திங்கள், 30 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 171

விஸ்வகர்மாவை அழைத்தல் :

தேவர்களின் தச்சனான விஸ்வகர்மாவை அழைத்து இதுவரை இல்லாத, புதிய எழில் மிகுந்த நிலையில் இருக்கக்கூடிய எவரும் கண்டிராத வகையில் நேர்த்தியான செயல்முறைகள் கொண்ட ஒரு விமானம் ஒன்றை அமைக்குமாறு ஆணையிட்டார் இந்திரன்.

எம்பெருமானை பூஜித்தல் :

மரத்தின் நிழலில் அமைதியான இடத்தில் இருந்த சிவபெருமானை துதித்த வண்ணம் அமர்ந்திருந்த தேவேந்திரனுக்கு தேவ தூதுவர்கள் வரும்வரை பொறுமை இல்லாமல் எம்பெருமானை அர்ச்சனை செய்து பூஜிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கத் துவங்கியது.

பொற்றாமரைக்குளம் உருவாதல் :

மலர்கள் இல்லாத பட்சத்தில் அவர், தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபெருமான் வீற்றிருந்த இடத்திற்கு அருகில் ஒரு அழகிய குளமானது இருந்தது. அந்தக் குளத்தில் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன.

தாமரை மலர்களை கண்டதும் தேவேந்திரனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தாமரை மலர்களை கொண்டு சிவபெருமானை பூஜிக்க வேண்டும் என்று எண்ணி குளத்தின் அருகே சென்றார். ஆனால், குளத்திலிருந்த தாமரை மலர்களோ நன்முறையில் இல்லாததைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். தேவேந்திரனின் விருப்பத்தை அறிந்த எம்பெருமான் அந்த குளத்தில் அழகிய பொன் தாமரைகளை பூத்துக்குலுங்க திருவருள் செய்தார். அந்த காட்சியை கண்டதும் தேவேந்திரன் மிகவும் பக்தியுடன் சோமசுந்தரரை போற்றி வணங்கினார்.

பொன் தாமரைகள் பூத்துக்குலுங்கிய அந்த குளத்திற்கு 'பொற்றாமரைக்குளம்" என்ற திருநாமத்தை சூட்டி அந்தக் குளத்தில் எம்பெருமானின் எண்ணங்களுடன் பக்தி பரவசத்துடன் குளித்தெழுந்து அங்கிருந்த பொன் தாமரை மலர்களை பறித்துக்கொண்டு எம்பெருமான் வீற்றிருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ஆகாயத்தில் இருந்து ஒளிமயமான விமானம் வந்து இறங்கியது. தேவ தச்சனால் மிகவும் நேர்த்தியான முறைகளால் செய்யப்பட்ட விமானமானது பூஜைக்கு உரிய பொருட்களுடன் தேவலோகத்தில் இருந்து இறங்கியது.

தேவலோகத்திலிருந்து வந்த பொருட்களைக் கொண்டு எம்பெருமானை பூஜிக்கத் தொடங்கினார் இந்திரதேவன். சிவாகம முறைப்படி பூஜைகளையும், பக்தி பரவசத்துடன் சோம சுந்தரரையும் வணங்கி அவருடைய சிந்தனைகளை கொண்டு அவ்விடத்தில் அமர்ந்து கொண்டு எம்பெருமானை மனதார போற்றி வணங்கினார் இந்திரதேவன்.

எம்பெருமான் காட்சி அளித்தல் :

இந்திரதேவன் செய்த பூஜையினால் மிகவும் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவ்விடத்திலிருந்த சிவலிங்கத்திலிருந்து இந்திரதேவர்களுக்கு காட்சி அளிக்கத் துவங்கினார்.

வரம் பெறுதல் :

தேவேந்திரா...!! உன்னுடைய பக்தியாலும், பூஜையாலும் யாம் வந்தோம் என்றும், உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக...!! என்றும் கூறினார். எம்பெருமான் கூறியதைக் கேட்ட தேவேந்திரன் மிகவும் மனம் மகிழ்ந்து எம்பெருமானை வணங்கி பணிந்து அவரிடம் தேவர்களை என்றும் காக்கக்கூடியவரான தங்களை பூஜிக்கக்கூடிய பாக்கியத்தை தவிர வேறு ஏதாவது உண்டோ? தங்களை சதாகாலமும் பூஜை செய்யக்கூடிய அடியானாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். தேவேந்திரனின் கூற்றுகளைக் கேட்ட எம்பெருமானும் தேவேந்திரனிடம், தேவேந்திரா...!! நீ ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் இங்கு வந்து பூஜை செய்வாயாக என்று கூறினார்.

சித்ரா பௌர்ணமி அன்று நீ என்னை இங்கு வந்து பூஜை செய்தால் ஒரு ஆண்டு முழுவதும் நீ என்னை பூஜை செய்த பலனை பெறுவாயாக என்றும், நீ தேவலோகம் சென்று நன்முறையில் இருப்பாயாக என்றும், தக்க சமயம் வரும்போது உனக்கான மோட்ச கதியை தந்து அருள் புரிகின்றோம் என்றும் திருவாய் மலர்ந்து அருளி அவ்விடம் விட்டுச் சென்றார். தேவேந்திரனும் சிவபெருமானை வணங்கி சிவசிந்தனையுடன் தன்னுடைய தேவலோகத்திற்கு சென்று தேவ குருவிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து ஆசிப்பெற்று தேவேந்திரனாக தனது பணியை செய்யத் தொடங்கினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்