சனி, 21 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 160


தேவர்கள் வாழும் தேவலோகத்தில் தேவர்களின் அதிபதியான தேவேந்திரன் மகிழ்ச்சியாக இருந்தார். மந்தார நிழலில் வீற்றிருந்த தேவேந்திரன் தேவலோக மாதர்களின் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டே இருந்தார். தேவலோக மங்கையர்கள் நடனமாட அமுதமான இசை கீதங்களும் இடம்பெற அவ்விடமே ஒரு மகிழ்ச்சி நிறைந்த இடமாக காணப்பட்டிருந்தது.

இனிய கீதத்துடன் அழகிய இசையிலும், மங்கையர்களின் நடன அசைவுகளிலும் தன் நினைவை இழந்து அவர்கள் அளிக்கும் இன்பக் கடலில் மிதந்தவாறு தேவேந்திரன் அமர்ந்து அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த காட்சிகளை கண்டு மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார். மங்கையர்களின் நடன அசைவுகளில் தன்னையே மறந்து தெளிவின்மை இன்றி தேவேந்திரன் அமர்ந்திருந்தார்.

பிரகஸ்பதியின் வருகை :

அவ்வேளையில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி தேவேந்திரன் இருக்கும் இடத்திற்கு வருகை தந்தார். பிரகஸ்பதியான குரு தேவர்களின் நலன் கருதி அனைத்து செயல்பாடுகளையும் செய்யக்கூடியவர். தேவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியவர். பிரகஸ்பதியான குருதேவர் சாஸ்திர மற்றும் ஞானத்தில் வல்லமை கொண்டவர்.

சாபம் பெறல் :

தேவேந்திரனோ பிரகஸ்பதியின் வருகையை அறிந்து அவரை வணங்காமல் தன்னை மறந்து மங்கையர்களின் நடனத்தை கண்டு கொண்டிருந்தார். தேவேந்திரனின் இந்த அலட்சிய செயல்பாடானது தேவகுருவான பிரகஸ்பதிக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் அளிக்கத் தொடங்கியது. தேவகுருவான என் வருகையை அறிந்து எனக்கு மரியாதை அளிக்கத் தவறிய தேவேந்திரனே! இனி மேற்கொண்டு தேவலோகத்தில் எந்த சபையிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்றும், இனி என்னுடைய வழிகாட்டுதல்கள் தேவர்களுக்கு இருக்காது என்றும் உரைத்து எவருமறியா வண்ணம் மறைந்து சென்றார்.

தேவகுருவின் இந்த முடிவானது இந்திரனுக்கு அவ்வளவு பெரிய ஒரு பிரச்சனையாக அந்த பொழுதில் தோன்றவில்லை. காலம் கணிந்தால் அவரும் சரியாகிவிடுவார் என்ற சிந்தனையில் மங்கையர்களின் நாட்டியத்தை கண்டு இன்ப போதையில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

முன் கர்ம வினை ஆரம்பித்தல் :

ஒருமுறை அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்திற்காக சிவபெருமானை எண்ணி தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் இல்லாத பட்சத்தில் தேவகுருவான பிரகஸ்பதி சுக்கிராச்சாரியாரின் வடிவத்தில் சென்று அசுரர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார். தேவகுருவான பிரகஸ்பதி அசுரர்களை மாற்றி தேவர்களுக்கு அடிப்பணிந்தவாறு மாற்றத் துவங்கினார்.

தியானத்தை முடித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் இந்த மாற்றத்தையும் அதற்கு யார் காரணம்? என்பதையும் அறிந்து தேவகுருவை சபித்தார். அதாவது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி இல்லாமல் தேவர்கள் துன்புறுவார்கள் என்ற சாபத்தை அளித்தார். காலங்கள் சென்றன... சாபமும் நடைபெற ஆரம்பித்தன. அதாவது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி இல்லாமல் தேவலோகத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் தங்களது வினைப்பயனையும் சுக்கிராச்சாரியாரின் சாபத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.

தேவேந்திரனின் மாற்றம் :

தேவகுரு தேவலோகத்தை விட்டு செல்லத் தொடங்கியதும் தேவலோகத்தின் ஐஸ்வர்யங்கள் குறையத் துவங்கியது. மேலும், தேவேந்திரனின் உடலில் வெப்பமானது அதிகரிக்கத் துவங்கியது. நிகழும் மாற்றங்களை கண்டு தேவேந்திரன் நிகழ்வது யாது? என்று எண்ணத் துவங்கினார். நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், நிகழ்ந்த மாற்றங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்க அவருக்கு காரணமானது தெளிவுற கிடைக்கத் தொடங்கியது.

தேவகுருவை தேடுதல் :

பின்பு, தனது தவறை ஏற்றுக்கொண்டு தேவர்களின் குருவான பிரகஸ்பதியை பொருட்டு அவர் இருக்கும் இடத்தை தேடி சென்றார். ஆனால், அவர் அவ்விடத்திலும் இல்லை. பின்பு, இந்த பிரபஞ்சம் முழுவதும் அவர் தேடிக்கொண்டே இருந்தார். அவரின் அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் இருந்தன. அவர் இருக்குமிடத்தை தேவேந்திரனால் கண்டறியவே இயலவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதியை காணமுடியாமல் இனி மேற்கொண்டு என்ன செய்வது? என்று அறியும் பொருட்டு படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை நோக்கி சத்யலோகத்திற்கு தனது பயணத்தை மேற்கொண்டார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்