Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 177

யாகம் நடைபெற தொடங்குதல் :

மலையத்துவச பாண்டியன் வேத முறைப்படி அசுவமேத யாகம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் கவனித்துக்கொண்டு இருந்தார். அசுவமேத யாகத்தில் தொண்ணூற்று ஒன்பது யாகங்களை செய்து முடித்து நூறாவது யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

இந்திரதேவன் காட்சி அளித்தல் :

அசுவமேத யாகம் நிறைவடைய நிறைவடைய இந்திரலோகத்தில் இருந்து வந்த இந்திரதேவனுக்கு தனது பதவிக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ? என்ற எண்ணம் தோன்றத் துவங்கியது. ஆனால், மன்னரின் விருப்பம் யாதென்று அறிந்த பின்பு, அதற்கான மாற்று வழியை இந்திரதேவன் மலையத்துவச பாண்டிய மன்னனிடம் உரைக்க வேண்டும் என்று எண்ணினார்.

மேலும், நூறாவது யாகம் நிறைவு பெற்றுவிட்டால் பாண்டிய மன்னன் இந்திர பதவிக்கு தகுதியானவராகவும், தன்னுடைய பதவியை அடைந்துவிட கூடியவராகவும் இந்திரதேவன் கருதினார். எனவே, இந்திரதேவன் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள மலையத்துவச மன்னன் முன்பாக தோன்றினார்.

எதிர்பாராத இந்திரதேவரின் வருகையை கண்டதும் மலையத்துவச பாண்டிய மன்னன் இந்திரதேவரை வணங்கினார். இந்திரதேவரோ, பாண்டிய மன்னனை நோக்கி உன் வேண்டுதலை யாம் அறிவோம் என்றும், தாங்கள் எதற்காக இந்த யாகங்களை செய்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன் என்றும் கூறினார். பின்பு தங்கள் மனதிலுள்ள கவலை குறைவதற்காக நீங்கள் புத்திர காமேஷ்டி யாகம் செய்வீர்களாக... என்று கூறி மறைந்தார்.

இந்திரதேவன் அளித்துச் சென்ற அறிவுரைகளின்படி புத்திர காமேஷ்டி யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் மன்னர். பின்பு தனது மனைவியான காஞ்சனமாலையுடன் சேர்ந்து நியம விதிமுறைகளை தவறாது கடைபிடித்து வேத ஆகமங்களின் அடிப்படையில் மதுரை திருத்தலத்திற்கு கிழக்கே சிறந்த முறையில் ஒரு வேள்விச் சாலை அமைத்து அங்கு யாகம் செய்யத் துவங்கினார். யாகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும்போது மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் ஈடுபட்டார்.

புத்திர காமேஷ்டி யாகம் நிறைவடைதல் :

புத்திர காமேஷ்டி யாகத்தின் இறுதிகட்ட பணிகளில், ஒரு சுபமுகூர்த்த தினத்தில் யாகத்தினால் ஏற்பட்ட நன்மைக்கான பலன்கள் கிடைக்க தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றின. அதாவது சுப சகுனங்கள் அவ்விடத்தில் எல்லாம் நிகழ்ந்த வண்ணமாக அமைந்திருந்தன.

பூர்வ ஜென்மம் :

கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸஷு என்பவர் சிவபெருமானின் அருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றார். எம்பெருமான் அருளிய அந்த குழந்தைக்கு வித்யாவதி என பெயர் சூட்டி அன்போடும், பண்போடும் வளர்த்து வந்தார். வித்யாவதி சிறு வயது முதலே எம்பெருமானை காட்டிலும் அம்பாள் மீது அதீத பக்தியும், அன்பும் கொண்டு இருந்தாள். ஒரு சமயம் வித்யாவதிக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் எழுந்து அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது.

பின்பு, தன் தந்தையிடம் சென்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தாள். அவரும் கடம்பவனம் எனப்படும் மதுரை தலத்தில் இருந்து அருள்புரியும் அம்பிகை சியாமளா தேவியை வழிபடும்படி கூறினார். தனது தந்தையின் கூற்றுப்படி வித்யாவதியும் அம்பாளைத் தரிசிக்க பூலோகத்திலுள்ள மதுரை தலத்தில் எழுந்தருளியுள்ள சியாமளா தேவியை தரிசிக்க வந்தார். சியாமளா தேவி சன்னதி முன் நின்று, மனம் உருகி தன்னை மறந்து அம்பிகையை வழிபட்டாள். மதுரை தலத்தில் இருக்கும் அம்பிகையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அங்கேயே தங்கி சேவை செய்ய தொடங்கினாள்.

வித்யாவதியின் மாசற்ற அன்பிற்கும், பக்திக்கும் மனம் மகிழ்ந்த சியாமளா தேவி, வித்யாவதியின் முன் 3 வயது சிறுமியாக காட்சி அளித்தார். சிறுமியாக இருக்கும் அம்பிகையே வித்யாவதியிடம் என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். தன் முன்னால் இருக்கும் குழந்தையை கண்டதும் வந்திருப்பவர் யார்? என உணர்ந்து கொண்டார். குழந்தை வடிவில் இருக்கும் அம்பிகையிடம் வித்யாவதி, எப்போதும் நான் தங்கள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், மேலும் குழந்தையாக காட்சி தந்த நீங்கள் எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை அருள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக