Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

சிவபுராணம்.!பகுதி 180

மழலைப்பருவம் தாண்டி வளர வளர நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் மற்றும் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு என அனைத்தையும் கற்று உணர்ந்தார். போர்க்கலைகளில் ஒன்றான யானையேற்றம், குதிரையேற்றம் மற்றும் தேர் ஓட்டுதல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். அதுமட்டுமின்றி வில் எய்தும் பயிற்சி, வாள் மற்றும் வேல் எய்தும் பயிற்சிகள் என அனைத்திலும் வல்லமை பெற்று விளங்கி கொண்டிருந்தார்.

சகல கலைகளிலும் நன்கு தேர்ச்சி அடைந்து ஒரு இளவரசனுக்கு சமமான அனைத்து தகுதிகளுடன் காணப்பட்டார். தனது மகள் அடைந்த இந்த நிலையை கண்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு மகன் இல்லை என்ற கவலையை இறைவன் போக்கிவிட்டார் என்றும், தகுந்த காலம் வந்ததும் தடாதகை பிராட்டியாருக்கு திருமுடி சூட்ட வேண்டும் என்றும் மன்னர் கருதினார்.

முடி சூட்டுதல் :

பயிற்சிகள் அனைத்தும் நிறைவுப்பெற்று அரியணையை அடையும் வயதை தனது மகள் அடைந்ததும் மன்னர் பல நாடுகளுக்கு ஓலை அனுப்பி பலநாட்டு மன்னர்களையும் தனது ராஜ்ஜியத்திற்கு வரவழைத்திருந்தார்.

தனது மகளின் முடி சூட்டும் விழாவானது மதுரையில் இதுவரை காணாத அளவில் மிகவும் ஆச்சரியப்படும் வகையிலும், மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் வகையிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருநகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டு அழகாக காட்சியளித்தன.

முடி சூட்டும் விழாவிற்காக கங்கை மற்றும் காவிரி முதலான ஒன்பது புண்ணிய ஆறுகளில் இருந்து புனித நீரானது வேலைப்பாடுகள் நிறைந்த பொற்குடங்களில் கொண்டு வரப்பெற்றன. விண்ணுலகத்தில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காக பல யாகங்கள் செய்யப்பட்டன.

நகர்வலம் வருதல் :

பாண்டிய குலத்திற்கு பரம்பரையாக பின்பற்றப்படும் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன. அதாவது, பரம்பரைக்கு உரிய மணி மகுடத்தை யானையின் மீது வைத்து நகர் முழுவதும் விஜயம் செய்தவாறு கொண்டு வந்து பூஜை செய்தனர்.

மக்களின் மனமகிழ்ச்சி :

மாணிக்கம் மற்றும் பொன் கற்களை கொண்டு அழகிய வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட ஐந்து தலைநாகம் கொண்டுள்ள சிங்காதனத்தின் மீது தடாதகை பிராட்டியார் எழுந்தருள, அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரகோஷம் எழுப்பினர்.

மந்திர ஒலிகள் யாவும் விண்ணைத்தொட... மங்கள வாத்தியங்கள் யாவும் ஒலிக்க... புண்ணிய தீர்த்தங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டன. ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ சொக்கநாத பெருமான் முன்னிலையில் தன்னுடைய குமாரத்திக்கு பாண்டிய மன்னன் மணிமுடி சூட்டி தலைமை பதவியை அளித்தார்.

விஜயம் செய்தல் :

பின்னர் நகர்வலம் செல்வதற்காக அலங்காரம் செய்யப்பட்ட யானையின் மீது மன்னர் சூட்டிய முடியை அணிந்த வண்ணம் தடாதகை பிராட்டியார் நகர்வலம் செய்யத் துவங்கினார். தன்னுடைய மகள் முடி சூடிக்கொண்டு நகர்வலம் வருவதை பார்த்த பாண்டிய மன்னனுக்கு பிராட்டியார் அக்னியில் இருந்து வெளிவந்தபோது அசரீரி கூறியதை கேட்டபோது இருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் தற்போது அதைவிட பன்மடங்கு மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார்.

நாட்கள் யாவும் செல்ல துவங்கின. மலையத்துவச மன்னனும் விண்ணுலக பதவியை அடைந்தார். மன்னருக்கு பின் அனைத்து நாடுகளும் தடாதகை பிராட்டியாரின் குடைக்கு கீழ் வந்தது. நாடுகள் அனைத்தையும் நீதி தவறாமல் சிறப்புடன் ஆட்சி செய்தார். நிர்வாகம், அரசாட்சி, மக்கள் மத்தியில் செல்வாக்கு என அனைத்திலும் தடாதகை பிராட்டியார்க்கு ஆதரவும், கீர்த்தியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

சிவபுராணம் நாளையும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக