Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 150


அசுரன் உருவாதல் :

கௌசிக முனிவருக்கும், வசிஷ்ட முனிவருக்கும் இடையே இருந்து வந்த பகை உணர்வினால் வசிஷ்ட முனிவருக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கௌசிக முனிவர். அதற்காக உதிரன் என்னும் ஒரு கொடிய அசுரனை உருவாக்கினார். அந்த அசுரனுக்கு பலவித வித்தைகளையும் கற்றுக்கொடுத்து வசிஷ்ட முனிவரின் புதல்வர்களை கொன்று வருமாறு ஆணைப் பிறப்பித்தார்.

புத்திரர்களை கொல்லுதல் :

அந்த அரக்கன் வசிஷ்ட முனிவரின் இருப்பிடத்திற்கு அவர் இல்லாத சமயமாக பார்த்து நித்திரையில் இருந்து வந்த வசிஷ்ட முனிவரின் புதல்வர்களான சக்தி உட்பட நூறு புதல்வர்களையும் கொன்று குவித்தான். தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்கு சென்றிருந்த வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தங்களது இருப்பிடத்திற்கு வந்ததும், தனது மகன்கள் அனைவரும் மாண்டு கிடப்பதைக் கண்டு நிகழ்ந்தது யாது? என்று அறியாமல் கதறி அழுது கொண்டிருந்தார்.

பெற்றோரின் மனவேதனை :

வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தனது மகன்களுக்கு நிகழ்ந்த நிலையைக் கண்டு மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்திருந்தார். தங்களது இருப்பிடத்தில் நிகழ்ந்தவற்றை தனது ஞான திருஷ்டியால் கண்ட வசிஷ்ட முனிவர் இருப்பிடம் நோக்கி விரைந்து வந்தார்.

அவ்விடத்தில் மனைவி மனமுடைந்து கிடப்பதையும், மகன்கள் அனைவரும் மாண்டு கிடப்பதையும் கண்டதும் புத்திர சோகத்தில் தனது நிலையை அறியாமல் மிகுந்த வேதனைக்கு ஆளாகினார். பின்பு, புத்திரர்கள் இல்லாத இவ்வுலகத்தில் நாம் வாழ வேண்டுமா? என்ற எண்ணத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் தங்களை தானே மாய்த்துக் கொள்ளலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

கணவனை காணுதல் :

வசிஷ்டரின் புதல்வர்களில் ஒருவரான சக்தியின் மனைவியான திரிசந்திக்கு தனது கணவரின் இழப்பு தெரிந்ததும் தனது தாய் வீட்டிற்கு கர்ப்பவதியாக சென்றவள் மிகுந்த வேதனையுடன் தனது கணவனை பார்க்க அவ்விடம் வந்து கொண்டிருந்தாள்.

திரிசந்தி தன் கணவனின் உடலைக் கண்டதும் தனது எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த இயலாமல் தனது இயலாமையை எண்ணி, தான் இல்லாத இவ்வேளையில் தான் நிகழவேண்டுமா... என்னையும் சேர்த்து என் கணவருடன் ஏற்றுக் கொள்ளக்கூடாதா... என்று கதறி அழுது தன் கணவனின் உடல் மீது தன்னையும் மறந்து விழுந்தாள்.

கர்ப்பவதியாக இருக்கும் தனது மகனின் மனைவியான திரிசந்திக்கு தகுந்த முறையில் ஆதரவான சில வார்த்தைகளை எடுத்துரைத்து திரிசந்தியை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் வசிஷ்டர். ஏனெனில், சிறு வயதில் அவள் அடைந்த வேதனையை கண்ட வசிஷ்டர் மிகுந்த ஆறாத்துயரம் அடைந்தார்.

ஆறுதல் கூறுதல் :

மகளே! என் மைந்தர்கள் வாங்கி வந்த ஆயுள்பலம் முடிந்து அவர்கள் இறைநிலையை அடைந்துள்ளார்கள். ஆகவே, இனி அவர்களை எண்ணி நான் கவலைக்கொள்வதில் எவ்வித பயனும் இல்லை. இனி இருக்கும் காலங்களில் நாம் சர்வேஸ்வரனை எண்ணி வாழ்ந்து இறைநிலையை அடைவோமாக... என்று பலவாறாக கூறி தனது மருமகளுக்கு ஆறுதலும், அறிவுரையும் கூறிக்கொண்டிருந்தார்.

வசிஷ்டருடைய அறிவுரைகள் பலவாறாக இருப்பினும் திரிசந்தி தனது கணவரின் இந்நிலையை அடைய நான் என்ன பாவம் புரிந்தேனோ? பிறக்கப்போகும் என் மகன் பிறந்து, என் தந்தை எங்கே? என்று கேட்டால் நான் அவனிடம் என்ன உரைப்பேன்? யாது சொல்வேன்? யாரை அவருடைய தந்தையாக நான் காண்பிப்பேன்?. கணவன் இல்லாத பெண்கள் உயிருடன் இருந்து வாழ்வது என்ன பயன் என்று கூறி தனது ஆதங்கத்தை தனது கணவனின் தந்தையிடம் எடுத்துரைத்து தனது மனக்கவலைகளை கூறிக் கொண்டிருந்தாள்.

கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தனது மருமகள் அடைந்த நிலையை எண்ணி அருந்ததியும், வசிஷ்டரும் தனது மருமகளுக்கு பலவாறாக எடுத்துக்கூறி அவளின் மனதினை தேற்றினார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் மனதை தேற்றிக் கொண்டது போல காட்சியளித்தாலும் மனதளவில் அவர்கள் இறந்தவர்களின் நினைவாகவே உணவும், உறக்கமும் இன்றி மிகுந்த மனவேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக