Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 179

ஒரு நன்னாளில் வேத முறைப்படி நிகழ்ச்சிகள் யாவும் நடைபெற்று, திருமகளுக்கு தடாதகை என்னும் நாமம் சூட்டுவாயாக... வயது வந்ததும் அவருக்கு உண்டான மகுடத்தையும் சூட்டுவாயாக... என்றும், திருமணப் பருவம் அடைந்ததும் அவளுக்கானவன் அவளை நோக்கி வந்தவுடன், அவள் கணவரை கண்டதும் அவர்களிடம் இருக்கும் மூன்றாவது தனமானது மறைந்துவிடும் என்றும், கவலை கொள்ள வேண்டாம் என்றும் அசரீரி ஒலித்து அடங்கியது.

வேந்தரின் கவலை அகலுதல் :

அசரீரி ஒலித்து மறைந்ததும் மன்னன் மனதில் இருந்து வந்த கவலைகள் யாவும் நீங்கி மகிழ்ச்சி அடையத் தொடங்கினார். பின்பு, தனது மகளை ஆனந்த கண்ணீருடன் அன்புடன் தூக்கி மகிழ்ந்தார். இந்தக் குழந்தையை தனக்கு வரமளித்த சோமசுந்தரப் பெருமானை மனதார எண்ணி அவரை வாழ்த்தி துதித்துக்கொண்டிருந்தார். பின்பு யாகம் நடைபெற்ற இடத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க அவ்விடத்தைவிட்டு அரண்மனைக்கு மன்னரின் வாரிசுடன் செல்ல அனைவரும் தயாராக இருந்தனர்.

விழாக்கோலம் உண்டாதல் :

தங்களது மன்னருக்கு மகள் கிடைத்த செய்தியானது நாட்டு மக்கள் மத்தியிலும், அரண்மனையிலும் பரவத் துவங்கியது. மக்களோ... மன்னரையும், அவரது மகளையும் வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செல்லும் வழிநெடுகிலும் செய்யத் துவங்கினர். பாண்டிய நகரமே விழாக்கோலம் பூண்டு எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க அவர்களின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தன.

யாகசாலையில் இருந்து புறப்பட்டு வந்த மன்னருக்கு மக்கள் அனைவரும் இருபுறங்களில் நின்று மலர்தூவி அரண்மனை வரை வரவேற்று, தங்களின் அன்பினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அரண்மனையிலும் மக்கள் அனைவருக்கும் வேந்தரின் மகளை காண்பிக்கும் வகையிலான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டிருந்தன. அரண்மனையை அடைந்த வேந்தரும் தனது மகிழ்ச்சியை தங்களது நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மன்னன் மறையவர்களுக்கும், அங்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கி அவர்களிடம் இருந்து ஆசிகளையும் பெற்றுக்கொண்டார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சோமசுந்தரப் பெருமான் ஆலயத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும், பூஜை மற்றும் திருவிழாக்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நகரத்திலும் திருத்தலத்திலும் விழாக்கோலம் காண்பது போல அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கே அமையப்பெற்று காணப்பட்டன.

மன்னன் தன்னுடைய மகிழ்ச்சியை தன் நாட்டு மக்களிடம் மட்டும் வெளிப்படுத்தாமல் தன்னால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் தன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் வகையில் கைதிகளின் பகையரசருக்கு அவர்களின் நாட்டையும், அவர்களுக்கு உண்டான மரியாதையும் கொடுத்து, அவர்கள் நாட்டை மீண்டும் ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்தார். கல்வி வேள்வியில் சிறந்து விளங்கும் புலவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக பரிசுப்பொருட்களும், பட்டயங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. மதுரை மாநகரம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.

பெயர் சூட்டல் :

மனமகிழ்ச்சி அடைந்த மன்னன் தனது மகளுக்கு ஒரு நல்ல நாளில் வேதமுறைப்படி பெயர் சூட்ட வேண்டும் என்று எண்ணினார். அதைப்போலவே நாடு முழுவதும் மன்னனின் மகளுக்கு பெயர் சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பின்பு, தன் மகளுக்கு முனிவர்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் தடாதகை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

காஞ்சனமாலையும், மலையத்துவச பாண்டிய மன்னனும் தங்களுக்கு கிடைத்த தெய்வக் குழந்தையான தடாதகையை மிகவும் அன்புடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தனர். தடாதகை பிராட்டியார் பலவிதமான ஆடல் கலைகளையும், சிறு சிறு விளையாட்டு தனத்துடனும், அழகிய மழலை பேச்சுகளாலும் தாய், தந்தையருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக