விதுரர், கிர்மீரனின் வதத்தை கூற ஆரம்பித்தார். பாண்டவர்கள் காம்யகவனத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது ஒரு ராட்சசன் அவர்களை வழிமறித்தான். அவனின் பெயர் தான் கிர்மீரன். யுதிஷ்டிரன் கிர்மீரனை பார்த்து, நீ யார்? எதற்காக எங்களை வழிமறித்தாய் எனக் கேட்டான். கிர்மீரன், நான் பகாசூரனின் சகோதரன். என் பெயர் கிர்மீரன். என் அண்ணனை வதம் செய்த பீமனை பழிவாங்கவே இங்கு வந்துள்ளேன். எங்கே அந்த பீமசேனன். அவனை நான் பழிவாங்க வேண்டும் என்றான். யுதிஷ்டிரன், நாங்கள் பாண்டுவின் மைந்தர்கள். என் பெயர் யுதிஷ்டிரன், இவன் பலசாலியான பீமசேனன். இவன் காண்டீபம் தாங்கிய அர்ஜுனன். இவர்கள் இருவரும் நகுலன், சகாதேவன். இவள் என் மனைவி திரௌபதி என்றான்.
இதைக் கேட்டப்பின் கிர்மீரன் பயங்கரமாக சிரித்தான். நான் பீமனை தேடும் முன்னே அவன் என் கண்முன் நிற்கிறான். பீமனை கொன்று அவனின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டும் என்றான். இதைக்கேட்டு பீமன் பலமாக சிரித்தான். நீ என்னைக் கொன்று என் இரத்தத்தை குடிக்கப் போகிறாயா? எனக் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை பிடுங்கி கிர்மீரனின் தலையில் எரிந்தான். ஆனால் கிர்மீரன் எதுவும் நடக்காதது போல் அப்படியே நின்று கொண்டிருந்தான். அதன் பிறகு தன் பக்கத்தில் இருந்த ஒவ்வொரு மரங்களையும் பிடுங்கி எறிந்தான். கிர்மீரன் அவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தான். அதன் பிறகு பாறைகளை கிர்மீரனின்மேல் எடுத்து வீசினான். கிர்மீரனும் பாறைகளை பீமன் மேல் வீசினான். பீமன் அவற்றை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
கிர்மீரனை அடித்து தரையில் தள்ளினான். தரையோடு தரையாக தேய்த்து இழுத்தான். அதன் பிறகு பீமன், கிர்மீரனின் மேல் அமர்ந்து, அவனது முழங்காலின் மூட்டை கழுத்தில் வைத்து அழுத்தினான். முழங்கால் உடைந்தது. அவனின் கண்கள் வெளியே பிதுங்கி வந்தது. பீமன், உனது சகோதரனை எவ்வாறு கொன்றேன் என்பதை நீயே எமலோகத்திற்கு சென்று தெரிந்துக் கொள் எனக் கூறி அவனது கழுத்தை நெறித்தான். வலியை பொறுக்க முடியாத கிர்மீரன் அவ்விடத்திலேயே மாண்டான் என விதுரர் கூறி முடித்தார். இதைக்கேட்டு திருதிராஷ்டிரனும், துரியோதனனும் நடுநடுங்கி போயினர். ஆனால் சகுனி துரியோதனனிடம், துரியோதனா! நீ இதைக் கேட்டு பயம் கொள்ள தேவையில்லை. அவர்கள் உன்னை பயமுறுத்தி பார்க்கிறார்கள். நீ திடமாக இருக்க வேண்டும் எனக் கூறினான். துரியோதனனுக்கு சகுனியின் பேச்சு ஆறுதலாக இருந்தது.
காம்யக வனத்தில், கிர்மீரனை வதம் செய்த பிறகு பாண்டவர்கள் அவ்வனத்திலேயே குடில் அமைத்து வசிக்க தொடங்கினர். அங்கிருந்த முனிவர்களும் எவ்வித இடையூறும் இன்றி தவத்தை மேற்கொண்டனர். ஒரு நாள் திரௌபதி, மரத்தடியில் ஆழ்ந்த சிந்தனையில் சோகமாக இருந்தாள். இதைக் கண்ட பாண்டவர்கள், அவளிடம் சென்று, திரௌபதி! தனியாக அமர்ந்து என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் எனக் கேட்டனர். திரௌபதி, நமக்கு நடந்த இந்த கொடுமையில் நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்துவிட்டோம். ஒரு வேளை சூதாட்டத்திற்கு துரியோதனன், சகுனி அழைத்த போது, நாம் கிருஷ்ணரை அழைத்திருந்தால் இன்று நமக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது.
நாம் அன்று கிருஷ்ணரை மறந்ததால் இன்று துன்பப்பட்டு கொண்டிருக்கிறோம் என கூறினாள். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஶà¯�ரீ கிருஷ்ணர் ரதத்தில் பாண்டவர்களை நோக்கி வந்தார். கிருஷ்ணர் பாண்டவர்களிடம், உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நான் அறிவேன். உங்களால் என்னையும், என்னால் உங்களையும் நினைக்க முடியாத சூழ்நிலையில் விதி நிறுத்திவிட்டது.
ஆம். என்னால் உங்களை நினைக்க முடியாததற்கு காரணம் சால்மன். சால்மன் என்ற பெயரை கேட்டவுடன் பாண்டவர்கள் சிறிது அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் ராஜசூயயாகத்தில் கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்யக் கூடாது என தடுத்த சிசுபாலனின் சகோதரன் தான் சால்மன்.
தன் சகோதரன் கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டத்தை அறிந்த சால்மன் கிருஷ்ணரை பழிவாங்க துவாரகைக்கு படையெடுத்து வந்தான். ஆனால் அச்சமயம் கிருஷ்ணர் ஆனர்த்தம் என்னும் இடத்தில் இருந்தார். கிருஷ்ணரை தேடி வந்த அவர்கள், கிருஷ்ணர் இல்லாததை அறிந்து மிகவும் கோபங்கொண்டு துவாரகையை நாசம் செய்தனர். இதனால் கிருஷ்ணரின் புதல்வர்களான சாம்பன், பிரத்யும்னன் இருவரும் சால்வனுடன் போர் புரியத் தயாராயினர். சாம்பன், பிரத்யும்னன் இருவருமே சிறு பாலகர்கள். ஆனால் சால்மனை துணிவுடன் எதிர்த்து போரிட்டனர். சால்மன், பாலகர்கள் என்று சிறிதும் கூட பார்க்காமல் அவர்களை இடைவிடாது துன்புறுத்தினான். இச்செய்தியை அறிந்து கிருஷ்ணர் ஆனர்த்தம் என்னும் இடத்தில் இருந்து விரைந்து துவாரகைக்கு வந்தார்.
கிருஷ்ணருக்கும், சால்மனுக்கும் போர் நடைப்பெற்றது. சால்மன் தன் மாயஜால வித்தையை கிருஷ்ணரிடம் காண்பித்தான். சால்மனின் மாயஜாலத்தை அறிந்த கிருஷ்ணர் சக்கராயுதத்தை சால்மன் மீது ஏவினார். சக்கராயுதத்தை கண்டு பயந்த சால்மன் பயந்து ஓடினான். சக்கராயுதம் சால்மனை விடாமல் துரத்தி அவன் தலையை உடலிலிருந்து பிரித்துவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்தது. இதைக்கண்டு துவாரகை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணர், சால்மனுடன் ஏற்பட்ட யுத்தத்தை கூறி முடித்தார். இந்த நிலையில் நீங்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளீர்கள். விதி நம்மை நினைக்கவிடாமல் செய்து விட்டது எனக் கூறினார்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக