Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

தேவலோகத்தில் இருந்து விடைப்பெறும் அர்ஜூனன்...!

 பாண்டவர்கள், காம்யக வனத்தை அடைந்தனர். ஆண்டுகள் பல சென்றது. அர்ஜூனன், வரவை எதிர்ப்பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தேவலோகத்தில், அர்ஜூனன் எல்லா கலைகளையும் நன்கு கற்று தேர்ந்தான். அர்ஜூனனின் திறமையை பரிசோதிக்க நினைத்த இந்திரன், அர்ஜூனை அழைத்து, மகனே! கடலுக்கு அடியில் மூன்று கோடி அசுரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தேவர்களுக்கு பல துன்பங்களை கொடுத்து வருகின்றனர். அந்த அரக்கர்கள், எவராலும் அழிக்க முடியாத பல வரங்களை பெற்றுள்ளனர். நீ அவர்களை வதம் செய்ய வேண்டும் என்றார். அர்ஜூனன், தந்தையே! அவர்கள் எவ்வளவு பலம் பெற்றிருந்தாலும் நான் வைத்திருக்கும் காண்டீபத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்களை நான் அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.

 அதன் பின் இந்திரன், இராமாயண யுத்தத்தின் போது, இராமருக்கு கொடுத்தனுப்பிய தேரை கொடுத்தார். அத்தேர் பறக்கும் தன்மை உடையது. அர்ஜூனன் அத்தேரில் ஏறினான். மாதலி தேரை செலுத்தினான். இவர்களுக்கு வழிகாட்டியாக சித்திரசேனன் என்ற கந்தர்வன் சென்றான். அனைவரும் அரக்கர்கள் இருக்கும் இடத்தை அடைந்தனர். அர்ஜூனன், பலத்த முழக்கத்துடன் தனது வில்லை எழுப்பினான். இச்சத்ததைக் கேட்ட அரக்கர்கள் இந்திரன் தான் தன் பரிவாரங்களுடன் வந்துள்ளான் என எண்ணினர். அர்ஜூனன், சித்திரசேனன், கந்தர்வன் அசுரர்கள் முன் நின்றனர். சித்திரசேனன், அசுரர்களை பார்த்து, எங்களுடன் போர் புரிய வருமாறு அழைத்தான்.

 அங்கு அர்ஜூனனை பார்த்த அசுரர்கள், இந்த அற்ப மானிடனா! எங்களை கொல்ல வந்தான். இவனை பற்றி நாங்கள் சில விஷயங்கள் அறிந்து வைத்துள்ளோம். இவன் முதற்கொண்டு, இவனது சகோதரர்கள் மொத்தம் ஐந்து பேர். இவர்கள் ஐவரும் திரௌபதி என்னும் பெண்ணை மணம் புரிந்துக் கொண்டனர். ஆனால், மணம் புரிந்த பெண்ணை இவர்களால் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. சூதில் துரியோதனிடம் தோற்றுவிட்டனர் எனக் கூறி ஏளனம் செய்தனர்.

 இதைக் கேட்டு அர்ஜூனன் மிகவும் கோபங்கொண்டான். உடனே, தனது வில்லை எடுத்து அரக்கர்களை நோக்கி பல பாணங்களை ஏவினான். அரக்கர்களுக்கும், அர்ஜூனனுக்கும் இடையே யுத்தம் உண்டானது. இதனால் பல்லாயிர கணக்கில் அரக்கர்கள் மாண்டொழிந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் புத்துயிர் பெற்று எழுந்தனர். வெகு நேரம் அரக்கர்களை நோக்கி அர்ஜூனன் பாணம் ஏவிய வண்ணம் இருந்தான். ஆனால் அரக்கர்கள் மாண்டாலும் புத்துயிர் பெற்று எழுந்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அர்ஜூனன் திகைத்து நின்றான். அப்பொழுது அர்ஜூனனுக்கு ஒரு அசரீரி ஒலி எழுந்தது.

 அர்ஜூனா! நீ இந்த அரக்கர்களிடம் தோற்பது போல் பாவனை செய். அப்பொழுது அவர்கள் உன்னை பார்த்து எள்ளி நகைப்பர். பிறரை பரிகாசம் செய்தால் அவர்கள் இறந்து விடுவர். இது அசுரர்கள் பெற்ற சாபமாகும். அப்பொழுது நீ பிரம்மாஸ்திரத்தை அரக்கர்கள்மீது ஏவவும் என அந்த அசரீரி அர்ஜூனனின் செவிகளில் விழும்படி மட்டும் சொல்லி விட்டு மறைந்தது.

 அந்த அசரீரி ஒலிப்படி அர்ஜூனன், அரக்கர்களிடம் தோற்பது போல் பாவனை செய்தான். இதைப் பார்த்த அரக்கர்கள், அற்ப மனிதனே! உன்னுடைய வீரம் அவ்வளவு தானா? சிறு புழுவை போல் சுருண்டு விழுந்துவிட்டாயே! எங்களுடன் போரிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை அறிந்து கொண்டாயா. இந்த சிறு யுத்ததிற்கே நீ பயந்து விட்டாயே எனக் கூறி ஏளனம் செய்தனர். மற்ற அரக்கர்கள் அர்ஜூனனை பார்த்து கைக்கொட்டி சிரித்தார்கள். அதன் பின் அர்ஜூனன், மாதலியிடம் தேரை திரும்ப செலுத்துமாறு கூறினான். அப்பொழுது அர்ஜூனன், பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து அரக்கர்கள் மேல் ஏவினான். இதில் மூன்று கோடி அரக்கர்களும் மாண்டு விழுந்தனர்.

இதை அறிந்து தேவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அர்ஜூனன், தேவலோகம் திரும்பினான். இந்திரன், மகனே! இன்று உன் செயல் எனக்கு பெரும் பெருமையை அளித்துள்ளது. நீ கற்ற கலையை சோதிக்கவே நான் இவ்வாறு செய்தேன். நீ அனைத்து கலைகளையும் நன்கு கற்று தேர்ந்துவிட்டாய். நீ இப்பொழுது பூலோகம் சென்று உனது சகோதரர்களை சந்திக்கலாம் என்றார்.

அதன்படி அர்ஜூனன், பூலோகம் வந்தடைந்தான். அர்ஜூனனை கண்ட சகோதரர்கள் அன்புடன் தழுவிக் கொண்டனர். திரௌபதியும் அர்ஜூனனை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அர்ஜூனன், தேவலோகத்தில் நடந்தவற்றை தன் சகோதரர்களுக்கு கூறினான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக