தேவேந்திரன் அடைந்த தயக்கத்தை உணர்ந்த திருமாலும் தேவேந்திரா...! சிவபெருமானை அணுகி அவரிடம் விண்ணப்பிப்பீர்கள் என்று கூறி சிவபெருமானைக் காண கைலாயம் அனுப்பி வைத்தார்.
சிவபெருமானை காணுதல் :
கைலாய மலையை அடைந்ததும் சிவபெருமானைக் கண்டு அவரை வணங்கி தேவேந்திரன் தன் மனதில் நினைத்தவற்றை சொல்லும் முன்பே அனைத்தும் உணர்ந்தவரான சிவபெருமான் தேவேந்திரனை நோக்கி ததீசி முனிவரிடம் சென்று கேட்பாயாக... நல்லதே நடக்கும் என்று கூறினார்.
ததீசி முனிவரை காணுதல் :
சிவபெருமானை வணங்கிய தேவேந்திரன் அங்கிருந்து விடைபெற்று ததீசி முனிவரை காண அவர் இருக்கும் இடத்தை நோக்கி தேவர்களுடன் சென்றார். ஆசிரமத்தில் இருந்த ததீசி முனிவரை கண்டு தேவேந்திரனும், தேவர்களும் வணங்கினார்கள். தேவர்களின் வருகையும், தேவர்களின் அதிபதியான தேவேந்திரனின் வருகையும் ததீசி முனிவருக்கு ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மூன்று காலம் உணர்ந்த முனிவர் என்பதால், இவர்கள் வந்த காரணத்தையும் அறிந்து கொண்டார்.
இந்திரதேவனை நோக்கி கவலைக்கொள்ள வேண்டாம் தேவா, விரைவில் அந்த அசுரனை அழிப்பதற்கான ஆயுதம் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார். இதை சற்றும் எதிர்பாராத இந்திரதேவன் முனிவரை மிகவும் அதிசயத்துடன் பார்த்தார். இந்திரதேவன், என் மனதில் உள்ள சிந்தனைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு அவ்விதமான சங்கடத்திலிருந்து காத்தருளி இருக்கின்றீர்கள் என்று மனதார நன்றி கூறினார்.
ததீசி முனிவரோ யாவரும் வருத்தப்படாதீர்கள். நீங்கள் கொடுத்து சென்ற ஆயுதங்களின் வலிமை யாவும் என்னுடைய முதுகெலும்பில் சேர்ந்து மிகவும் வலிமை கொண்டதாக உள்ளது என்றும், அதனைக் கொண்டு விருத்திராசுரனை அழித்துவிடலாம் என்றும் கூறினார்.
முனிவர் கூறியதைக் கேட்ட இந்திரன் ததீசி முனிவரை மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்தார். ஆனால், ததீசி முனிவரோ இந்த நிகழ்ச்சிக்காக நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை என்று மிகவும் மனம் மகிழ்ந்தார். அவரின் முகமானது மிகவும் பிரகாசத்துடன் காட்சியளிக்கத் துவங்கியது.
தேவர்களைப் பாதுகாக்க எனது முதுகெலும்பு மிகவும் பயன்படுமெனில் என்னுடைய வாழ்நாளில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லையே என்று மிகவும் மனம் மகிழ்ச்சி அடைந்தார் ததீசி முனிவர். முனிவரின் கூற்றுகளில் இருந்து முனிவரின் பற்றற்ற தன்மையை கண்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்தார் இந்திரதேவன்.
ததீசி முனிவரின் ஆலோசனை :
இந்திரதேவன் கொண்ட வியப்பிலிருந்து வெளிவருவதற்குள்ளாகவே ததீசி முனிவர், இந்திரதேவனை நோக்கி எனது உடல் முழுவதும் உப்பினை பூசி தவநிலையில் அமர்கின்றோம் என்றும், என் பிராணன் பிரிந்த நிலையில் தாங்கள் ஒரு பசுவினை கொண்டு எனது உடலில் உள்ள உப்பினை பசுவின் நாவால் சுவைக்கச் செய்தால் எனது உடலில் உள்ள சதையானது தனியே பிரிந்து வந்துவிடும் என்றும், இறுதியாக எனது உடலில் உள்ள எலும்புகளை எடுத்துச்சென்று மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை செய்து அதன்மூலம் விருத்திராசுரன் எனும் அரக்கனை வதம் செய்து வெற்றி கொள்வாயாக...! என்றும் கூறி தவநிலையில் அமரத் துவங்கினார்.
சிவலோகம் அடைதல் :
ததீசி முனிவர் கூறியது போன்றே அவருடைய உடலில் இருந்து பிராணன் பிரிய தொடங்கியது. பிறரின் நன்மைக்காக அவர் செய்த தியாகத்தின் பலனாக விண்ணுலகத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து அவரின் பூத உடலை இந்த மூவுலகில் விட்டு மெய் உடலுடன் கூடிய ஆன்மாவினை ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கி அழைத்துச் சென்றது.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக