Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

துரியோதனனை காப்பாற்றும் பாண்டவர்கள்...!

▸சித்திரசேனன், தன் படைகளை கொண்டு கர்ணனை எதிர்த்துப் போரிட தொடங்கினான். கர்ணனை காட்டிலும் கந்தர்வர்கள் வேகமாக தாக்கினர். இதனால் கர்ணனின் தேர் உடைந்தது. கர்ணனன் வைத்திருந்த வில்லையும் அவர்கள் உடைத்தனர். 

கந்தர்வர்களின் பலம் அதிகமாகிக் கொண்டேப் போனது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கர்ணன் அவ்விடத்தை விட்டுச் சென்றான். கந்தர்வர்கள் பலம் பெற்றிருப்பதையும், கர்ணன் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றதையும் துரியோதனன் கவனித்தான். 

இதனால் துரியோதனனின் மனதில் பயம் குடிக்கொண்டது. உடனே துரியோதனன் தானும் அவ்விடத்தை விட்டு செல்வது தான் சிறந்தது என நினைத்து அங்கிருந்து செல்ல முற்பட்டான். அப்பொழுது சித்திரசேனன் தன் மாய சக்தியால் துரியோதனனை சிறைப்பிடித்தார்.

துரியோதனனுடன் வந்த அனைவரையும் சித்திரசேனன் சிறைப்பிடித்தார். கந்தர்வர்கள் அனைவரையும் சிறைப்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றனர். துரியோதனனின் படைகளில் இருந்து தப்பிய சில வீரர்கள் பாண்டவர்களிடம் ஓடிச் சென்றனர். 

பாண்டவர்கள், துரியோதனனின் படைவீரர்களை கண்டு திகைத்து நின்றனர். படை வீரர்கள், சகுனி யோசனையால், துரியோதனன் படைகளை அழைத்து கொண்டு இங்கு வந்தார். துரியோதனனுக்கு முன் வந்த சகுனி அவர்கள், குளக்கரையில் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். 

இதனால் இரு தரப்பினருக்கும் யுத்தம் ஏற்பட்டது. யுத்தத்தில் சித்திரசேனன் தன் மாய சக்தியை கொண்டு கௌரவர்கள் அனைவரையும் சிறைப்பிடித்து செல்கின்றனர். தாங்கள் தான் துரியோதனனையும், கௌரவர்களையும் காப்பாற்ற வேண்டும் என வேண்டினர்.

அப்பொழுது பீமன், உங்கள் அரசன் துரியோதனனுக்கு சரியான தண்டனை தான் கிடைத்துள்ளது. துரியோதனன், எங்களை நாட்டைவிட்டு அனுப்பியபோது நீங்கள் நின்று வேடிக்கைதான் பார்த்து கொண்டு இருந்தீர்கள் அல்லவா? இப்பொழுது எதற்காக உதவியை தேடி இங்கு வந்துள்ளீர்கள். எங்களால் காப்பாற்ற முடியாது என கடுமையாக கூறினான். 

இதைக் கேட்ட தருமர், பீமா! நீ இவ்வாறு பேசுதல் கூடாது. கௌரவர்களும் நமக்கு சகோதரர்கள் ஆகிறார்கள். இப்பொழுது வேண்டுமானால் அவர்களிடம் நமக்கு பகை இருக்கலாம். மனிதகுலம் என்பது ஜாதி, இனம், மொழி இவற்றால் ஒன்று சேர்கிறது. நமக்கு கௌரவர்களிடம் மட்டுமே விரோதம் உள்ளது. அவர்களின் குலம் நம் குலம் ஆகும். நம் குலத்திற்கு தீங்கு ஏற்படும்போது அதை நாம் தடுக்க வேண்டும் அல்லவா?

கந்தர்வர்கள் சிறைப்பிடித்துள்ளது நம் குலத்தை சேர்ந்தவர்கள். நம் குலத்திற்கு இழுக்கு நேரும்போது அதை நாம் தடுக்க வேண்டும். அதனால் உடனே சென்று நாம் அவர்களை காப்பாற்ற வேண்டும் என உறுதியாக கூறினார். தருமரின் பேச்சை மீற முடியாத சகோதரர்கள், கந்தர்வர்களை நோக்கிச் சென்றார்கள். பாண்டவர்கள், கந்தர்வர்களை தடுத்து நிறுத்தினார்கள். தருமர் சித்திரசேனனை பார்த்து, நீங்கள் சிறைப்பிடித்து கொண்டு செல்பவர்கள் எங்கள் குலத்தை சேர்ந்த சகோதரர்கள் என்றான். சித்திரசேனன், நீங்கள் பாண்டவர்கள் தானே? நீங்கள் இங்கு தங்கி உள்ளீர்கள் என்பது தெரியும். உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். துரியோதனன், உங்களின் சகோதரன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பௌர்ணமி நாளான இன்று நாங்கள் குளக்கரையில் நீராடிக் கொண்டிருந்தோம். இவர்கள் அங்கு வந்து எங்களுக்கு இடையூறு செய்தார்கள். கர்ணனை விட்டு எங்களை விரட்டக் கூறினார்கள். அதனால் தான் நாங்களும் எங்கள் பலத்தை அவர்களுக்கு காண்பித்தோம். இவர்கள் உங்களுக்கும் கெடுதல் செய்துள்ளார்கள். அவ்வாறு இருக்கையில் நீங்கள் ஏன் இவர்களை காப்பாற்ற நினைக்கின்றீர்கள் என்றார். தருமர், எவ்வளவு துன்பங்களை இவர்கள் எங்களுக்கு கொடுத்திருந்தாலும் இவர்கள் எங்கள் சகோதரர்கள். அதனால் நீங்கள் இவர்களை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள். ஆனால் சித்திரசேனன், இவர்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது என உறுதியாக கூறினார். தருமர், நீங்கள் விடுவிக்கவில்லையென்றால் யுத்தம் செய்தாவது இவர்களை விடுவித்து கொண்டு செல்வோம் எனக் கூறினான்.

இதைக்கேட்டு துரியோதனன், தருமன் நிச்சயம் தங்களை காப்பாற்றுவான் என நம்பினான். சித்தரசேனன், அப்படியென்றால் எங்களுடன் யுத்தம் புரிந்து கௌரவர்களை காப்பாற்றிக் கொள் என்றார். அதன் பிறகு தருமர், அர்ஜூனனுக்கும், பீமனுக்கும் யுத்தத்தை தொடங்குமாறு சைகை காண்பித்தார். அர்ஜூனன், சித்திரசேனன் தேவலோகத்தில் தனக்கு கலைகளை கற்றுக் கொடுத்தவர் என்பதை அறிந்தான். ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. அர்ஜூனன் தன் வில்லைக் கொண்டு பல கணைகளை ஏவினான். கந்தர்வர்கள் அர்ஜூனனையும், பீமனையும் எதிர்த்து போரிட்டனர். பீமன், தன் பலத்தால் பல கந்தர்வர்களை துவம்சம் செய்தான். வெகு நேரம் இந்த யுத்தம் நடைப்பெற்றது. அர்ஜூனனின் வில்லுக்கு பல கந்தர்வர்கள் மடிந்தனர். சித்திரசேனனின் அணிவகுப்பால் கந்தர்வர்கள் பலர் வந்தனர். அர்ஜூனனின் வில் திறமையை கண்டு கந்தர்வர்கள் வியந்தனர்.

கந்தர்வர்களுக்கு துரியோதனன் மேல் இருந்த கோபம், அர்ஜூனன் மற்றும் பீமன் மேல் இல்லாமல் போனது. அர்ஜூனன் மற்றும் பீமனின் தாக்குதலை தாங்கி பிடிக்காமல் கந்தர்வர்கள் அவஸ்த்தை அடைந்தனர். கந்தர்வர்கள் படை வெகுவேகமாக பின்னடைந்து கொண்டே வந்தது. இதைக் கண்ட தருமர், இதற்கு மேல் யுத்தம் புரிந்தால் விபரீதமாக ஏதேனும் ஏற்படக் கூடும் என நினைத்து அர்ஜுனனுக்கும், பீமனுக்கும் போரை நிறுத்துமாறு சைகை காண்பித்தான். சித்திரசேனன் தன் தோல்வியை ஏற்றுக் கொண்டான். அர்ஜூனனின் வில் திறமையை பாராட்டினான். அதன் பிறகு சிறைபிடித்த கௌரவர்களை விடுவித்து அங்கிருந்துச் சென்றனர். தருமர், துரியோதனா! நீ அஸ்தினாபுரம் சென்று நல்லாட்சி புரிவாயாக என கூறினான். இது துரியோதனனுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துவது போல் இருந்தது. இதற்கு காரணம், பாண்டவர்கள் உயிர்பிச்சை போடுவது போல் இருந்தது என எண்ணினான். இதை கர்ணனிடம் சொல்லி மிகவும் வருத்தம் கொண்டான்.

கர்ணன், துரியோதனனுக்கு ஆறுதல் கூறினான். பிறகு அங்கிருந்து கௌரவர்கள் அரண்மனைக்கு சென்றனர். பீஷ்மருக்கு நடந்தவை அனைத்தும் தெரிவிக்கப்பட்டது. பீஷ்மர், துரியோதனனிடம், துரியோதனா! இப்பொழுதாவது தெரிந்துக் கொள். உனக்கு ஆபத்தில் உதவியவர்கள் பாண்டவர்கள். அதனால் அவர்களை வெறுத்து ஒதுக்காதே எனக் கூறினார். பீஷ்மரின் சொற்களை துரியோதனன் தன் செவிகளில் வாங்கிக் கொள்ளாமல் சென்றுவிட்டான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக