மூங்கில் மரங்களை வெட்டும் தொழிலாளி ஒருவர் மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக காட்டிற்கு செல்லும் போது, அவருடைய பத்து வயது பையனையும் உடன் அழைத்துச் சென்றார்.
பையன், தன் அப்பாவிடம் செல்லும் வழியெல்லாம் விடாமல் கேள்விகள் நிறைய கேட்டுக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
பிறகு மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். மூங்கில் வெட்டிக் கொண்டிருக்கும் போதும், பையன் மீண்டும் கேள்விகள் கேட்டான். அதற்கு நாம் பின்பு பேசிக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டே மூங்கிலை வெட்டிக் கொண்டிருந்தார். அதன் பிறகு பையன் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பாவிடம் கேள்விகள் கேட்டான். தந்தை அவனருகில் வந்து, அப்பாவுக்கு ஒரு உதவி செய்கிறாயா? என்று கேட்டார். அவனும் சரி செய்கிறேன் என்றான். மூங்கில் வெட்டும் மரத்திற்கு அருகில் அழைத்துச் சென்றார். நான் வெட்டிப் போடும் மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கின்றாயா? என்று கேட்க, பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். அப்பா... அப்பா... என்றான் பையன். என்னடா? என்று பையனைப் பார்த்து கோபமாக கேட்டார். அப்பா இந்தக் காட்டாறு எங்கே போகுது? என்று கேட்டான். அதற்கு அவனுடைய அப்பா நம்ம வீட்டிற்குத்தான் என்று சொல்லிவிட்டு மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார்.
அதற்குப் பிறகு பையன் அப்பாவிடம் கேள்விகள் கேட்கவே இல்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு வா போகலாம் என்றார். பையனிடம், நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைத்திருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு பையன், நீங்க வெட்டின மூங்கிலை எல்லாம் ஆற்றில் போட்டு விட்டேன். இந்நேரம் அது நம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கும் என்று பொறுமையாகப் பதில் சொன்னான்.
தத்துவம் :
ஆகையால், பெரியவர்கள், இளம் வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும்போது திருத்தமாகவும், சரியாகவும் சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக