Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 164

சிறிதுநேரம் மயங்கிய நிலையில் இருந்து இந்திரன் நினைவுப்பெற்று எழுந்ததும் இனி விருத்திராசுரனிடம் போரிட்டு வெற்றி பெற இயலாது என்பதை அறிந்து கொண்டார். எதிரியான விருத்திராசுரனின் பலம் யாது? என்று புரிந்து கொண்டார். மேற்கொண்டு என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் மீண்டும் சத்யலோகம் சென்று படைப்பு கடவுளான பிரம்ம தேவரை வணங்கி அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என எண்ணினார்.

பிரம்ம தேவரை காணுதல் :

தேவேந்திரன் பிரம்ம தேவரை கண்டு அவரை வணங்கி நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். பின்பு, அசுரனின் பலத்தையும் அவனை அழிப்பதற்கான மார்க்கத்தையும் வேண்டி நின்றார். பிரம்ம தேவரும் அசுரனை அழிப்பதற்கான மார்க்கம் என்பது திருமாலிடம் உள்ளது என்றும், அவரை கண்டு ஆலோசனை பெற்று வெற்றி பெறுவாயாக... என்றும் கூறினார்.

திருமாலைக் காணுதல் :

தேவேந்திரன் வைகுண்டத்தில் வீற்றிருக்கும் திருமாலை காணச் சென்றார். அங்கு திருமாலைக் கண்டதும் அவரை வணங்கி விருத்திராசுரனை அழிக்க ஏதாவது மார்க்கம் உண்டா? என்றும், அதற்கு தாங்கள் உதவிபுரிய வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டார்.

நிகழ்வனவற்றை உணர்ந்தவரான திருமால் உன்னிடம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு விருத்திராசுரனை அழிக்க இயலாது என்றும், உன்னுடைய ஆயுதங்கள் யாவும் பலம் இழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். தேவேந்திரனோ... திருமாலிடம் என்னிடம் உள்ள ஆயுதங்கள் யாவற்றாலும் அழிக்க முடியவில்லை என்றால் அந்த அசுரனை எவ்விதம் வதம் புரிவது என்று கேட்டார்.

ஏனெனில் நாளுக்கு நாள் அசுரனின் வளர்ச்சியும், வேகமும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அவனால் தேவர்களும், பூலோகத்தில் இருக்கக்கூடியவர்களும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். தாங்களே அனைவரையும் காப்பவர். இந்த இன்னல்களில் இருந்து அவர்களை காத்து ரட்சிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார்.

திருமாலும் தேவேந்திரனை நோக்கி தேவேந்திரா... உனக்கு அதிக சக்திகள் நிறைந்த ஆயுதங்கள் தேவைப்படுகின்றன என்றும், இந்த வஜ்ஜிராயுதத்தை விட அதிக சக்தி வாய்ந்த வஜ்ஜிராயுதத்தால் மட்டுமே விருத்திராசுரனை அழிக்க இயலும் என்றும் கூறினார். தேவேந்திரன் திருமாலிடம் சக்திவாய்ந்த வஜ்ஜிராயுதத்தை நான் எவ்விதம் அடைவது என்று வினவினார்.

ஆயுதத்தை பற்றி அறிதல் :

திருமாலோ புன்முறுவலுடன் நான் சொல்வதை கவனமாக கேள். முன்னொரு சமயத்தில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைய துவங்கினீர்கள். தேவர்களாகிய நீங்கள் அனைவரும் கடைந்தபொழுது உங்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் அசுரர்களிடம் சென்றடையாமல் இருக்க ஒரு முனிவரிடம் தந்து சென்றுள்ளீர்கள். அவர் அந்த ஆயுதங்களை நீங்கள் வருவீர்கள் என்று நெடுநாட்களாக பாதுகாத்து வைத்திருந்தார்.

ஆனால், தேவர்களான நீங்களோ அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆயுதங்கள் யாவற்றையும் திரும்பப் பெறாமல் அவரிடமே விட்டுவிட்டீர்கள். காலங்கள் கழிய கழிய காத்திருந்த அவர் அந்த ஆயுதங்களை என்ன செய்வது என்று யோசித்து தனது தவ வலிமையினால் உங்களின் ஆயுதங்கள் அனைத்தையும் திரவ நிலைக்கு மாற்றி அதை பருகினார்.

அவர் அதை பருகியதன் மூலம் ஆயுதங்களில் இருந்த சக்திகள் அனைத்தும் அவரின் முதுகெலும்பில் ஒருங்கே அமையப்பெற்று மிகவும் வலிமையாக இருக்கின்றது. விருத்திராசுரன் எனும் அரக்கனை அழிக்கின்ற ஆயுதம் என்பது அவரின் முதுகெலும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

திருமால் எடுத்துரைக்கையில் அந்த முனிவர் யார்? என்று புரிந்து கொண்டார் இந்திரன். அது ததீசி முனிவர்தான் என்பதை அவர் நன்கு அறிந்தார். ஏற்கனவே ததீசி முனிவருக்கு எதிராக தாம் செயல்பட்டதால், இப்போது கேட்கும் உதவியை நிராகரித்து விடுவாரோ என்று மனம் தயங்கினார் தேவேந்திரன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக