Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

சோதனைகளை சாதனைகளாக்கு!

ஒரு ஊரில் கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கு சிவா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வந்தான். ஆரம்பத்தில் அவன் செய்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்படியே சில மாதங்கள் கடந்தன. திடீரென அவன் செய்த தொழிலில் மந்தமான போக்கு ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைந்தான். எனவே என்ன செய்வது என்று புரியாமல் மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டான்.

தன் மகனின் சூழ்நிலையைக் கண்ட கணேசன், மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்குள் சென்றார். சமையலறையில் இருந்து மூன்று பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு உருளைக்கிழங்கையும், இரண்டாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு முட்டையையும் போட்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வைத்து வேக வைத்தார். உருளைக்கிழங்கும், முட்டையும் நன்கு வெந்ததும், இரண்டையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார்.

பிறகு மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீத்தூளை கலந்து அடுப்பில் வைத்தார். சூடான டீ தயார் ஆனது. சூடான டீயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு காபி கப்பில் ஊற்றி சூடாக தன் மகனுக்கு கொடுத்தார். சிவாவும், அப்பா கொடுத்த டீயை வாங்கிப் பருகினான். அப்போது கணேசன் தன் மகனிடம் கேட்டார். சிவா! நீ இப்போது நன்றாக வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவனா? அல்லது முட்டையைப் போன்றவனா? அல்லது டீத்தூளைப் போன்றவனா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல் என்றார்.

அதற்கு சிவா, அப்பா! எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அதற்கு கணேசன், உருளைக்கிழங்கு, முட்டை, டீத்தூள் ஆகிய மூன்று பொருட்களும் ஒரே எதிரியாகிய கொதிக்கும் தண்ணீரைத்தான் சந்தித்தன. அதில் முட்டையானது, தனது கடினமான வெளித்தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும், தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது. உருளைக்கிழங்கோ, கொதிக்கும் தண்ணீரில் இளகிப் பலவீனப்பட்டு விட்டது. ஆனால், டீத்தூளோ வெந்நீரை மணமுள்ளதாக்கி சுவையானதாக மாற்றிவிட்டது.

இந்த முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் டீத்தூளைப் போலத்தான் மனிதர்களில், ஒரு சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றார்கள். அதைப்போல் ஒரு சிலர் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெளிகாட்டாமல் முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றார்கள். வேறு சிலர் உருளைக்கிழங்கு போல துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொண்டு மனத்தோற்றம், வெளித்தோற்றம் ஆகிய இரண்டிலும் கோழைகளாகி விடுகின்றனர். இப்போது என் கேள்வி உனக்கு புரிகிறதா? என்று சிவாவிடம் கணேசன் கேட்டார்.

அதற்கு சிவா, அப்பா இனி நான் டீத்தூளைப் போன்றவன் என்று உற்சாகமாகப் பதில் சொன்னான். இன்று முதல் நான் டீத்தூளைப் போலவே எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை நான் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டு வாழ்வேன் என்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினான். சிவா கூறியது போலவே புத்துணர்ச்சியுடன் தொழிலில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று சிந்தித்து அதை தொழிலில் புகுத்தி செயல்பட ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே அவன் செய்து வந்த சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

தத்துவம் :

சோதனைகளைக் கண்டு சோர்ந்து போகாமல், அந்த சோதனையையே சாதனைகளாக மாற்ற முயல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக