Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

சகுனியின் யோசனை...! துரியோதனன் பாண்டவர்களை தேடிச் செல்லுதல்...!

ல திருத்தலங்களுக்கு சென்று திரும்பிய அந்தணன் ஒருவன் காம்யக வனம் வழியே வந்தான். அங்கு பாண்டவர்களின் நிலைமையை தெரிந்துக் கொண்டான். அதன் பிறகு அவன் அஸ்தினாபுரத்திற்கு சென்று திருதிராஷ்டிரனிடம், பாண்டவர்கள் காட்டில் மிகவும் மேன்மையுடன் இருப்பதை தெரிவித்தான். இதைக் கேட்டு திருதிராஷ்டிரன் பொறாமைக் கொண்டான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்தியைக் கேட்டு துரியோதனன் கவலைக் கொண்டான். பாண்டவர்களை வனத்திற்கு அனுப்பிய நோக்கம், அவர்கள் அங்கு எதையும் செய்ய முடியாமல் செயலிழந்து போவார்கள் என்றுதான். ஆனால் நான் நினைத்தது போல் நடக்காமல் போயிற்றே. பாண்டவர்களை வனத்திற்கு அனுப்பி தவறு செய்து விட்டேனே என நினைத்து வருந்தினான்.

அப்பொழுது சகுனி, மருமகனே! நீ ஏன் கவலைப்படுகிறாய்? நாம் அனைவரும் வனத்திற்கு சென்று பாண்டவர்கள் இருக்கும் இடத்தில் குடில் அமைப்போம். அங்கு நாம் செல்வ செழிப்புடன் இருப்பதை அவர்கள் காணும்படி செய்வோம். இதைப் பார்த்து பாண்டவர்கள் பொறாமையால் துன்பப்படுவர் எனக் கூறிவிட்டு சிரித்தான். துரியோதனனுக்கும் இந்த யோசனை சரி எனப்பட்டது. உடனே அனைவரையும் பாண்டவர்கள் இருக்கும் இடத்தில் குடில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன்பின் அனைவரும் வனத்தை நோக்கி சென்றனர். அவர்களுடன் கர்ணனும் சென்றான். கௌரவர்கள் அனைவரும் வனத்தை அடைந்தனர். இவர்கள் சென்ற காலம் வளர்பிறை காலத்தின் பௌர்ணமி நாளாகும். அன்று கந்தர்வர்கள் பூமிக்கு வந்து பூமியிலுள்ள நீர்நிலைகளில் ஜலக்கிரீடை (புருஷர் பெண்களோடு புரியும் நீர் விளையாட்டு) செய்வது வழக்கம்.

கந்தர்வர்கள் :

இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்திரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பட இவர்களே காரணமாகும். அரம்பையர்கள், கந்தர்வர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.

பௌர்ணமி ஆதலால் கந்தர்வர்கள் தைத்ய வனத்தில் உள்ள குளக்கரையில் இறங்கினார்கள். தைத்ய வனத்தில் கந்தர்வர்கள் இருப்பதை அறிந்த வனவாசிகளும், அந்தணர்களும், பாண்டவர்களும், குளக்கரைக்கு போகாமல் ஒதுங்கி இருந்தனர். கந்தர்வர்களுக்கு இந்த மரியாதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அங்கு இருந்த துரியோதனனுக்கு, பாண்டவர்களை பழிவாங்கும் எண்ணம் மட்டும் இருந்தது. கௌரவர்கள் வனத்திற்குள் சென்று, பாண்டவர்களை தேடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு வரும் அந்தணர்கள் மூலம் பாண்டவர்கள் இருக்கும் வழியைக் கேட்டு குளக்கரை நோக்கிச் சென்றனர். அங்கு குளக்கரையில் கந்தர்வர்கள், தெய்வங்களுக்கு பூஜை செய்து நீரில் இறங்கி பாட்டு பாடி, நடனம் ஆடினார்கள். பெண்களுடன் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு குதிரைகள் பெரும் படையுடன் வரும் காலடிச் சத்தம் கேட்டது. சகுனி, அந்த குளக்கரையை அடைந்தான். அக்குளக்கரைக்கு எதிரில் பாண்டவர்களின் பர்ணசாலை இருப்பதை அறிந்தான். அப்பொழுது அக்குளக்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை பார்த்தான். அங்கு காவல் காத்துக் கொண்டிருக்கும் காவலாளியை அழைத்து, எங்கள் அரசன் துரியோதனன் வந்துக் கொண்டிருக்கிறான். அதனால் கந்தர்வர்களை இங்கிருந்து கிளம்பச் செல் என்றான். காவலாளி இச்செய்தியை கந்தர்வர்களிடம் தெரிவித்தான்.

கந்தர்வர்கள் சகுனியிடம் வந்து, இந்த வனம் அனைவருக்கும் பொதுவானது. இன்று பௌணர்மி ஆதலால், நாங்கள் இங்கு நீராட வந்துள்ளோம். இதையறிந்து அந்தணர்களும், வனவாசிகளும் எங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கின்றனர். இது மனிதர்களுக்கான இடம் என்றும் சொல்லப்படவில்லை. அது மட்டுமின்றி இது அஸ்தினாபுரத்திற்கு உட்பட்டதும் கிடையாது. அதனால் தாங்கள் இவ்விடத்தை விட்டு அகல சொல்ல எந்த உரிமையும் இல்லை எனக் கூறினர். இதைக் கேட்டு கோபம் கொண்ட சகுனி, இப்பொழுது நீங்கள் இங்கிருந்து அகலவில்லையென்றால், நாங்கள் அகற்ற வேண்டியதாக இருக்கும் என்றான்.

இச்செய்தி கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே கந்தர்வர்கள் வேகமாக கரை ஏறி தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். சித்திரசேனன் அங்கு வந்து, நீங்கள் தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து சென்று விடுங்கள். உங்கள் படைபலத்தை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். எங்களிடம் வீண் விவாதம் செய்தால் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்றார். இதைக் கேட்டு சகுனி பலமாக சிரித்தான். நீங்கள் எங்களுடன் போட்டியிட்டு வென்றிட முடியுமா? என ஏளனமாக கேட்டான். உடனே கர்ணனை பார்த்து, கர்ணா! இவர்களை இங்கிருந்து அடித்து விரட்டு இது துரியோதனனின் ஆணை ஆகும் என்றான்.

உடனே கர்ணன், கந்தர்வர்களை நோக்கி பல பாணங்களை ஏவினான். இதை சற்றும் எதிர்பாராத கந்தர்வர்கள் நிலை தடுமாறி போயினர். கந்தர்வர்கள் பலர் அடிப்பட்டு கீழே விழுந்தனர். கந்தர்வ பெண்கள் இதைக் கண்டு பயந்து ஓடினர். கர்ணன், இடைவெளி இல்லாமல் கந்தர்வர்களை நோக்கி பாணங்களை ஏவிய வண்ணம் இருந்தான். இந்த நிலை தடுமாறும் நிலையிலும், சித்திரசேனன், தன் படைகளை ஒன்று திரட்டி இந்த யுத்தத்திற்கு ஆயத்தமாக்கினான். அப்பொழுது அங்கு வந்த துரியோதனனிடம் சகுனி நடந்தவற்றை கூறினான். பாண்டவர்களை காண செல்வதற்கு இடையூறாக இருந்த கந்தர்வர்களை கர்ணன் துவம்சம் செய்வதை பார்த்து துரியோதனன் மகிழ்ச்சி அடைந்தான்.

தொடரும்...!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக