Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

வாலியின் வரம்!...

தாங்கள் எனக்கு மற்றொரு வரத்தையும் அருள வேண்டும். தங்களுடைய தம்பிகள் தங்கள்மீது மிகுந்த பாசமும், அன்பும் வைத்துள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் யாரேனும் சுக்ரீவன் தன் அண்ணனை கொன்றவன் என்று இகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இராமரும் வாலி கேட்ட இரண்டு வரங்களை அருளினார். பிறகு வாலி எம்பெருமானே! சுக்ரீவன் நன்றி மறவாதவன். சீதையை மீட்க தங்களுக்கு உதவி புரிவான். சுக்ரீவன் வாலியை பார்த்து அழுது கொண்டு இருந்தான். 

வாலி! சுக்ரீவனை பார்த்து, தம்பி! நீ வருந்தாதே! இராமர் என்றும் உனக்கு உறுதுணையாக இருப்பார் எனக் கூறினான். இராமரிடம், தங்களுக்கு துணையாக அனுமனும் இருக்கிறான். மிகவும் வலிமையுடையவன். தாங்கள் அனுமனை சாதரணமானவனாக எண்ண வேண்டாம். தாங்கள் கட்டளையிட்டால் போதும் ஒரு வேலையை நொடிக்குள் முடித்து விடும் திறமை அனுமனுக்கு உண்டு என்றான்.

தாங்கள் என் தம்பி சுக்ரீவனை இனி தங்கள் தம்பியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் சீதையை கண்டுபிடிக்க உறுதுணையாக இருப்பார்கள் என்றான் வாலி. பிறகு வாலி சுக்ரீவனை அழைத்து, கட்டி தழுவிக் கொண்டார். தம்பி சுக்ரீவா! நீ அழாதே. நீ இராமனுக்கு உதவி செய்யும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளாய். இராமர் உனக்கு கொடுக்கும் கட்டளையை செய்து முடி என்றார். இராமர் உனக்கு துணையாக இருப்பார் எனக் கூறி பல அறிவுரைகளை கூறினான். பிறகு வாலி, சுக்ரீவனை இராமனிடம் ஒப்படைத்து விட்டு இரு கரம் கூப்பி இராமனை வணங்கினான்.

பிறகு வாலி பணியாட்களை ஏவி தன் மகன் அங்கதனை அழைத்து வர அனுப்பினான். அங்கதனும் அந்த இடத்துக்கு வந்தான். தன் தந்தை வாலி இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைப் பார்த்த அவன், ஒன்றும் பேசாமல் வாலியின் மீது படுத்து அழுதான். பிறகு தன் தந்தையிடம்! தந்தையே! தங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர் யார்? தங்கள் உயிரை பறிப்பதற்கு அவனுக்கு என்ன தைரியம் என பலவாறு புலம்பி அழுதான். அழுது கொண்டு இருக்கும் தன் மகன் அங்கதனிடம், மகனே! நீ வருந்த வேண்டாம் என்று கட்டி தழுவிக் கொண்டான். மகனே! பிறப்பும், இறப்பும் எல்லோருக்கும் நிச்சயித்த ஒன்று. நான் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் இன்று இராமனால் எனக்கு மோட்ச பதவி கிடைத்துள்ளது. மனித உருவில் வில் ஏந்தி இருக்கும் பரம்பொருளான இராமனை, உன் தந்தையை கொன்றவர் என்று தவறாக எண்ணி விடாதே.

இவ்வுலகை காத்தருளும் இராமனின் மலரடியில் விழுந்து தொழுது வாழ்வாயாக எனக் கூறி தன் மகனை தழுவிக் கொண்டான். பிறகு இராமனிடம், பெருமானே! என் மகன் அரக்கர்களை அழிக்கும் ஆற்றல் படைத்த வீரன். இவனை நான் தங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றான். இராமர், தன் திருவடியில் விழுந்த அங்கதனை தழுவி, தன்னிடம் இருந்த உடைவாளை அங்கதனுக்கு கொடுத்து அருள் புரிந்தார். பிறகு வாலி இராமரை பார்த்துக் கொண்டே முக்தி நிலையை அடைந்தான். வாலி தன் கையால் அம்பை இறுக பிடித்திருந்தான். அவன் உடல் உயிரை விட்டு பிரிந்ததும் அவனின் மார்பில் இருந்து அம்பு தளர்ந்தது. அம்பு, வாலியின் மார்பில் இருந்து வெளிவந்து கங்கையில் மூழ்கி இராமனின் அம்புப்புட்டிலை வந்தடைந்தது. வாலி வானுலகம் அடைந்தான்.

பிறகு இராமன் சுக்ரீவனோடும், அங்கதனோடும் அங்கிருந்து சென்றான். வாலி இறந்த செய்தியைக் கேட்ட தாரை ஓடிவந்து வாலியின்மீது விழுந்து அழுதாள். நான் தங்களை போக வேண்டாம் என தடுத்தேனே. அதையும் மீறி சென்ற தங்களுக்கு இக்கதி நேரும் என்று தெரியாமல் போய்விட்டதே. தாங்கள் தினந்தோறும் மூன்று வேளை சிவ பூஜை செய்வீர்களே. இன்று சிவ பூஜை வழிபாட்டுக்கு மலர்களும், பாலும், தேனும், இளநீரும், பஞ்சாமிர்தமும் ஆயத்தமாக இருக்கிறது. இனி யார் சிவ பூஜை செய்வார்கள் என புலம்பி அழுதாள்.

தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக