பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தைப் பற்றி விருத்திராசுரன் கூறியதைக் கேட்டு துவஷ்டாவும் மனம் மகிழ்ந்து மேலும் சில வரங்களை அளித்தார். அதாவது நீ இப்போது இருப்பதை விட பல மடங்கு வளரும் சக்தியையும், பலத்தையும் பெறுவாய் என்றும், உன் உருவம் எவ்வளவு பெரியதாக வளர்கின்றதோ அவ்வளவு வேகமும், கோபமும் உன்னிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் என்றும் கூறினார். பின்பு தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அசுரனின் தோற்றத்திற்கான நோக்கத்தையும் எடுத்துரைக்கத் துவங்கினார்.
ஆணை பிறப்பித்தல் :
அதாவது எனது தவப் புதல்வனான விஸ்வரூபனின் தலைகளைக் கொய்து கொன்ற இந்திரனையும் அவனுக்கு உதவியாக இருந்த தேவர்களையும் நீ பழிவாங்க வேண்டும் என்றும், எவ்விதம் உனது உருவம் பெரியதாகிறதோ அதே உருவத்தையும் அதனால் உண்டான கோபத்தையும் கொண்டே அனைத்து தேவர்களையும், தேவர்களின் அதிபதியான இந்திரனையும் கொல்ல வேண்டும் என்றும், எனக்கு இந்திரனின் உயிர் வேண்டும் என்றும் அசுரனிடம் எடுத்துரைத்தார்.
இந்திரனை கொல்லப் புறப்படுதல் :
துவஷ்டா முனிவரின் கூற்றுகளிலிருந்து தனது இலக்கு எது என்பதை நன்கு உணர்ந்த அரக்கனான விருத்திராசுரன் இந்திரனை கொல்வதற்கு இக்கணமே செல்கின்றேன் என்றுரைத்து, தனது கரங்களில் மிகவும் கொடிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இந்திரனைத் தேடி இந்திரா... இந்திரா... என்று எட்டுத்திக்கிலும் கேட்கும் வண்ணம் அதிகமான ஒலியுடனும், மிகுந்த கோபத்துடனும் ஆவேசமாக தேவர்களின் அதிபதியான இந்திரனை கொல்ல செல்லத் துவங்கினான்.
செய்தி அறிதல் :
விருத்திராசுரன் எழுப்பிய ஒலியானது தேவலோகத்திலிருந்த தேவ ஒற்றர்கள் வரையிலும் எட்டத் தொடங்கியது. இதை அறிந்ததும் இச்செய்தியை தேவலோகத்தின் அதிபதியான தேவேந்திரனிடம் எடுத்துரைக்க தேவ ஒற்றர்கள் அனைவரும் விரைந்து சென்றனர். பின்பு, தேவலோகத்தில் அரியணையில் வீற்றிருந்த தேவேந்திரனை வணங்கி நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தனர்.
போர் தொடங்குதல் :
தேவ ஒற்றர்கள் கூறியதைக் கேட்ட தேவேந்திரன் போருக்கு வரும் அசுரனின் பலத்தை யாதென்று அறியாது விஸ்வரூபனை வதம் செய்த எமக்கு இவன் என்ன பெரிய வீரனா? என்னும் கண்ணோட்டத்திலேயே போருக்குத் தயாராக அனைத்து தேவர்களுக்கும் ஆணையிட்டார். பிரபஞ்சவெளியில் தேவர்களின் அதிபதியான இந்திரனுக்கும், அரக்கனான விருத்திராசுரனுக்கும் போரானது நிகழத் தொடங்கியது.
தேவர்கள் பின்வாங்குதல் :
தேவேந்திரனான இந்திரன் ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து தனது எதிரியான விருத்திராசுரனை எதிர்த்து போரிட அனைத்து முயற்சிகளையும் செய்யத் துவங்கினார். அசுரன் தான் பெற்ற வரத்தாலும், அதனால் கிடைத்த பலத்தாலும் தேவர்களையும் அவர்களின் ஆயுதங்களையும் அழிக்கத் தொடங்கினான். மிகுந்த சினத்தோடு போரிட்ட அசுரனின் முன்னால் தேவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் பயனிழந்து போயின.
இந்திரதேவன் தனது ஆயுதங்களில் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமான வஜ்ஜிராயுதத்தை அசுரனான விருத்திராசுரன் மீது ஏவினார். ஆனால், விருத்திராசுரன் தனது கரங்களில் இருந்த தண்டாயுதத்தால் இந்திரனின் வஜ்ஜிராயுதத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் தேவர்கள் அனைவரையும் செயல் இழக்கச் செய்தான். தேவர்கள் அனைவரும் செயல் இழந்ததும் அரக்கனின் பலம் யாதென்று சிந்திப்பதற்குள் தேவர்களின் அதிபதியான தேவேந்திரனை தனது கரங்களில் இருந்த தண்டாயுதத்தால் இந்திரனின் தோளில் மிகுந்த வேகத்துடன் தாக்கினான் அரக்கன்.
மயக்கம் அடைதல் :
எதிர்பாராத இந்த தாக்குதலால் தேவர்களின் அதிபதியான தேவேந்திரன் மயக்கமடைந்தார். ஆனால், மரணமடையவில்லை. ஏனெனில் அமுதம் உண்ட காரணத்தினால் சிறிது நேரத்திற்கு மட்டுமே மயக்க நிலையில் ஆழ்ந்திருந்தார். தேவேந்திரனின் அருகில் சென்று தேவேந்திரனை எழுப்பிப்பார்த்தும் அவரிடம் எந்தவித அசைவும் இல்லாத காரணத்தினால் தேவேந்திரன் இறந்துவிட்டார் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு மறைந்து மற்ற தேவர்களை தாக்கி அழிக்க தனது பயணத்தை துவங்கினான் அசுரன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக