தேவேந்திரன் சத்யலோகம் சென்றும் பிரகஸ்பதி இல்லாததை உணர்ந்து கொண்டார். பின் நிகழ்ந்த அனைத்தையும் படைப்புக் கடவுளான பிரம்ம தேவரிடம் எடுத்துரைத்து தனக்கு இந்த இன்னல்களில் இருந்து விமோசனம் அளிக்க வேண்டி நின்றார் தேவேந்திரன். தேவேந்திரன் உரைத்ததில் இருந்து குருவை அவமதித்ததால் ஏற்பட்ட தோஷமானது தேவேந்திரனான இந்திரனை நெருங்கத் தொடங்கியதை நன்கு உணர்ந்திருந்தார் பிரம்ம தேவர்.
இனிமேற்கொண்டு தம்மால் எந்த உதவியும் செய்ய இயலாத நிலையில் இருப்பதை உணர்ந்த பிரம்ம தேவர், இந்திரனிடம் தேவர்களின் குருவான பிரகஸ்பதியை காணும் வரையில் துஷ்டா என்பவரின் மகனான மூன்று தலைகளை கொண்ட விஸ்வரூபனை தேவர்களின் குருவாக கொள்வீர்களாக... என்று கூறினார். பிறப்பால் அவன் அசுரனாக இருப்பினும் ஞானத்திலும், பண்பிலும் சிறந்தவன் என்று கூறினார்.
பிரம்ம தேவரின் சூழ்ச்சி :
நான்முகன் அளித்த யோசனையில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் இதையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் இவரின் பகைமையும் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து நான்முகன் அருளியதை ஏற்று அவ்விதமே விஸ்வரூபனை தேவர்களின் குருவாக நியமிக்கலாம் என்று எண்ணினார்.
பிரம்ம தேவர் தேவேந்திரனுக்கு கூறியது அவருக்கு அளித்த உதவி மட்டுமல்லாமல் அவரது கர்ம வினையை அனுபவிக்கும் பொருட்டு கூறப்பட்ட உபாயம் ஆகும். இது பிரம்ம தேவரால் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும். இதை உணராத தேவேந்திரனும் பிரம்ம தேவரை வணங்கி தேவர்களின் குருவான விஸ்வரூபனை காண அவர் இருக்கும் இடத்தை நோக்கி செல்லத் துவங்கினார்.
விஸ்வரூபனை காணச் செல்லுதல் :
தேவேந்திரன் விஸ்வரூபன் இருக்குமிடத்தை அடைந்து நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து தேவர்கள் அனைவரும் குரு இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும், தாங்கள் அப்பதவியில் இருந்து தங்களை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டினார். மேலும், எங்களை தங்களின் சீடனாக ஏற்று, எங்களுக்கு தாங்கள் போதித்தல் வேண்டும் என்றும் வேண்டினார்.
ஒரு அசுரனான நான் தேவர்களின் குருவாக இருப்பதா? என்ற எண்ணம் விஸ்வரூபனிடம் உண்டாயிற்று. இருப்பினும் இதுவே தேவர்களை பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொண்டார். அதாவது மனதளவில் அசுரர்களின் வெற்றிக்கொடியை அனைத்து லோகங்களிலும் பறக்கவிட வேண்டும் என்றும், தேவர்கள் அனைவரையும் வதம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டே தேவேந்திரனிடம் நான் தங்களின் குருவாக இருக்க சம்மதிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். உதடுகள் மட்டுமே புன்னகைத்து குருவாக இருப்பதாக கூறினார். இருப்பினும் மனதளவில் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர் தேவர்களின் குருவாக இருக்கத் துவங்கினார்.
தேவேந்திரனின் மனக்கவலை :
பிரகஸ்பதியிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி எண்ணி மிகவும் மனம் குலைந்தார் தேவேந்திரன். இதனால் ஏற்பட்ட தோஷத்தை களைய ஒரு மாபெரும் யாகத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு புதிய குருவான விஸ்வரூபனிடம் தனது விருப்பத்தை எடுத்துரைத்து ஒரு யாகம் நடத்த வேண்டும் என்றும், அது தேவர்களின் வளர்ச்சிக்காகவும், நான் குருவிடம் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை களையவும் நிகழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார். விஸ்வரூபனும் யாகத்தை நடத்துவதாக கூறினார். ஆனால், அதில் மறைமுகமாக சில திட்டங்களை செய்யத் துவங்கினார்.
சூழ்ச்சியை அறிதல் :
தேவேந்திரனின் விருப்பம் போலவே யாகமும் துவங்கியது. யாகம் துவங்கியதும் விஸ்வரூபன் தேவர் குலம் தழைக்க வேண்டும் என்பதை உதட்டளவில் மட்டும் கூறி மனதளவில் அசுரர்கள் குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி ஒவ்வொரு முறையும் மந்திரங்களை எடுத்துரைத்து யாக வேள்விக்கு நெய்யை ஊற்றிக்கொண்டு இருந்தார். விஸ்வரூபன் எடுத்துரைக்கும் மந்திரங்களை அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த இந்திரதேவன் நன்கு கவனிக்கத் துவங்கினார். அவர் கூறும் மந்திர சக்திகளின் வலிமையை தனது ஞான திருஷ்டியால் காண தொடங்கினார். அதாவது விஸ்வரூபன் உரைக்கும் மந்திரமானது தேவர்களை பலப்படுத்துவதற்கு பதிலாக அசுரர்களை பலப்படுத்துகின்றது என்பதை அறிந்து கொண்டதும் அவ்விடத்தில் மிகுந்த சினம் கொண்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக