திங்கள், 30 மார்ச், 2020

தருமரிடம் கேள்வி கேட்கும் யட்சன்....!


தருமர், தம்பி பீமா! ஜயத்ரதன், கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவன் நமக்கு மைத்துனன் ஆவான். அதனால் விட்டுவிடு எனக் கூறினார். பாண்டவர்களிடம் தோற்று தலைக்குனிந்து திரும்பிய ஜயத்ரதன் கங்கை கரைக்குச் சென்றான். அங்கு சிவனை காண கடும் தவம் இருந்தான். சிவபெருமான், ஜயத்ரதன் முன் தோன்றி, உன் தவத்தை கண்டு மகிழ்ந்தேன். 

உனக்கு என்ன வரம் வேண்டுமென்பதை கேள் என்றார். ஜயத்ரதன், பெருமானே! பாண்டவர்களால் நான் தலைக்குனிந்து விட்டேன். அதனால் நான் அவர்களை அழிக்க வேண்டும். அதற்கான சக்தியை தாங்கள் எனக்கு அருள வேண்டும் என்றான். 
சிவபெருமான், ஜயத்ரதனே! பாண்டவர்களுக்கு உறுதுணையாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். அதனால் அவர்களை எதிர்த்து உன்னால் எதுவும் செய்ய முடியாது. உனக்கு பாண்டவர்களை எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கிறேன்.

ஆனால் இதைக் கொண்டு அவர்களை அழிக்க முடியாது எனக் கூறி விட்டு மறைந்தார். அதன் பிறகு ஜயத்ரதன், தன் நகரத்திற்கு சென்றான். பன்னிரண்டு கால வனவாசம் முடியும் நேரத்தில் பாண்டவர்களுக்கு மற்றொரு சோதனையும் வந்தது. 

அங்கு முனிவர் ஒருவரின் அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்று மானின் கொம்பில் ஒற்றிக் கொண்டது. அந்த மான் அங்கிருந்து வேகமாக ஓடி விட்டது. உடனே விரைந்து சென்று பாண்டவர்களிடம், எனது கடைக்கோலை மான் ஒன்று எடுத்துச் சென்றுவிட்டது. 

அந்த கடைக்கோலை தாங்கள் எனக்கு மீட்டுத் தர வேண்டும் என வேண்டினார். பாண்டவர்கள், முனிவரே! தாங்கள் கவலைக் கொள்ளாமல் இருங்கள். கடைக்கோலை மானிடமிருந்து நாங்கள் மீட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றனர். உடனே பாண்டவர்கள் மானை தேடி காட்டிற்கு சென்றனர். வெகு தூரம் சென்றதால் பாண்டவர்களுக்கு தாகம் ஏற்பட்டது.

தருமர், நகுலனிடம் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார். அவ்வாறே நகுலனும் தண்ணீரை தேடி சென்றான். அங்கு காட்டின் நடுவே ஒரு குளம் இருப்பதை நகுலன் பார்த்தான். 

அங்கு சென்று தண்ணீரை பருக முற்பட்டான். அப்பொழுது அவனுக்கு 'நில்" என்னும் குரல் கேட்டது. ஆனால் நகுலன் அதனை பொருட்படுத்தாமல் தண்ணீரை பருகினான். தண்ணீரை பருகிய உடனே நகுலன் அவ்விடத்திலேயே மாண்டு விழுந்தான். நகுலனை வெகு நேரம் காணாததால், தருமர் சகாதேவனை அனுப்பினான். 

சகாதேவனும், காட்டின் நடுவே ஒரு குளம் இருப்பதை கண்டான். அங்கு சென்று தண்ணீரை பருக முற்பட்டான். அப்பொழுது அவனுக்கு 'நில்" என்னும் குரல் கேட்டது. ஆனால் சகாதேவன் அதனை பொருட்படுத்தாமல் தண்ணீரை பருகினான். தண்ணீரை பருகிய உடனே சகாதேவன் அவ்விடத்திலேயே மாண்டு விழுந்தான்.

சகாதேவனையும் வெகுநேரம் காணாததால் தருமர், பீமனை அனுப்பினான். பீமனும் அவ்வாறே மாண்டு விழுந்தான். பீமனை காணாததால் அர்ஜூனனை அனுப்பினான். அர்ஜூனனும் மற்ற சகோதரர்கள் போல் மாண்டு விழுந்தான். சகோதரர்கள் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் தருமன் சந்தேகமடைந்தான். சகோதரர்களை தேடிச் சென்றான். காட்டில் குளம் இருக்கும் பகுதியை அடைந்தான். அங்கு தனது சகோதரர்கள் வீழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

அப்பொழுது மிகவும் தாகத்துடன் இருந்ததால் அங்கிருந்த தண்ணீரை பருக முயன்றான். அப்பொழுது நில் என்னும் குரல் அவனுக்கு கேட்டது. நீ இந்த தண்ணீரை பருகினால் உன் சகோதரர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும். இந்த குளம் என்னுடையது. என் அனுமதியின்றி இவர்கள் தண்ணீர் பருகியதால் இவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டது. நான் உன்னிடம் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தால் நீ இங்கு தண்ணீர் பருகலாம் என்றது. இக்குரல் யட்சனுடையது என்பதை அறிந்த தருமர் சரி எனக் கூறினான். நான் என்னால் இயன்ற வரை பதிலை தருகிறேன் என்றான்.

யட்சனின் கேள்விகளும், அதற்கு தர்மர் கூறும் பதில்களும் :

யட்சன் : சூரியனை உதிக்கச் செய்வது யார்?

தருமர் : பிரம்மா

யட்சன் : சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்?

தருமர் : சத்தியத்தில்

யட்சன் : ஒருவன் எதனால் சிறப்படைகிறான்?

தருமர் : மன உறுதியால்

யட்சன் : சாதுக்களின் தருமம் எது?

தருமர் : தவம்

யட்சன் : உழவர்களுக்கு எது முக்கியம்?

தருமர் : மழை

யட்சன் : விதைப்பதற்கு எது சிறந்தது

தருமர் : நல்ல விதை

யட்சன் : பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?

தருமர் : தாய்

யட்சன் : வானினும் உயர்ந்தவர் யார்?

தருமர் : தந்தை

யட்சன் : காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது?

தருமர் : மனம்

யட்சன் : புல்லைவிட அதிகமானது எது?

தருமர் : கவலை

யட்சன் : ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்?

தருமர் : மகன்

யட்சன் : மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது?

தருமர் : மனைவி

யட்சன் : ஒருவன் எதனை விட வேண்டும்?

தருமர் : தற்பெருமையை

யட்சன் : யார் உயிர் அற்றவன்?

தருமர் : வறுமையாளன்

யட்சன் : எது தவம்?

தருமர் : மன அடக்கம்

யட்சன் : பொறுமை என்பது?

தருமர் : இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

யட்சன் : உயர்ந்தோர் என்பவர் யார்?

தருமர் : நல்லொழுக்கம் உடையவர்

யட்சன் : மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?

தருமர் : கடன் வாங்காதவர்

யட்சன் : தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது?

தருமர் : மீன்

யட்சன் : இதயம் இல்லாதது எது?

தருமர் : கல்

யட்சன் : உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது?

தருமர் : கல்வி

யட்சன் : வேகம் மிக்கது எது?

தருமர் : நதி

யட்சன் : நோய் உடையவனின் நண்பன் யார்?

தருமர் : மருத்துவர்

யட்சன் : உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார்?

தருமர் : அவன் செய்த நல்லறம்

யட்சன் : எது அமிழ்தம்?

தருமர் : பால்

யட்சன் : வெற்றிக்கு அடிப்படை எது?

தருமர் : விடா முயற்சி

யட்சன் : புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம்?

தருமர் : இல்லாதவர்க்கு ஒன்றை தருவதால்

யட்சன் : உலகில் தனியாக உலா வருபவன் யார்?

தருமர் : சூரியன்

யட்சன் : உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?

தருமர் : கொல்லாமை

யட்சன் : உலகெங்கும் நிறைந்திருப்பது எது?

தருமர் : அஞ்ஞானம்

யட்சன் : முக்திக்கு உரிய வழி எது?

தருமர் : பற்றினை முற்றும் விலக்குதல்

யட்சன் : யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது?

தருமர் : சாதுக்களிடம் கொண்ட நட்பு

யட்சன் : நாட்டுக்கு உயிர் போன்றவன் யார்?

தருமர் : அரசன்

யட்சன் : எது ஞானம்?

தருமர் : மெய்ப்பொருளை அறிவதே ஞானம்

யட்சன் : ஒருவனுக்கு பகையாவது எது?

தருமர் : கோபம்

யட்சன் : முக்திக்கு தடையாக இருப்பது எது?

தருமர் : 'நான்" என்னும் ஆணவம்

யட்சன் : பிறப்புக்கு வித்திடுவது எது?

தருமர் : ஆசை

யட்சன் : எப்போதும் நிறைவேறாதது எது?

தருமர் : பேராசை

யட்சன் : யார் முனிவர்?

தருமர் : ஆசை அற்றவர்

யட்சன் : எது நல்வழி?

தருமர் : சான்றோர் செல்லும் வழி

யட்சன் : எது வியப்பானது?

தருமர் : நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும். தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே! அதுதான் வியப்பானது

யட்சன் : மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

தருமர் : எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.

யட்சன், தருமரின் பதில்களில் மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்