புதன், 1 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 178

குழந்தை வடிவில் இருந்த அம்பிகையும் உன்னுடைய விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று கூறினாள். அம்பிகை அளித்த வரத்தினாலே இன்று சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக வித்யாவதி அவதரித்தாள். காஞ்சனமாலையும் சிறுவயது முதலே அம்பாள் மீது பக்தி கொண்டிருந்தாள். காஞ்சனமாலை குழந்தை பருவம் நிறைவடைந்து மங்கை பருவம் அடைந்ததும் மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை.

வரமும், யாகமும் பலன் அளித்தல் :

மன்னனும் புத்திரப்பேறுக்காக நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம் மற்றும் காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் தேவி அளித்த வரத்தின் பயனாகவும், விண்ணுலக தேவர்கள் கோசம் எழுப்பவும், ஏழு உலகங்களும் மகிழ்ச்சி கொள்ளும் விதமாகவும், பிரபந்தத்திற்கு தாயாக இருக்கும் தாயே...!! அக்னி தேவன் தனது தவத்தின் பயனாக அடையும் பொருட்டு அந்த யாக குண்டத்தில் இருந்து மூன்று வயதுடன் மூன்று தனங்களை கொண்டவளாக தோன்றினாள்.
அக்னியில் இருந்து வெளிவந்த குழந்தை பலவிதமான அணிகலன்களை சூடிக்கொண்டு இருந்தாள். அங்கிருந்த அனைவருக்கும் தங்களின் பிறவிப்பயனை அடையும் பொருட்டு காட்சி அளித்தாள். குழந்தையின் கொண்டை பகுதியில் முத்துமாலை தொங்கிட, சூரியனின் ஒளியை மிஞ்சும் அளவிற்கு அதிக ஒளியை வெளிப்படுத்தும் பவள மாலையையும், இடையில் சிறிய மெல்லிய ஆடையையும் அதன் மேல் மணிமேகலையும் அணியப்பெற்று அனைவருக்கும் காட்சியளித்தாள்.

செவிகளில் மாணிக்கத்தால் செய்யப்பட்ட குண்டலங்களை அணிந்த வண்ணமும், இரு கால்களிலும் சிலம்புகளை அணியப்பெற்று இனிய ஒலிகளை ஒலித்துக் கொண்டிருந்தன. காண்போரை வசீகரிக்க செய்யும் அழகிய புன்னகை பூத்த முகத்துடன் தளர் நடையிட்டு பூங்கொடி போன்று அசைந்து விளையாட்டுத்தனமாக காஞ்சனமாலையின் மடியில் வந்து அமர்ந்தாள்.

மாற்றம் பிறத்தல் :

நிகழ்ந்தன யாதென்று அறிவதற்குள் நிகழ்ந்த மாற்றங்களால் ஏற்பட்ட அதிசயத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஒரே திகைப்புடனும், ஆச்சரியத்துடனும் காட்சியளித்தனர். ஆனால், அக்னியில் இருந்து வந்திருக்கும் இந்த குழந்தை சாதாரண குழந்தை அல்ல என்பதை மட்டும் அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர்.

குழந்தையானவள் காஞ்சனமாலையின் மடியில் வந்து அமர்ந்தவுடன் காஞ்சனமாலை அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்து வந்தன. அதாவது சிற்றின்பம் மறைந்து பேரின்பம் அடைந்த நிலைக்கு அவளின் மனமானது அவ்வளவு மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டிருந்தது. மடியில் அமர்ந்த அந்த குழந்தையை தனது மார்போடு அணைத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

வேங்கையின் கவலை :

தன்னுடைய மகளாக வந்திருப்பவள் உமாதேவியே என்பதை உணராமலும், தனது மனைவி செய்த பூர்வ ஜென்ம புண்ணியமும், அவள் பெற்ற வரத்தினால் இந்நிகழ்ச்சியானது நிகழ்ந்துள்ளதை உணராத பாண்டிய அரசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இன்பம் அடைவதற்குப் பதிலாக துன்பத்தை பலவாறு எண்ணி துடித்துக்கொண்டிருந்தார்.

அதாவது நான் ஒரு ஆண்மகனை வேண்டி அல்லவா புத்திரகாமேஷ்டி யாகம் வளர்த்தேன். ஆனால், வந்திருப்பது மூன்று தனங்களை கொண்ட பெண் குழந்தை. நான் என்ன செய்ய இயலும். இதை என் எதிரிகள் அறிந்தால் என்னின் நிலையை எண்ணி எள்ளி நகையாடுவார்களே...! என் நாட்டின் எதிர்காலம் என்னவாகுமோ என்று மனதில் நினைத்தவாறே எண்ணிக் கொண்டிருந்தார்.

அசரீரி உருவாதல் :

மன்னரின் மனவேதனையை அறிந்த எம்பெருமான் தனது பக்தரின் கவலைகளை போக்குவதற்காகவே அவ்விடத்தில் எம்பெருமானின் அருளால் ஒரு அசரீரி ஒன்று உருவானது. அசரீரியோ... வேந்தரே! கவலைக்கொள்ள வேண்டாம்... அக்னியிலிருந்து வந்திருப்பது பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆண்மகனுக்கு உண்டான அனைத்து விதமான வித்தைகளையும், கலைகளையும் திருமகளுக்கு பயிற்றுவிப்பாயாக என்று ஒலித்தது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்