Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 166


ஆயுதத்தை பெறுதல் :

விஸ்வகர்மாவும் தேவர்கள் கொடுத்த ததீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு மிகவும் பலம் வாய்ந்த ஒரு புதிய வஜ்ஜிராயுதத்தை உருவாக்கினார். புதிய மற்றும் அதிக சக்தியுடன் கூடிய மிகவும் வலிமை வாய்ந்த வஜ்ஜிராயுதத்தை தனது கரங்களில் ஏந்திய இந்திரதேவன் நால்வகை சேனைகளுடன் தன்னுடைய புதிய வியூகத்தை அமைத்து அசுரனை எதிர்க்க தயார் நிலையில் இருந்து அசுரனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

போர் தொடங்குதல் :

முன்னரே தோல்வியுற்ற இந்திரதேவனை இம்முறையும் எளிமையாக வென்றுவிடலாம் என்று எண்ணி, வந்து கொண்டிருந்த அசுரனுக்கு நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் அறியாவண்ணம் இருந்தன. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மிகவும் ஆக்ரோஷமாக போரானது துவங்கியது. தேவேந்திரன் புதிய ஆயுதத்தின் சக்தியை கொண்டு அனைத்து அசுரர்களையும் வதம் செய்யத் தொடங்கினார். ஒரு நிலையில் விருத்திராசுரனையும் அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது தாக்கத் துவங்கியது.

அசுரன் தப்பி ஓடுதல் :

போரின்போது தேவேந்திரனிடமிருந்து வந்த மிகவும் ஒளி வாய்ந்த சக்தியினை கண்ட அசுரனோ ஒரு நிமிட நேரத்திற்குள் மிகவும் பயமடையத் தொடங்கினான். காரணம், தன்னை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும், தன்னை கொல்ல எந்த ஆயுதமும் இல்லை என்றும், மிகவும் ஆணவத்தில் இருந்த அசுரனுக்கு தேவேந்திரனிடம் இருக்கும் ஆயுதத்தின் சக்தியைக் கண்டதும் இனி தன்னுடைய அழிவு என்பது உறுதியாகிவிடும் என்ற பயத்தில் தேவர்களின் கண்களுக்கு தென்படாமல் விருத்திராசுரன் அசுரர்கள் இருக்கக்கூடிய கடலுக்கு அடியில் ஓடிச் சென்று மறைந்து கொண்டான்.

அசுரனை பின்தொடர்ந்து சென்ற இந்திரன், கடல் முழுவதும் தேடியும் அசுரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது சக்திகளை பலவாறு முயற்சித்தும் அசுரன் மறைந்துள்ள இடத்தை இந்திரதேவரால் கண்டறிய முடியவில்லை. பின்பு, அசுரன் இருக்குமிடத்தை அறிய பிரம்மதேவரை நோக்கி சென்று அவரிடம் யாசிக்கத் தொடங்கினான் இந்திரன்.

பிரம்ம தேவரை காணுதல் :

பிரம்ம தேவர் அசுரன் இருக்கும் இடத்தை அறிய ஒரு யோசனையைக் கூறினார். அதாவது, பொதிகை மலையில் இருக்கக்கூடிய அகத்திய முனிவரைக் கண்டு அவரிடம் உன்னுடைய பிரச்சனைகளை தெரிவிப்பாயாக... அவரால் மட்டும்தான் உனக்கு தீர்வு அளிக்க இயலும் என்று கூறினார். பிரம்ம தேவரின் வார்த்தைகளைக் கேட்ட தேவேந்திரன் பிரம்ம தேவரை வணங்கிவிட்டு மிகவும் மனமகிழ்ந்து அகத்திய முனிவரைக் காண பொதிகை மலையை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்.

அகத்திய முனிவரை காணுதல் :

பொதிகை மலையை அடைந்த இந்திரதேவன் பொதிகை மலையில் வீற்றிருந்த அகத்திய முனிவரைக் கண்டு அவரை வணங்கினார். தேவர்களின் அதிபதியான தேவேந்திரன் தன்னை காண வந்திருப்பது என்றால் காரியம் இல்லாமல் இருக்காது என்று தேவேந்திரனின் நோக்கத்தை அறிய அகத்திய முனிவர் வினவினார்.

தேவர்களின் அதிபதியான தேவேந்திரன் நிகழ்ந்தவற்றை முழுவதையும் அகத்திய முனிவரிடம் எடுத்துரைத்தார். அதாவது விருத்திராசுரனுக்கும், தனக்கும் நிகழ்ந்த போரில் விருத்திராசுரன் கடலுக்கு அடியில் சென்று மறைந்திருப்பதாகவும், கடல் முழுவதும் தேடியும் அசுரனை கண்டறிய முடியவில்லை என்றும், அதற்கு தாங்கள்தான் அசுரனை கண்டறிய உதவிபுரிய வேண்டும் என்றும் கூறி அவரை வேண்டி நின்றார்.

கடலை வற்றச் செய்தல் :

தேவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்க விருப்பம் கொண்ட மாமுனியான அகத்திய முனிவரும் தேவேந்திரனை நோக்கி தேவேந்திரா... மனம் தளர வேண்டாம் என்றும், தேவர்களுக்கு இன்னல் கொடுத்து வந்த அசுரனை கூடிய விரைவில் நீ வதம் புரிவாயாக என்றும் கூறினார். பின்பு, அசுரன் மறைந்திருந்த கடல் பகுதிக்கு அகத்திய முனிவரும், தேவேந்திரனும் சென்றனர். பின்பு, கடலை அடைந்த அகத்திய முனிவர் கடல் நீர் முழுவதையும் உளுந்து அளவில் இருக்கக்கூடிய சிறு வடிவில் உள்ளடக்கி அதை தனது உள்ளங்கையால் ஏந்தி நின்றார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக