புதன், 1 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 176

வனத்தின் ஒரு பகுதியானது அழிக்கப்பெற்று ஒரு திருநகரம் மற்றும் திருத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வனத்தை வாழ்விடமாக கொண்டிருந்த பல மிருகங்கள் மற்றும் மரங்களை அழித்து உருவாக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் மிகவும் அவரின் மனதை காயப்படுத்திக் கொண்டிருந்தன. இவ்வகையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முனிவர்களிடம் எடுத்துரைத்து இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றார் குலசேகர பாண்டிய மன்னர்.

முனிவர்களும் அதற்கான சாந்தி பூஜைகள் செய்து நற்பலனை அடைவோமாக... என்று எடுத்துரைத்தனர். மன்னரும் சாந்தி பூஜைகள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்யத் துவங்கினார்.

சிவபெருமான் அருளுதல் :

பாண்டிய மன்னனின் எண்ணங்களை அறிந்து கொண்ட எம்பெருமான் பாண்டிய மன்னனின் மனதிலுள்ள குறைகளை நீக்குவதற்காக தனது ஜடாமுடியில் இருந்த சந்திர கலையுடன் இருந்து வந்த கங்கையின் புனித நீரிலிருந்து ஒரு சிறு துளிகளை புதிதாக எழுப்பப்பட்டுள்ள நகரத்தின் மீது தெளித்து அருளினார்.

அந்த அமுதத்துளியானது அந்த நகர் முழுவதும் பரவி அந்நகரத்தை முழுவதுமாக தூய்மையாக்கி மன்னனின் மனதையும் நிறைவு செய்தது. சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்து அருளிய மதுரமான அமுதத்தினால் சாந்தி செய்யப்பட்ட அந்த புதிய திருத்தலம் கொண்ட திருநகரமானது அந்நாளில் இருந்து மதுராபுரி என்று அழைக்கப்பட்டது.

எம்பெருமான் அருளிய அந்த சிறுதுளி அமிர்தமானது தனக்கு அளிக்கப்பட்ட வரமாகவே பாண்டிய மன்னன் கருதினார். பின்பு அந்நகரத்தை நான்கு திசைகளில் இருந்து திருத்தலத்தை பாதுகாக்கும் பொருட்டும், காவலாக இருக்கும் படியும் காவல் தெய்வங்களையும் வடிவமைக்கத் தொடங்கினார். அதாவது திருத்தலத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு திசைகளின் முறையே அய்யனார், மகாவிஷ்ணு, பத்ரகாளி மற்றும் சப்தமாதர்களை அழைத்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி பிரதிஷ்டை செய்தார் குலசேகர பாண்டியன்.

பூஜைகள் நடைபெறுதல் :

மதுராபுரியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்கு சிவாகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் என்று குலசேகர பாண்டியன் விரும்பினார். எனவே ஆறு காலங்களிலும் தவறாது பூஜைகள் நடைபெறும் பொருட்டு வேத ஆகமங்களில் சிறந்த முனிவர்களும், ஞானியரும் மற்றும் சைவ அந்தணர்களையும் காசி ஷேத்திரத்தில் இருந்து அழைத்து வந்து மதுரையம்பதியில் நிலைபெற செய்தார். மதுராபுரி நகரமானது நாளடைவில் மதுரை என அனைவராலும் அழைக்கப்படத் துவங்கியது.

ஆட்சி பொறுப்பு மாறுதல் :

குலசேகர பாண்டியனுக்கு பின்பு அவரின் வாரிசான மலையத்துவச பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நேர்மை தவறாது ஆட்சிபுரிந்து வந்து கொண்டிருந்தார்.

மணம் முடித்தல் :

மலையத்துவச பாண்டியன் சூரிய குலத்தை சேர்ந்த சூரசேன சோழ மன்னனுடைய அன்பு மகளான காஞ்சனமாலையை பெரியோர்கள் மற்றும் நாட்டு மக்கள் சூழ மணம் செய்து கொண்டார். அவர் சோமசுந்தரப் பெருமானை காலம் தவறாது பூஜை நியமத்துடன் வழிபாடு செய்து வந்தார். அவர் பல வெற்றிகளை அடைந்து நாடுகளை விரிவுப்படுத்தினாலும் அவர் மனதில் ஒரு குறை மட்டுமே இருந்து வந்தது. அதாவது, தனக்கான வாரிசு இல்லாமையே அவரின் மிகப் பெரிய குறையாக இருந்து வந்தது.

ஆலோசனை கேட்டல் :

தன் மனதில் உள்ள குறையை நிவர்த்தி செய்வதற்காக ஞானத்தில் சிறந்த முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவர்கள் அசுவமேத யாகம் செய்ய உங்களின் விருப்பம் யாவும் நிறைவேறும் என்று கூறினார்கள். தன் மனதில் உள்ள கவலைகளை களைக்க ஆலோசனை கூறிய முனிவர்களை வணங்கி பின் தன் அரண்மனைக்கு வந்தார். பின்பு அமைச்சர் மற்றும் அந்தணர் பெருமக்களை அழைத்து முனிவர்கள் கூறியபடியே அசுவமேத யாகம் நடத்த தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணையை பிறப்பித்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்