பிரம்மஹத்தி தோஷம் உருவாதல் :
சினம் கொண்ட தேவேந்திரன் தனது கரங்களில் இருந்த ஆயுதத்தை விஸ்வரூபனின் மீது ஏவினார். விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்த்து எரிந்தது. தலையற்ற உடலில் இருந்து விஸ்வரூபனின் ஆன்மாவானது பிரிந்து இறக்கத் தொடங்கினான். விஸ்வரூபன் ஒரு அசுரனாக இருக்கும் பட்சத்திலும் அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்தவராக இருந்து வந்தார். விஸ்வரூபனை கொன்ற குற்றத்தினால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷமானது அவ்விடத்தில் பற்றிக்கொண்டது.
தோஷத்தை போக்குதல் :
பிரம்மஹத்தி தோஷத்தினால் தேவேந்திரன் பாதிக்கப்பட்டதும் அந்த தோஷத்தின் விளைவால் அனைத்து தேவர்களும் பாதிக்கப்பட துவங்கினர். தேவர்களின் பொலிவானது சிறுக சிறுக குறையத் துவங்கியது. இதை அறிந்ததும் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை போக்க தங்களால் இயன்றளவு முயற்சி செய்யத் துவங்கினர். அதாவது தேவேந்திரனான இந்திரனுக்கு ஏற்பட்ட இந்த தோஷத்தை போக்க பூவுலகில் இருந்த மரங்கள், மண், நீர் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதை சமமாக பங்கிட்டுக் கொடுத்தனர். தோஷத்தின் பலமானது குறையத் துவங்கியதும் தேவர்கள் அனைவரும் முன்பு போலவே தங்களது பொலிவை பெறத் துவங்கினர்.
அரக்கனின் தோற்றம் :
தேவேந்திரனால் தனது தவ புதல்வன் கொல்லப்பட்டதை அறிந்ததும் மிகுந்த கோபம் கொண்டார் துவஷ்டா முனிவர். பின்பு இந்திரனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மிகவும் ஆழமாக தோன்றத் துவங்கியது. இந்திரன் மட்டுமல்லாமல் தனது மகனை கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தை களைய உதவிய அனைத்து தேவர்களையும் வதம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மிகுந்த கோபத்தையும், ஆழ்ந்த சிந்தனையையும் உருவாக்கத் துவங்கியது. அதன் விளைவாக அவர் மிகப்பெரிய யாகம் ஒன்றினை தோற்றுவித்தார். அந்த யாகத்தின் முடிவில் தனது சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு பெரிய கொடூரமான உருவமும், தோற்றங்களும் கொண்ட அரக்கன் ஒருவனை உருவாக்கினார்.
அசுரனின் விண்ணப்பம் :
துவஷ்டா உருவாக்கிய அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். தன்னை உருவாக்கியவரை பணிந்து வணங்கிய அரக்கன் அவரின் கட்டளைக்கு அடிபணிந்து நின்றான். நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றும், தங்களின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினான்.
கட்டளை பிறப்பித்தல் :
எனது மகனைக் கொன்றவனை கொல்வதற்காக உருவாக்கிய உனக்கு விருத்திராசுரன் என்னும் நாமத்தை சூட்டுகின்றேன் என்றும், யாக வேள்வியில் இருந்து உருவாகிய அரக்கன் விருத்திராசுரனை பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் இருக்க வேண்டும் என்றும், தவத்தின் பயனாக எந்தவித உலோகத்தால் ஆன ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வேண்டும் என்றும் எடுத்துரைத்து பிரம்ம தேவரை நோக்கி தவம் புரிய ஆணையிட்டார் துவஷ்டா முனிவர்.
வரம் பெறுதல் :
விருத்திராசுரன் தன்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்கி பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் செய்ய துவங்கினான். தவத்தின் பயனாக பிரம்ம தேவரும் மனம் மகிழ்ந்து அவருக்கு காட்சி அளிக்கத் தொடங்கினார். பிரம்ம தேவர், அரக்கனான விருத்திராசுரனை நோக்கி உன்னுடைய தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம்... என்றும், உமக்கு வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்றும் கூறினார். தனது தவத்தின் பயனாக காட்சியளித்த பிரம்ம தேவரை வணங்கி அவரிடம் தனது தவத்தின் பயனாக தனக்கான வரத்தினை கேட்டார்.
அதாவது இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த உலோகத்தாலும் ஆன ஆயுதத்தால் தனக்கு அழிவு என்பது நேரக்கூடாது என்ற வரத்தினை வேண்டினார். பிரம்ம தேவரும் நிகழ்ந்தவற்றை அறிந்தவராக அவ்வாறே ஆகுக என்று கூறி, வேண்டிய வரத்தினை அளித்து அவ்விடத்தை விட்டு மறைந்து சென்றார். பின்பு, பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தைப் பற்றி தன்னை உருவாக்கியவரான துவஷ்டாவிடம் கூறி ஆசிப்பெற அவரின் இருப்பிடத்திற்கு சென்றான்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக