநாண் அணிந்து நெற்றியில் திலகமிட்டு பொலிவுடன் காணப்படுவதும், மற்ற பெண்கள் அவ்விதம் இருப்பதும்.... ஆனால், தன் தாயோ எவ்விதமான பொலிவுமின்றி எல்லா வேளையிலும் மிகவும் கவலையுடன் காட்சியளிப்பது அவர் உள்ளத்தில் பலவிதமான கேள்விகளை உருவாக்கத் தொடங்கியது.
ஐயம் தெளிவுப்படுதல் :
மனதில் தோன்றிய கேள்விகளை தன் தாயிடம் கேட்க முயலும்போது தான் கேட்கும் கேள்விகளால் தாய் மிகவும் வேதனைப்படுவார் என்று எண்ணி மௌனம் காத்து வந்தார் பராசரர். இதற்கும் காலம் கனிந்து அதற்கான சூழலும் ஏற்படத் தொடங்கின. பராசரர் ஒருமுறை தன் தாயிடம் தாங்கள் ஏன் இந்நிலையை அடைந்துள்ளீர்கள்? என் தந்தைக்கு என்னவாயிற்று? என்ற விதத்தில் அவர் தனது கேள்விகளை தன் தாயிடம் கேட்க தொடங்கினார். தாங்கள் மற்ற பெண்களைப் போல் இல்லாமல் ஏன் இந்த கோலத்திலேயே இருக்கின்றீர்கள் என்று மிகவும் பரிவுடன் தனது தாயின் மனம் துன்புறாத வகையில் தன் தாயிடம் கேட்டார்.
தந்தையை பற்றி அறிதல் :
திரிசந்தியோ தனது மகனிடம் நமக்கு இந்நிலை ஏற்பட்டது என்பது இயற்கையானது அல்ல, உன் தந்தையையும் அவருடன் பிறந்த 99 சகோதரர்களையும் நயவஞ்சகமாக உதிரன் என்னும் அரக்கன் கொன்றுவிட்டான். அதனால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கண்ணில் கண்ணீர் மல்க மிகவும் வருத்தத்துடன் தன் மகனிடம் எடுத்துரைத்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக